
நம்முடன் வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்களின் புகைப்படங்களை, அவர்களின் நினைவாக வீட்டு சுவரில் மாட்டி வைப்பது வழக்கம். அப்படி செய்வதால் அவர்களின் ஆசீர்வாதம், அனுபவம் மற்றும் நேர்மறை சக்திகளும் வீட்டு சூழலில் நிறைந்திருக்கும் எனவும் நம்புகிறோம்.
ஜப்பானியரின் வாஸ்து சாஸ்திரம், இந்த வகைப் படங்களை எந்த இடத்தில், எந்த திசையை நோக்கி மாட்டினால், குழப்பமில்லாத மனநிலை, அமைதி மற்றும் ஆற்றல் கிடைக்கும் என்பதை கூறுகிறது. அது சம்பந்தப்பட்ட விளக்கங்களை இப்போது பார்க்கலாம்.
மூதாதையர்கள், மூத்தோர் மற்றும் வழிகாட்டியாய் விளங்கியவர்களின் படங்களை வட மேற்கு திசையில் மாட்டும்படி ஃபெங் ஷுய் கூறுகிறது. அப்படி செய்வதால் பாதுகாப்பு, நல்லிணக்கம் போன்றவை வீட்டில் நிலைத்து நிற்கும். குறிப்பாக அப்பா, தாத்தா, கொள்ளுத் தாத்தா போன்ற ஆண் உறுப்பினர்களின் படங்களை இத்திசையில் வைப்பது விஷேசம்.
மேற்கு திசையில், குடும்பத்தின் பாரம்பரிய மரபு, மரியாதை ஆகியவற்றை தொடர்ந்து முன்னெடுத்துக் கொண்டு செல்ல உதவிய முன்னோர்களின் படங்களை மாட்டுவது சிறப்பு.
வட கிழக்கு திசையில், தான் சார்ந்த மதத்தின் கோட்பாடுகளை மதித்து, ஆன்மிக வளர்ச்சிக்குப் பாடுபட்ட பெரியவர்களின் படத்தை மாட்டலாம். இதனால் வீட்டில் தெய்வ வழிபாடு, மெடிடேஷன் போன்ற செயல்பாடுகள் மேன்மை பெறும்.
முன்னோர்களின் படங்களை வீட்டின் பூஜையறை மற்றும் மெடிடேஷன் செய்யும் இடங்களிலும் மாட்டி வைக்கலாம். பூஜை அறையில் தெய்வங்களின் படங்களுக்கு மேலாகவோ அல்லது சரி சமமாகவோ வைப்பதைத் தவிர்த்து, பொருத்தமான இடத்தில் வைத்து மரியாதை செய்யலாம். அவர்களை நன்றியுடன் நினைவு கூர்வது வீட்டின் நேர்மறை சக்தி உயர உதவும்.
வீட்டின் வரவேற்பறையில், அங்கு வந்து செல்லும் அனைவரின் பார்வை படும்படியான இடத்தில் முன்னோர்களின் படங்களை மாட்டலாம். இதனால் அனைவருக்கும் பெரியோர்களின் ஆசி குறைவின்றிக் கிடைக்கும்.
பரிசுப் பொருட்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை சேமித்து வைத்திருக்கும் கலைக் கூடத்திலும் முன்னோர்களின் படங்களை வைக்கலாம். இதனாலும் நேர்மறை உணர்வுகள் உண்டாகும்.
முன்னோர்களின் படங்களை வைக்கக் கூடாத இடங்கள்:
படுக்கை அறை: படுக்கை அறை என்பது ஓய்விற்காகவும், சக்தியை சேமிக்கவும் பயன்படும் இடம். முன்னோர்களின் படம் அங்கிருப்பது மன அமைதி குறையவும் சக்தி சமநிலையற்றுப் போகவும் செய்யக் கூடியது என ஃபெங் ஷுய் கூறுகிறது.
சமையலறை: சமையலறை என்பது ஊட்டச்சத்துக்கள் மற்றும் சுத்தத்தை சுட்டிக்காட்டும் அடையாளம். முன்னோர்களின் புகைப்படம் அங்கு களங்கம் உண்டாகச் செய்துவிடும் என நம்பப்படுகிறது.
குளியல் அறை ஓர் அசுத்தமான மற்றும் எதிர்மறை சக்தி உண்டாக்கும் இடமாக கருதப்படுவதால், பாத்ரூமிற்கு அருகில் முன்னோர்களின் புகைப்படம் வைப்பதை தவிர்ப்பது ஆரோக்கியம்.
மாடிப்படிக்கு அடியில் அல்லது காலணிகளை கழற்றிப்போடும் இடங்களில் முன்னோர்களின் புகைப்படம் வைப்பது மரியாதைக்குரிய செயலாகாது. இந்த இடங்களை தவிர்த்து விடும்படி ஃபெங் ஷுய் அறிவுறுத்துகிறது.
மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றி நாமும் முன்னோர்களின் நல்லாசி பெற்று நலம் பெறுவோம்.