பட்டாசு வெடிச்சத்தத்தில் இருந்து செல்லப்பிராணிகளைப் பாதுகாப்பது எப்படி?

பட்டாசு வெடிச்சத்தத்தில் இருந்து செல்லப்பிராணிகளைப் பாதுகாப்பது எப்படி?

தீபாவளி பண்டிகை என்றாலே கொண்டாட்டம்தான். ஜாதி, மதம் என அனைத்தையும் கடந்து அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை தீபாவளி. தீபாவளி என்றால் நம் நினைவுக்கு முதலில் வருவது பட்டாசுகள்தான். பட்டாசுகள் இல்லாத தீபாவளி எப்படி இருக்கும் என்று நாம் நினைத்துப் பார்த்தது உண்டா? அது சாத்தியமா?

அது முழுவதுமாக சாத்தியமில்லாததால்தான் அரசு நேரக்கட்டுப்பாடு விதிக்கிறது. ஆனால், நாம் அதைக் கடைபிடிக்காமல் நாள் முழுவதும் பட்டாசுகளை வெடிக்கிறோம். இப்படிப் பட்டாசுகளை வெடிப்பதினால் எத்தனையோ ஜீவராசிகள் பாதிக்கப்படுகின்றன.

மனிதர்களாகிய நம் சந்தோஷத்திற்காக மற்ற உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கிறோம். இன்னும் சில கிராமங்களில் பட்டாசுகளுக்குத் தடை போட்டு கட்டுப்பாடோடு வாழ்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இது நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக அனைவரிடமும் போய் சேர வேண்டும். சந்தோஷம், கொண்டாட்டம் என வீட்டோடு இருந்துகொள்ள வேண்டும். நம் சந்தோஷத்தால் யாரும் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதில் நாம் ஒவ்வொருவரும் கவனமாக இருந்தாலே போதும்.

பட்டாசு வெடிப்பதால் மாசு பிரச்னை, சுகாதார சீர்கேடு என்றெல்லாம் ஒருசிலர் கூறுவது உண்டு. நாம் நம்மைப் பற்றி மட்டுமே நினைக்கிறோமே, வீட்டில், தெருவில் வாழும் செல்லப்பிராணிகள், விலங்குகளின் நிலையை நினைத்துப் பார்த்திருக்கிறோமா? நம் காதுகள் கேட்கும் வெடிச்சத்தமும், செல்லப்பிராணிகள் கேட்கும் சத்தத்தின் சத்த அளவும் மிகவும் மாறுபட்டவை. தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க முடியாது. ஆனால், இதனால் பாதிக்கப்படும் செல்லப்பிராணிகளை எப்படி இதில் இருந்து பாதுகாக்கலாம் என்று பிரபல கால்நடை அறுவை சிகிச்சை மருத்துவர் பிரியதர்ஷினி கோவிந்த் கூறும் ஆலோசனைகளைத் தெரிந்து கொள்ளலாம்.

“பொதுவாகவே நாய், பூனைகளுக்கு அதிக சத்தம் என்பது ஆகவே ஆகாது. அதிலும் குறிப்பாக, இதுபோன்ற வெடி சத்தங்கள் அதன் காதில் ஒரு பெரிய வைப்ரேஷனை உண்டுபண்ணும். இதனால் பெரியளவு அவை பாதிக்கப்படும். செல்லப்பிராணிகள் இதிலிருந்து தப்பித்துக்கொள்ள எங்காவது தெறித்து ஓடும். இல்லையேல் அதிக சத்தத்தால் பாதிக்கப்பட்டு எந்த ஒரு செயலிலும் ஈடுபாடின்றி மறைவாக அச்சத்தில் இருக்கும். இதனால் செல்லப்பிராணிகளால் சாப்பிடக்கூட முடியாது. இந்தத் தாக்கம் நான்கைந்து நாட்களுக்கு இருக்கும். இதுபோன்று நிறைய பிரச்னைகளோடு ஏராளமானோர் மருத்துவமனை வருகிறார்கள்” என்று மருத்துவர் பிரியா கூறுகிறார்.

இதற்கு வழி என்ன?

1. வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்த்தால் அவற்றை நம் பிள்ளையாக நினைத்து வெடி வெடிக்காமல் இருப்பதே சிறந்ததாகும். மனிதர்களால் எளிதில் அழுதுவிட முடியும். இதனால் என்ன பிரச்னை என்பதைக் கண்டுபிடித்து விடலாம். ஆனால், விலங்குகள் அப்படி இல்லை. அமைதியாகவே இருந்து மன ரீதியாக மிகவும் பாதிக்கப்படும்.

2. அப்படிப் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க முடியவில்லை, அக்கம்பத்தினர் வெடிப்பார்கள் என்ன செய்வதென்று கேட்டால் செல்லப்பிராணிகளை வீட்டிற்குள் வைத்து பூட்டி விட்டு டிவியை சத்தமாக வைத்து அதை ஒரு பெட்ஷீட் போர்த்திப் படுக்க வைக்கவும். இதனால் அதற்கு ஒரு சௌகரியம் கிடைப்பதால் அந்த சத்தத்தை அது கண்டுகொள்ளாது.

3. தீபாவளிக்கு நான்கு நாட்களுக்கு முன்னரே செல்லப்பிராணிகளுக்கு கால்நடை மருத்துவரின் ஆலோசனைபடி, அவற்றின் உடல் எடை, வயதுக்கு ஏற்றார்போல் மருந்து கொடுக்கலாம். இதன் மூலம் பட்டாசு சத்தத்தினால் விலங்குளுக்கு ஏற்படும் பிரச்னைகளை குறைக்கலாமே தவிர, இதுவே தீர்வாகாது.

4. இது எதுவும் முடியவில்லை என்றாலும், உங்கள் செல்லப்பிராணிகளுடன் இருந்தாலே போதும். அதனை கட்டியணைத்து பேசி கொண்டிருந்தாலே, நம்முடன் ஒருவர் இருக்கிறார் என்ற தைரியத்தில் அவை அச்சம் கொள்ளாமல் தைரியமாக இருக்கும்.

ஆனால், இவை எதுவுமே தெரு நாய்களுக்கு ஒத்துவராது. தெரு நாய்கள் அனைத்துமே தீபாவளி முடியும் வரை ஒரு அச்சத்தோடே தலை தெறிக்க ஓடிக்கொண்டிருக்கும். இதனை கருத்தில் கொண்டு நாம் பட்டாசு வெடிக்கும் நேரத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
பட்டாசு வெடிக்கையில் விழிகளைப் பாதுகாப்பதில் விழிப்புடன் இருங்கள்!
பட்டாசு வெடிச்சத்தத்தில் இருந்து செல்லப்பிராணிகளைப் பாதுகாப்பது எப்படி?

இதை தவிர, செல்லப்பிராணிகளுக்கும் ஆஸ்துமா பிரச்னைகள் வரும். பிறப்பின்போதே சுவாசப் பிரச்னைகளுடன் ஏராளமான நாய்கள், பூனைகள் பிறக்கின்றன. இதனால் பட்டாசு வாசனை செல்லப்பிராணிகளுக்கு ஒத்துவராது. இதனால் வீட்டிற்கு வெளியே அவற்றை அழைத்து செல்லாமல் இருப்பதே சிறந்ததாகும் என்கிறார் இவர்.

மேலும், செல்லப்பிராணிகள் தவிர பூச்சிகள், பறவைகள் கூட இந்தப் பட்டாசு சத்தத்தாலும், புகையாலும் பாதிக்கப்படுகின்றன. சில பூச்சிகள் இந்த நச்சு புகையால் உடனே உயிரிழந்துவிடும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. தீபாவளி முடிந்த மறுநாள் எத்தனையோ காக்கா, குருவிகள் இறந்துகிடப்பதையும் நம்மால் பார்க்க முடிகின்றது. அதுவும் ஒரு உயிர்தான். இதனால் மற்ற ஜீவராசிகளுக்கு தொல்லை கொடுக்காமல், உங்கள் சந்தோஷமும் கெடாத அளவுக்கு தீபாவளியை கொண்டாடி மகிழ்வோம்!

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com