பண்டிகை காலங்கள் வந்து விட்டால் பெரும்பாலும் பல கடைகள் தள்ளுபடி மற்றும் சலுகைகளை அள்ளி வழங்குவார்கள். ஆன்லைன் தளங்களும் இதற்கு சளைத்தவை அல்ல. சலுகைகள் இருக்கும் என்ற காரணத்தினாலேயே பலரும் பண்டிகை காலங்களில் ஷாப்பிங் செய்வார்கள். அவ்வகையில் எப்படி ஷாப்பிங் செய்தால் நமக்கு அதிக பலன்கள் கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
நவீன மயமாகி விட்ட இன்றைய உலகில் ஷாப்பிங் செய்வது கூட மிக மிக எளிதாகி விட்டது. இருந்த இடத்தில் இருந்தே ஆன்லைனில் நமக்கு பிடித்ததை ஆர்டர் செய்யும் வசதி வந்த பிறகு, கடைத் தெருவிற்கு வரும் நபர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இருப்பினும் பண்டிகை காலங்களில் மட்டும் உள்ளூர் சந்தைகளில் கூட்டம் அலைமோதும். என்ன தான் ஆன்லைன் ஷாப்பிங் வசதி இருந்தாலும், பண்டிகைக்குத் தேவையான பொருள்களை நேரில் சென்று வாங்குவதும் ஒரு தனி சுகம் தான். பண்டிகை நேரங்களில் நாம் கொஞ்சம் நிதானித்து ஷாப்பிங் செய்தால் நிச்சியமாக அதிகப் பலன்களைப் பெற முடியும்.
திட்டமிடல்:
பிடித்த பொருள்களை வாங்குவது மகிழ்ச்சியை அளித்தாலும், இதனால் நிதிச்சுமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு சரியான திட்டமிடல் அவசியம். பண்டிகை நேரங்களில் முதலில் எந்தெந்தப் பொருள்களை வாங்க வேண்டும் என பட்டியல் போட்டு அதற்கான பட்ஜெட்டை ஒதுக்க வேண்டும். சில பொருள்களை பார்த்தவுடன் வாங்கலாம் எனத் தோன்றும். ஆனால், மனதைக் கட்டுப்படுத்தி இவ்வாறான செயல்களைத் தவிர்ப்பது நல்லது.
விலை ஒப்பீடு:
எங்கு தரமான பொருள்கள், குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதை அறிந்து கொண்டு அந்த இடத்தில் பொருள்களை வாங்கினால் நிதிச்சுமை குறையும். ஆன்லைன் தளங்கள் அதிகரித்துள்ள இன்றைய நிலையில், பொருள்களின் விலையை ஒப்பிட்டுப் பார்க்க ஏதுவாக இருக்கிறது. ஆகையால் அவசரம் காட்டாமல் நிதானித்து வாங்குவது தான் நல்லது. சில சமயங்களில் சில பொருள்களின் விலை எதிர்பார்த்ததை விட குறைந்த விலைக்கு கிடைக்கும். அச்சமயத்தில் பொருள்களை வாங்குவது கூடுதல் பலனை அளிக்கும்.
முன்கூட்டியே வாங்குதல்:
பண்டிகை காலங்களில் தேவையான பொருள்களை முன்கூட்டியே வாங்குவதன் மூலமும் நிதியை சேமிக்க முடியும். ஏனெனில் கடைசி நேரத்தில் அப்பொருள்களின் விலை உயர அதிக வாய்ப்புகள் உள்ளது.
தள்ளுபடி:
டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலம் பொருள்களை வாங்கினால் தள்ளபடியும், ரிவார்டு புள்ளிகளும் கிடைக்கும். இதனைப் பயன்படுத்திக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். இருப்பினும் சலுகைகளைப் பெற வேண்டும் என்பதற்காக கூடுதலாக எந்தப் பொருளையும் வாங்க வேண்டாம். சில கடைகளில் குறிப்பிட்ட விலைக்கு மேல் ஷாப்பிங் செய்தால் கூப்பன் வழங்கும் வசதியும் இருக்கலாம். இதனையும் தவறாமல் பயன்படுத்திக் கொண்டால் பலன் உங்களுக்குத் தான்.