

நமது வீடுகளில் உள்ள சமையலறை மற்றும் குளியலறை குழாய்களில் பல மாதங்களாக தண்ணீர் சீராக வராமல் நாலாபுறமும் சிதறி அடிப்பதை நாம் பார்த்திருப்போம். பல நேரங்களில் தண்ணீர் மிகவும் மெதுவாக வரும் அல்லது குழாயின் நுனியில் வெள்ளை நிறத்தில் உப்புக்கறைகள் படிந்து பார்ப்பதற்கே மிகவும் அசிங்கமாக காட்சியளிக்கும்.
இதற்கு முக்கிய காரணம் நாம் பயன்படுத்தும் கடின நீரில் உள்ள தாதுக்கள், சோப்பு துகள்கள் மற்றும் கண்ணுக்கு தெரியாத பாக்டீரியாக்கள் குழாயின் முகப்பில் படிவதுதான். இதை சரிசெய்ய விலை உயர்ந்த ரசாயனங்களை தேடி கடைகளுக்கு ஓட வேண்டிய அவசியம் இல்லை. நமது சமையலறையில் இருக்கும் சாதாரண வெள்ளை வினிகர் ஒன்றை வைத்தே இந்த பெரிய சிக்கலை மிக எளிதாக சரிசெய்துவிடலாம்.
வினிகர் செய்யும் அதிசயம்!
வினிகரில் உள்ள இயற்கையான அமிலத்தன்மை, குழாய்களில் பல மாதங்களாக படிந்துள்ள கடினமான உப்புக்கறைகளை மிக சுலபமாக கரைத்துவிடும் என அவர் ஆணித்தரமாக கூறுகிறார். குழாய்களில் இருந்து வரும் ஒருவிதமான துர்நாற்றத்தைப் போக்கவும் இது பெரிதும் உதவுகிறது.
சுத்தம் செய்யும் எளிய முறைகள்!
குழாய்களை எந்த சிரமமும் இன்றி சுத்தம் செய்ய மிகவும் எளிமையான இரண்டு வழிகள் உள்ளன. முதல் முறையில், ஒரு சிறிய பிளாஸ்டிக் கவரில் வினிகரை பாதி அளவு நிரப்பிக்கொள்ளுங்கள். பின்னர் அதனை குழாயின் முகப்பில் நன்றாக மூழ்கும் படி வைத்து ஒரு ரப்பர் பேண்ட் கொண்டு இறுக்கமாக கட்டிவிட வேண்டும்.
உப்புக்கறையின் தன்மையை பொறுத்து இதனை சுமார் அரை மணி நேரம் முதல் அதிகபட்சம் பன்னிரண்டு மணி நேரங்கள் வரை அப்படியே ஊறவிடலாம். அதன்பிறகு கவரை அகற்றிவிட்டு, ஒரு பழைய டூத்பிரஷ் கொண்டு லேசாக தேய்த்து கழுவினால் குழாய் பளபளப்பாக மாறிவிடும். இறுதியில் ஒரு மைக்ரோஃபைபர் துணியால் ஈரம் இல்லாமல் துடைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்ததாக, குழாயின் நுனியில் உள்ள சிறிய வலை போன்ற அமைப்பை தனியாக கழற்றி எடுக்க வேண்டும். அதனை கழற்றும்போது குழாயில் கீறல்கள் விழாமல் இருக்க ஒரு மென்மையான துணியை வைத்து சுருட்டி கழற்றுவது மிகவும் பாதுகாப்பானது. கழற்றிய அந்த சிறிய பாகத்தை ஒரு கோப்பையில் உள்ள முழுமையான வினிகரில் முக்கால் மணி நேரம் வரை நன்றாக ஊற வைக்க வேண்டும்.
அதன்பின் ஒரு சிறிய டூத்பிக் அல்லது பிரஷ் கொண்டு அதிலுள்ள மிகச்சிறிய துளைகளை சுத்தம் செய்தால் அடைப்புகள் நீங்கி தண்ணீர் தடையின்றி சீராக வரும். மீண்டும் அந்த பாகத்தை குழாயில் பொருத்திய பின், சிறிது நேரம் தண்ணீரை திறந்து விட வேண்டும். இல்லை என்றால் தண்ணீர் குடிக்கும் போது வினிகர் வாடை வீசும்.
கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
இதில் நாம் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விஷயம் உள்ளது. கருப்பு நிறம் அல்லது பிரத்யேக நிறங்கள் பூசப்பட்ட ஆடம்பர குழாய்களில் இந்த வினிகர் முறையை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. வினிகரில் உள்ள அமிலம் அவற்றின் நிறத்தை நிரந்தரமாக மங்கச் செய்துவிடும்.
உங்கள் வீட்டில் கடின நீர் பிரச்சினை இருந்தால் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இப்படி சுத்தம் செய்வது குழாயின் ஆயுளை பல மடங்கு அதிகரிக்கும். அதேபோல குழாயை பயன்படுத்தி முடித்ததும் அதன் மீது உள்ள தண்ணீர் துளிகளை ஒரு சிறிய துணியால் உடனடியாக துடைத்து வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால், உப்புக்கறை படிவதை தொடக்கத்திலேயே தடுத்துவிடலாம்.