அபார பலன்களைத் தரும் 8 வடிவ நடைப்பயிற்சி!

8 shape walk
8 shape walkhttps://ta.quora.com
Published on

‘நடப்பது நாளும் நன்மை தரும்’ என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமாகும். நடைப்பயிற்சி உடலையும் மனதையும் புத்துணர்ச்சியோடு சுறுசுறுப்பாக வைத்திருக்கும். தினசரி காலை ஒரு மணி நேரம் நடந்தால் அன்று முழுவதும் சுறுசுறுப்பாய் பணியாற்றலாம். ஒருநாளின் இருபத்திநான்கு மணி நேரத்தில் நம் உடல் நலத்திற்காகவும் மன நலத்திற்காகவும் ஒரு மணி நேரம் ஒதுக்குவது நல்லது என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.

தற்காலத்தில் சாதாரண நடைப்பயிற்சி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இதோடு 8 வடிவ நடைப்பயிற்சியும் (8 Shape Walking) தற்போது பிரபலமடைந்து உலகம் முழுவதும் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நடைப்பயிற்சியினை சிறுவர் முதல் பெரியவர் வரை யார் வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம். இந்த 8 வடிவ நடைப்பயிற்சி சாதாரண நடைப்பயிற்சியை விட அதிக நன்மைகளைத் தருவதாக கூறுகிறார்கள். இந்த நடைப்பயிற்சியை வீட்டின் மாடியிலோ அல்லது தோட்டத்திலோ செய்யலாம் என்பது இதன் சிறப்பம்சமாகும். இனி இந்த நடைப்பயிற்சியைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் வீட்டு மாடியிலோ அல்லது தோட்டத்திலோ 12 அல்லது 10 அடி நீளம் மற்றும் 6 அடி அகலத்தில் 8 வடிவத்தினை நீங்களே பெயிண்ட்டால் வரைந்து உருவாக்கிக் கொள்ளலாம். இந்த 8 ஆனது வடக்கு மற்றும் தெற்கு திசை நோக்கி இருத்தல் நல்லது. வெறும் காலுடன் நடப்பது அதிக நன்மை தரும். எனவே, நடக்கும் பாதையில் சிறு கற்கள், ஆணிகள் மற்றும் குப்பைகள் இல்லாமல் அவ்வப்போது நன்றாக சுத்தம் செய்து பாதையில் கால்களை பாதிக்கும் விஷயம் ஏதுமில்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

நடைப்பயிற்சியினை காலை வேளைகளில் செய்வது நல்லது. முதலில் வடக்கிலிருந்து தெற்கு திசை நோக்கி நடந்து தொடங்கிய இடத்தில் முடியுங்கள். இது ஒரு சுற்று. இப்படியாக ஐந்து நிமிடங்கள் வடக்கிலிருந்து தெற்காகவும் அடுத்த ஐந்து நிமிடங்கள் தெற்கிலிருந்து வடக்காகவும் நடக்க வேண்டும். அதிக வேகமும் இல்லாமல் குறைந்த வேகத்திலும் இல்லாமல் மிதமான அளவில் நடக்க வேண்டும். தொடக்கத்தில் அவரவர் சக்திக்கேற்ப இருபது நிமிடங்கள் இந்த நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். பின்னர் உங்கள் சக்திக்கேற்ப மெல்ல மெல்ல இந்த நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

உடல் எடையை சீக்கிரம் குறைக்க வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக எடுத்த எடுப்பிலேயே அரை மணி நேரம் ஒரு மணி நேரம் என்று உடலை வருத்திக் கொண்டு இந்தப் பயிற்சியைச் செய்யாதீர்கள். எதுவும் அளவுக்கு அதிகமானால் ஆபத்து என்பதை மனதில் கொள்ள வேண்டும். உங்கள் வயதிற்கேற்பவும் சக்திக்கேற்பவும் இந்த நடைப்பயிற்சியைச் செய்யுங்கள்.

இதையும் படியுங்கள்:
உடற்பிரச்னைகளின் அறிகுறிகளைக் காட்டும் நாக்கு!
8 shape walk

நாம் வழக்கமாக மேற்கொள்ளும் சாதாரண நடைப்பயிற்சியில் என்னென்ன நன்மைகள் கிடைக்குமோ அவை அனைத்தையும் 8 வடிவ நடைப்பயிற்சியானது தருகிறது. தொடர்ந்து இந்த நடைப்பயிற்சியை மேற்கொள்ளுவதன் மூலம் அதிகப்படியான உடல் எடை மெல்ல மெல்ல குறையத் தொடங்கும். 8 வடிவ நடைப்பயிற்சியானது உடலில் செரிமான உறுப்புகளின் செயல் திறனை அதிகரித்து ஜீரண சக்தியை அதிகப்படுத்தும். உடல் தசைகள் மற்றும் எலும்புகளை வலுவடையச் செய்யும். 8 வடிவ நடைப்பயிற்சியானது இரத்தஓட்டத்தை அதிகரித்து தசைகளுக்கு சீரான இரத்த ஓட்டத்தைத் தருகிறது. இதனால் தசைகளின் செயல்பாடு நன்றாக அமைகிறது. இதன் காரணமாக எலும்புகளும் வலுவடைந்து நன்றாக செயல்படுகின்றன. இந்த நடைப்பயிற்சியானது சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம் முதலானவற்றை ஓரளவிற்கு கட்டுப்பாட்டில் வைக்கும்.

இதய பாதிப்புள்ளவர்கள், கால் மூட்டு வலி உள்ளவர்கள், முதுகெலும்பு மற்றும் தோள்பட்டை வலியுள்ளவர்கள் மருத்துவரிடம் உரிய ஆலோசனையைப் பெற்று பின்னர் இந்த நடைப்பயிற்சியை மேற்கொள்ளுவது நல்லது.

தொடர்ந்து இந்தப் பயிற்சியை மேற்கொள்ளும்போது உடல் சோர்வடைந்தாலோ அல்லது மூச்சு வாங்கினாலோ நடப்பதை நிறுத்திவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். எக்காரணத்தைக் கொண்டும் உடலை வருத்திக் கொண்டு இந்த நடைப்பயிற்சியை மேற்கொள்ளாதீர்கள். முக்கியமாக 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்ளும்போது உங்கள் கைப்பேசியை உபயோகிக்காதீர்கள்.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட முறையில் திரும்பத் திரும்ப நடப்பதன் காரணமாக மனதை ஒருமுகப்படுத்தும் தன்மையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து இருபது நிமிடங்கள் 8 வடிவ நடைப்பயிற்சியைச் செய்தாலே ஒரு மணி நேரம் சாதாரண நடைப்பயிற்சி தரும் பலன்களை அடையலாம் என்றும் கூறப்படுகிறது. வெளிநாடுகளில் இதை Infinity Walking என்று அழைக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com