பிறர் மனம் நோகாமல் 'நோ' சொல்வது எப்படி?

say No
say Nohttps://www.entrepreneur.com

வாழ்க்கையில் எல்லா நேரங்களிலும் எல்லா மனிதர்களிடமும் எல்லாவற்றிற்கும், ‘சரி’ என்றோ, ‘ஆமாம்’ என்றோ சொல்ல முடியாது. சில சந்தர்ப்பங்களில் சிலரிடம் ‘நோ’ சொல்லி மறுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்போது அவர்கள் மனம் நோகாதவாறு பணிவாக, ஆனால் உறுதியாக ‘நோ’ சொல்வது எப்படி என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

‘முடியாது, இல்லை’ என மறுக்கும் சந்தர்ப்பங்கள்: ஒருவரின் அன்பான சலுகையை, புதிய வாய்ப்புகளை சில சமயம் நிராகரிக்க நேரிடும். தனிப்பட்ட அல்லது தொழில் முறையில் சிலரிடம் ‘நோ’ சொல்லவேண்டி இருக்கிறது. சிலர் உதவி கேட்கும்போது உதவ முடியாமல் போகலாம். அப்போதெல்லாம் அவர்கள் மனம் நோகாமல் நாசூக்காக, பணிவாக, ‘முடியாது’ என்று சொல்ல வேண்டும். சட்டென்று முடியாது அல்லது இல்லை என்று சொல்லும்போது பிறர் மனம் புண்படும். நமது பதில் இரக்கமற்றதாக, கடினமானதாக, முரட்டுத்தனமாகத் தோன்றும். ஆனால், அதே சமயத்தில் பிறர் சொல்லும் அத்தனையையும் ஏற்றுக்கொண்டு ஆமாம் சாமி போடுவது இயலாத காரியம்.

முடியாது என்பதை நாசூக்காக சொல்வது எப்படி?

1. வாய்ப்பை, சலுகையை அங்கீகரிக்கவும்: பிறர் உங்களுக்கு ஒரு வாய்ப்பு தருகிறார்கள். ஆனால், அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்போது என்ன செய்யலாம்? வழங்கப்பட்ட வாய்ப்பு, சலுகை அல்லது அழைப்பிற்கு முதலில் பாராட்டு தெரிவிக்க வேண்டும். அதனை அங்கீகரிக்க வேண்டும். அதை வேண்டாம் என்று அப்பட்டமாக சொல்வதற்கு பதிலாக உங்களுக்கு சலுகை அளிக்க முன்வரும் நபருக்கு மரியாதை தர வேண்டும். இதனால் தான் புறக்கணிக்கப்படுகிறோம் என்கிற உணர்வு அவருக்கு எழாது.

2. நிராகரிப்பதற்கான காரணங்களை தெளிவாக குறிப்பிடவும்: ஏன் அந்த வாய்ப்பை நிராகரிக்கிறீர்கள், வேண்டாம் என்கிறீர்கள் என்பதற்கான உண்மையான காரணங்களை புத்திசாலித்தனமாகவும் கண்ணியமாகவும் வெளிப்படுத்த வேண்டும். உங்களது மறுப்பு உண்மையான காரணங்களால் ஏற்பட்டதே தவிர தவறான நோக்கங்களால் அல்ல என்பதை உறுதியாக தெரிவிக்க வேண்டும்.

3. சொல்லும் தொனி கண்ணியமாக இருக்க வேண்டும்: இல்லை, முடியாது என்று சொல்வது நாகரிகமற்றது என்று பொருள் அல்ல. ஒருவரிடம் முடியாது என்று மறுக்கும்போது உங்கள் பேச்சுத் தொனி பணிவாக இருக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் ஏன் வேண்டாம் என்று சொன்னீர்கள் என்பதை எதிராளி புரிந்து கொள்வார்.

இதையும் படியுங்கள்:
அபார பலன்களைத் தரும் 8 வடிவ நடைப்பயிற்சி!
say No

4. அனுதாபத்தை வெளிப்படுத்துங்கள்: ''எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி. ஆனால், அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போய்விட்டது'’ என்று சொல்வதன் மூலம் உங்களுடைய அனுதாபத்தை அவர்களுக்குத் தெரிவிக்கிறீர்கள். சாதகமான சூழ்நிலை இருந்தால் நீங்கள் அதை ஏற்றுக் கொள்வீர்கள் என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

5. மாற்றுத் தீர்வுகளை பரிந்துரைக்கலாம்: இல்லை என்று சொல்லி எந்த விவாதத்தையும் முடிப்பது தீர்வை கொடுக்காது. அதற்கான மாற்றுத் தீர்வுகள் அல்லது உதவுவதற்கான வழிகளை பரிந்துரைக்கவும். உங்களால் முடிந்த, சாத்தியமான, செய்யக்கூடிய ஒன்றை 'அடுத்த முறை செய்கிறேன்' என்று சொல்லலாம். இதனால் அவர் மனம் சமாதானம் அடையும். உங்கள் மேல் வருத்தமோ கோபமோ அவருக்கு வராது.

6. நேர்மறையாக உரையாடலை முடிக்கவும்: அவருடன் பேசி முடிக்கும்போது நேர்மறையான குறிப்பில் உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இது ஒரு நல்லெண்ணத்தை ஏற்படுத்தும். எதிர்காலத்தில் நீங்கள் அவருக்கு உதவுவீர்கள் அல்லது அவர்கள் கொடுத்த வாய்ப்பை ஏற்றுக் கொள்வீர்கள் என்று தெளிவாகப் புரிய வைக்க வேண்டும். இதனால் உங்களுக்கு அவருடனான உறவு எப்போதும் நீடித்திருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com