மனிதர்களுக்கு நட்பும் உறவும் மிகவும் முக்கியம். ஆனால், எல்லா உறவுகளும் வாழ்க்கையை சிறப்பாக்குவதில்லை. ‘ரெட் ஃபிளாக்’ ஆசாமிகளைக் கண்டறிந்து அவர்களை எதிர்கொள்வது எப்படி என்பது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
நம்மைச் சுற்றியுள்ள உறவு மற்றும் நட்பு வட்டத்தில் உள்ள நண்பர்கள், சக ஊழியர்கள், நெருங்கிய உறவுகள் தமது உரையாடல்களில் ‘ரெட் ஃபிளாக்’ எனப்படும் சிவப்பு கொடிகளைப் பயன்படுத்துவார்கள். இவை ஆக்கிரமிப்பு, பழிவாங்குதல் அல்லது தவறான நடத்தை ஆகியவற்றின் அறிகுறிகளாக இருக்கலாம். இதுபோன்ற ஆசாமிகளைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் நமது வாழ்க்கை துன்பமயமாகிவிடும்.
ரெட் ஃபிளாக் ஆசாமிகளின் இயல்புகள்:
1. அதிகப்படியான கட்டுப்பாடு: தனது நெருங்கிய உறவினர் அல்லது நண்பரை அளவுக்கு அதிகமாக கட்டுப்படுத்துவது ரெட் ஃபிளாக் ஆசாமிகளின் இயல்பாக இருக்கும். அவர் எங்கே செல்கிறார், என்ன உடை அணிய வேண்டும், என்ன உண்ண வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் நபராக இருப்பார். ஆரோக்கியமான உறவுகளின் குடும்பத்தில் இதுபோன்று நடப்பதில்லை. மற்றவர்களின் செயல்களை கட்டுப்படுத்துவதில்லை.
2. நம்பிக்கையின்மை: நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் நம்பிக்கை என்பது மிகவும் அவசியம். சந்தேகத்துடன் பழகும் மனிதர்களிடமிருந்து நம்பிக்கையை எதிர்பார்க்க முடியாது. நம்பிக்கையின்மையை கொண்டிருக்கும் மனிதர்களிடம் நட்போ. உறவோ அதிக நாட்கள் நீடிக்காது.
3. சுயமரியாதையை சீண்டுவது: என்னதான் நெருக்கமான உறவினர் அல்லது நண்பர் என்றாலும் சுயமரியாதைடன் ஒருவரை நடத்த வேண்டியது மிகவும் அவசியம். அது இல்லாமல் போகும்போது அந்த உறவு மற்றும் நட்புக்கு அர்த்தம் இல்லாமல் போய் விடும்.
4. உடல், உணர்ச்சி மன ரீதியான துஷ்பிரயோகம்: தான் விரும்பியது நடக்க வேண்டும் என்பதற்காக ஒருவர் ஒருவரை உடல் மற்றும் உணர்வு ரீதியாகவோ மன ரீதியாகவோ துஷ்பிரயோகம் செய்வது கண்டிக்கத்தக்கது.
5. நாசிசம்: நாசிச உணர்வு உள்ளவர்கள் மிகுந்த அடக்குமுறையை கடைப்பிடிப்பார்கள். தங்களுக்காகவே இந்த உலகத்து மனிதர்கள் படைக்கப்பட்டுள்ளனர் என்றும், தங்களை சுற்றித்தான் இந்த உலகமே இயங்குகிறது என்றும் எண்ணுவார்கள். இவர்களோடு பேசுவதும், பழகுவதும் மிகுந்த துன்பத்தைத் தரும்.
6. கோபம் மேலாண்மை சிக்கல்: குடும்பத்திலோ அல்லது நட்பிலோ, நெருக்கமான ஒருவருக்கு கோபத்தை கட்டுப்படுத்த தெரியாமல் போனால் குடும்ப உறுப்பினர்களை அச்சுறுத்துவது. மிரட்டுவது போன்ற நச்சு நடவடிக்கையை வெளிப்படுத்துவர். தான் என்ன பேசுகிறோம் என்று நிதானித்துப் பேச மாட்டார்கள்.
7. மோதல் போக்கு: எல்லாவற்றிற்கும் சிறிய விஷயங்களில் கூட உடன் இருப்பவர்களுடன் ஒத்துப்போகாமல் மோதல் போக்கைக் கடைபிடிப்பது ஆபத்தானது.
8. பொறாமை: தனது நெருங்கிய நண்பரோ. கணவரோ அல்லது மனைவியோ பிறருடன் அதிகமாக நேரம் செலவிடும்போது அது பொறாமையாக உருவெடுத்து சம்பந்தப்பட்ட நபரை டார்ச்சர் செய்வது. அத்துடன் அவரின் வளர்ச்சியில் பொறாமைப்படுவதும் நடக்கும்.
9. கேஸ் லைட்டிங்: இது ஒரு நயவஞ்சகமான. உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகமாகும். இதில் ஈடுபடும் நபர் எதிராளியை உணர்ச்சி ரீதியாக துன்பப்படுத்துவார். மேலும் ஒருவருக்கு தாம் சுய அறிவோடு செயல்படுகிறோமோ, புத்தியோடு இருக்கிறோமா என சந்தேகம் வரும் அளவிற்கு அவர் நடத்தப்படுவார். தவறே செய்யாதபோதும் தவறு செய்ததாக நம்ப வைக்கப்படுவார்.
10. சமூகத் தொடர்பு இல்லாமல் இருப்பது: எல்லா மனிதர்களுக்கும் பெரிய நட்பு வட்டம் இருப்பதில்லை. சிலருக்கு பிறருடன் இணைந்து பழகுவது, சமூகத்துடன் நெருங்கிப் பழகுவது ஒருவிதமான கூச்ச உணர்வை தரலாம். ஆனால், முழுக்க முழுக்க நண்பர்கள் இல்லாமல் இருப்பது நல்லதல்ல. ஒன்று இரண்டு நண்பர்கள் அல்லது நெருங்கிய உறவுகளாவது இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் இருந்தால் அவர் ரெட் ஃபிளாக் ஆசாமி எனக் கண்டுகொள்ளலாம்.