பட்டாசு வெடிக்கையில் விழிகளைப் பாதுகாப்பதில் விழிப்புடன் இருங்கள்!

Let's burst the firecrackers safely
Let's burst the firecrackers safely

து தீபாவளி நேரம். இனிப்புகளுடன் அன்பானவர்களோடு வாழ்க்கையைக் கொண்டாடும் நேரம். தீபங்களின் ஒளி என்பதைத்தான் தீபாவளி என்கிறோம். தீபங்களை ஏற்றுவதுடன் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடுவது இந்தப் பண்டிகையின் வழக்கம். ஒருபக்கம் மகிழ்ச்சி இருந்தாலும் பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பட்டாசுகள் வெடிக்கும்போது தீப்பொறிகள் கண்களில் பட்டு பார்வை பறிபோகும் அபாயமும் இருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காயங்களில் பாதி கண் பாதிப்புடன் தொடர்புடையது என்பது உங்களுக்குத் தெரியுமா? இப்படி பட்டாசுகளை கையாளத் தெரியாததால் அல்லது பாதுகாப்பு இல்லாத பட்டாசுகளை வெடிப்பதால் ஆயிரக்கணக்கானவர்கள் கண்கள் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்கும்போது உங்கள் கண்களையும் பார்வையையும் எவ்வாறு பாதுகாப்பது, விபத்துக்களை தவிர்ப்பது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். உங்களது கண்களைப் பாதுகாக்கவும் அவசரமாக மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர்க்கவும் நீங்கள் செய்யவேண்டியது இதுதான்:

பட்டாசு வெடிப்பதில் இருந்து விலகி இருங்கள். பட்டாசுகளை கொளுத்தும்போது உங்கள் கைகளை மட்டும் நீட்டி முகத்தை தொலைவில் வைத்துக்கொள்ளுங்கள். பட்டாசுகளை பற்றவைத்தபின் அது வெடிக்கும் இடத்திலிருந்து தள்ளி வெளியே வந்துவிடுங்கள். இப்படிச் செய்வதன் மூலம் பட்டாசு துகள்கள் அல்லது தீப்பொறிகள் உங்கள் கண்களில் படாமல் தவிர்க்க முடியும். பட்டாசு இருக்குமிடத்தில் குழந்தைகளை நிற்க வைக்காதீர்கள். அவர்களை எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருங்கள்.

வெடி வெடிக்கும்போது பாதுகாப்பான கண்ணாடிகளைப் பயன்படுத்துங்கள். உங்களுக்கு ஏற்கெனவே கண்களில் ஏதாவது பிரச்னை இருந்தால், பட்டாசு வெடிக்கும்போது கண்ணில் பாதுகாப்புக்காக கண்ணாடி அணிந்து கொள்வது நல்லது. இதன் மூலம் பட்டாசு துகள்கள் பறந்து வந்து கண்ணில் படுவதைத் தடுக்க முடியும். மேலும், அதிக வெப்பமும் தாக்காமல் இருக்கும்.

கான்டாக்ட் லென்சுகளை தவிர்க்கவும்: பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் புகை கண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் என்பதால் கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். விளக்குகளை ஏற்றும்போதும், பட்டாசுகளை வெடிக்கும்போது கான்டாக்ட் லென்சுகளுக்கு பதிலாக கண் கண்ணாடிகளை அணிவதே நல்லது.

கண் எரிச்சல் ஏற்பட்டால், பட்டாசு துகள்கள் கண்ணில் பட்டால் அல்லது புகையால் கண்களில் எரிச்சல் ஏற்பட்டால் கண்களைத் தேய்க்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கண் இமைக்குள் ஏதேனும் பட்டாசு துகள்கள் இருந்தால் விரல்களால் தேய்க்கும்போது காயங்கள் அல்லது கீறல்கள் ஏற்படலாம். இதனால் கண்களுக்கு சேதம் ஏற்படும். எனவே, அதுபோன்ற சமயத்தில் கண்களில் தண்ணீரைத் தெளித்தால் அவை வெளியேறிவிடும்.

தொடர்ந்து எரிச்சல், வலி அல்லது இரத்தக் கசிவு இருந்தால் மருத்துவரை அணுகவும். கண் நரம்பு பாதிக்கப்படுவதை தடுக்க உடனடியாக 24 மணிநேர கண் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ நிபுணரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

தீபாவளி நேரத்தில் கண்களில் காயம் ஏற்படாமல் தடுக்க சில அடிப்படை விதிகள் உள்ளன. அவற்றை பின்பற்றினாலே போதுமானது.

நீங்கள் செய்ய வேண்டியவை:

குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்கும்போது பெரியவர்கள் பக்கத்திலிருந்து கண்காணிக்க வேண்டும்.

திறந்தவெளியில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

உரிமம் பெற்ற டீலர்களிடமிருந்து அங்கீகரிக்கப்பட்ட பிராண்டு பட்டாசுகளை மட்டுமே வாங்கி உபயோகிக்க வேண்டும்.

பட்டாசுகளை வெடிக்கும்போது அருகில் தீயணைப்பான் கருவிகளை வைத்திருங்கள். குறைந்தபட்சம் ஒருவாளி தண்ணீர் மற்றும் மணல் ஆகியவற்றை தயாராக வைத்திருங்கள்.

பட்டாசுகளை பற்றவைக்க நீண்ட ஊதுவத்திகளையே பயன்படுத்தவும்.

இதையும் படியுங்கள்:
தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் ஏற்படும் ஆறு முக்கியமான பலன்கள்!
Let's burst the firecrackers safely

நீங்கள் செய்யக்கூடாதவை:

தரமில்லாத, பிராண்டட் இல்லாத பட்டாசுகளை வாங்க வேண்டாம்.

தீக்காயம் ஏற்பட்டால், அதற்கு நீங்களே மருத்துவம் பார்க்காமல் டாக்டரிடம் செல்லுங்கள்.

பட்டாசு வெடிக்கும் இடத்தில் குழந்தைகளை அனுமதிக்காதீர்கள்.

வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் கொளுத்த முயற்சிக்காதீர்கள்.

பட்டாசுகளை கையில் வைத்து வெடிக்காதீர்கள். மேலும், பட்டாசுகளை கொளுத்தி மற்றவர்களுக்கு எதிரே எறிய முற்படாதீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com