மனித வாழ்வில் மகிழ்ச்சியும் துக்கமும் மாறி மாறி வருவதாகும். அதுவும் துக்கங்களில் மிகவும் முக்கியமான பகுதி நமக்கு மிகவும் நெருக்கமாக நினைத்தவர்களால் ஏற்படும் மனவலி. ஒருவரின் தவறான செயல், வார்த்தை அல்லது செயல்பாடு நம்மை ஆழமாக பாதித்து மனதில் அழிக்க முடியாத வடுக்களை ஏற்படுத்தும். இந்த வலியை எதிர்கொண்டு, அவற்றிலிருந்து மீள்வது எளிதான காரியமல்ல. ஆனால், சரியான வழிமுறைகளைப் பின்பற்றி நிச்சயமாக ஒருவர் நமக்கு ஏற்படுத்திய காயத்திலிருந்து நாம் மீண்டு வர முடியும்.
வழிமுறைகள்:
ஒருவரால் ஏற்பட்ட மன வலியை மறப்பதோ அல்லது புறக்கணிப்பதோ தீர்வல்ல. முதலில் தங்களுக்கு ஏற்பட்ட வலியை ஏற்றுக்கொள்ள வேண்டும். இது எளிதானது இல்லை என்றாலும், வலியை ஏற்றுக்கொள்வதன் மூலம் அதை எதிர்கொள்ளும் தைரியம் கிடைக்கும்.
மனவலியை உங்களுக்குள் புதைத்து வைக்காமல் நம்பகமான நபர், குடும்ப உறுப்பினர் அல்லது ஆலோசகரிடம் உங்கள் உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்ளுங்கள். அழுகை, கோபம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதன் மூலம் மனம் இலகுவாகும்.
மனவலியின்போது உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும் போக்கு இருக்கும். ஆனால், இது மன அழுத்தத்தை அதிகரிக்கும். நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது உங்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தும்.
புதிய பொழுதுபோக்குகள், விளையாட்டுகள், கிரியேட்டிவிட்டி சார்ந்த விஷயங்களில் ஈடுபடுவதன் மூலம் மனதை வேறு திசையில் திருப்ப முடியும். இது மன அழுத்தத்தைக் குறைத்து மகிழ்ச்சியைத் தரும்.
சரியான உணவு, போதுமான தூக்கம், உடற்பயிற்சி ஆகியவை மன ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றி மன அழுத்தத்தைக் குறைத்து மன உறுதியை அதிகரிக்கலாம்.
கடந்த காலத்தை நினைத்து வருந்திக்கொண்டிருப்பது உங்களது எதிர்காலத்தை அதிகமாக பாதிக்கும். எனவே, கடந்த காலத்தை விட்டுவிட்டு எதிர்காலத்தை நோக்கி செல்ல வேண்டும். புதிய இலக்குகளை நிர்ணயித்து அதை நோக்கி செயல்படுவதன் மூலம் மனம் புத்துணர்ச்சி அடையும்.
ஒருவரால் ஏற்பட்ட மனவலியில் இருந்து மீள்வது எளிதான காரியம் அல்ல. ஆனால், விடாமுயற்சியுடன் மேலே குறிப்பிட்ட வழிமுறைகளைப் பின்பற்றி மீண்டும் உங்கள் வாழ்க்கையை நோக்கி நீங்கள் முன்னேற முடியும். நீங்கள் தற்போது இருக்கும் நிலையில் நீங்கள் மட்டுமே இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் குடும்பம், நண்பர்கள், நெருக்கமானவர்கள் எப்போதும் உங்களுக்கு உதவ தயாராக இருப்பார்கள். எனவே, உங்களை காயப்படுத்திய ஒரு நபருக்காக உங்களுக்கு கிடைத்த இந்த அற்புதமான வாழ்க்கையை இழந்து விடாதீர்கள். இந்த ஏமாற்றத்தை உங்களுக்குக் கிடைத்த வாய்ப்பாக நினைத்து, உங்களுக்குப் பிடித்தது போல வாழ்க்கையை வாழத் தொடங்குங்கள்.