

ஒரு மனிதனுக்கு தேவையான புரதம், கால்சியம் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குவதில் எப்பொழுதுமே பாலுக்கு முதலிடம் உண்டு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் ஆரோக்கியத்திலும் பெரும்பங்காற்றும் அவசிய பொருளான பாலில் கலப்படங்கள் நிகழ்வது தற்போது சர்வ சாதாரண நிகழ்வாகிவிட்டது. அந்த வகையில் பாலில் தண்ணீர், டிடர்ஜென்ட், யூரியா, ஸ்டார்ச் போன்றவை கலந்து உள்ளதை கண்டறியும் வீட்டிலே செய்யக்கூடிய எளிய பரிசோதனைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
பாலில் தண்ணீர் கலப்படம்
தூய்மையான பால் அடர்த்தி அதிகமாக இருப்பதால் அடர் வெண்மையுடன் காட்சி தரும். தண்ணீர் கலந்துள்ள பால் அடர்த்தி குறைவாக வெளிர் நிறத்துடன் காட்சி தரும். சிறிதளவு பாலை எடுத்துக்கொண்டு அதனை ஒரு தட்டிலோ அல்லது டைல்ஸ் மீதோ சிறிதளவு ஊற்றவேண்டும். ஊற்றியவுடன் கலப்படம் இல்லாத பால் அடர்த்தி அதிகமாக இருப்பதால் மெதுவாக ஓடும். தண்ணீர் கலந்த பால் வேகமாக ஓடிவிடும். இதை வைத்தே பாலில் தண்ணீர் கலக்கப்பட்டுள்ளதை என்பதை எளிதில் கண்டறியலாம்.
பாலில் டிடர்ஜென்ட் கலப்படம்
பால் அடர்த்தியாக தெரியவேண்டும் என்பதற்காக டிடர்ஜென்ட் கலக்கப்படுகிறது. தூய்மையான ஒரு பாட்டிலில் சிறிதளவு பாலையும் அதனுடன் கொஞ்சம் தண்ணீரையும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்கு குலுக்கினால் மெல்லிய மற்றும் குறைவான நுரை உண்டானால் அது தூய்மையான பால் என்று அர்த்தம். அதுவே அடர்த்தி அதிகமாக அதிக நுரை உருவாகி நீண்ட நேரம் இருந்தால் அதில் டிடர்ஜென்ட் கலப்படம் என்பதனை கண்டுபிடித்துவிடலாம்.
பாலில் ஸ்டார்ச் கலப்படம்
தூய்மையான ஒரு பாத்திரத்தில் சிறிதளவு பாலை எடுத்துக்கொண்டு அதில் இரண்டு சொட்டு அயோடின் சேர்க்க வேண்டும். அப்பொழுது பாலின் நிறம் மாறாமல் இருந்தால் அது தூய்மையான பாலாகும். பாலில் ஸ்டார்ச் கலக்கப்பட்டு இருந்தால் நீலம் அல்லது கருப்பு நிறமாக மாறிவிடும். இதிலிருந்தே கலப்படத்தை தெரிந்து கொள்ளலாம்.
பாலில் யூரியா கலப்படம்
குறைந்த அளவு பாலை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு சோயாபீன் பவுடரை சேர்க்க வேண்டும். அப்பொழுது தூய்மையான பாலாக இருந்தால் அதனுடைய மணம் மாறாமல் அப்படியே இருக்கும். ஆனால் பாலில் யூரியா கலக்கப்பட்டு இருந்தால் அமோனியா போன்ற வாசனையை வந்தால் அது யூரியா கலந்த பால் என்பதை அறிந்துகொள்ளலாம்.
செயற்கை பால் கண்டறிதல்
பாலை உள்ளங்கையில் சிறிதளவு ஊற்றி தேய்க்கும்பொழுது தூய்மையான பால் மென்மையாகவும் இயற்கையாகவும் இருக்கும். அதுவே செயற்கை அல்லது கலப்பட பாலாக இருந்தால் சோப்பு போலவும், வழுவழுப்புடன் செயற்கையாக இருக்கும்.
மேற்கூறிய எளிய பரிசோதனைகளை வீட்டிலிருந்தே செய்து தெரிந்துகொள்வதன் மூலம் பாலின் தரத்தை அறிந்து பயன்படுத்தி ஆரோக்கியம் காக்கலாம்.