மார்க்கஸ் அரேலியஸின் ஸ்டாயிக் தத்துவங்களை தெளிவாக சிந்திப்பது எப்படி?
இந்த உலகம் மிகவும் புதிர்கள் நிறைந்தது. குழப்பங்கள் மற்றும் விரக்தியை பரிசளிக்கக் கூடியது. மார்க்கஸ் அரேலியஸ் ரோமாபுரியின் புகழ்பெற்ற சக்கரவர்த்திகளில் ஒருவர். அவருடைய தலைமை பண்பிற்கு மட்டுமல்ல, தத்துவத்திற்கும் புகழ் பெற்றவர். தன்னுடைய, ‘மெடிடேஷன்ஸ்’ என்ற புத்தகத்தில் மனதின் பலத்தை அதிகரித்து வாழ்க்கையை எப்படி அர்த்தமுள்ளதாக வாழ்வது என்று கூறியுள்ளார்.
அவர் ஸ்டாயிஸிசம் என்கிற தத்துவத்தை பிரபலப்படுத்தியவர். இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக பாவிக்கும் தன்மையே ஸ்டாயிஸிசம். சரியான செயலை செய்வதே மகிழ்ச்சிக்கான திறவுகோல். அதற்கு ஆழ்ந்த அறிவும் சரியான நடுநிலைத் தன்மையும் வேண்டும் என்கிறார். அவருடைய ஐந்து பிரபலமான ஸ்டாயிக் தத்துவங்களைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. உணரும் தன்மையை பயிற்றுவித்தல்: நாம் நம்முடைய நம்பிக்கைகள் மற்றும் அனுபவத்தின் அடிப்படையிலேயே எந்த விஷயத்தையும் எடை போடுகிறோம். ஆனால், அவை எதிர்மறை உணர்வுகளை தோற்றுவிக்கும். மார்க்கஸ் அரேலியஸ் அந்தப் பார்வையை மாற்றி எதையும் நேர்மறையாக பார்க்கும் மனோபாவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார். ‘வாழ்வில் ஏற்படும் தடைகளை கற்றுக்கொள்ளவும் வளர்ச்சி அடையவும் கிடைத்திருக்கும் வாய்ப்பாக நினைக்க வேண்டும். எந்த விஷயத்தையும் வித்தியாசமான கோணத்தில் இருந்து பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். நமது பார்க்கும் கோணத்தை மாற்றி உணரும் தன்மையை நன்றாக பயிற்றுவிக்க வேண்டும்’ என்கிறார். ‘சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வதற்கு எதுவுமே தேவை இல்லை. அது எல்லாமே உங்களுக்குள்ளேயே இருக்கிறது. உங்களுடைய சிந்தனையிலேயே இருக்கிறது’ என்கிறார்.
2. உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள்: ‘ஞானிகள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தத் தெரிந்தவர்கள். ஆனால், மனிதர்கள் உணர்வுகள் தங்களைக் கட்டுப்படுத்த அனுமதிப்பவர்கள். அது அழிவுகளுக்கே வழிவகுக்கும். நம்முடைய உணர்ச்சிகளை நேர்மறை செயல்களாக மாற்ற வேண்டும்’ என்கிறார். ‘அச்சமூட்டும் அல்லது கவலை தரும் சூழ்நிலையில் அச்சமோ, கவலையோ படாமல் அவற்றை எப்படி எதிர்கொள்வது என்று கற்றுக்கொள்ள வேண்டும்’ என்கிறார்.
3. மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளுங்கள்: ‘நம்மால் மாற்ற முடியாததைப் பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு நாம் எவற்றை சரியாக கையாள முடியுமோ அதில் கவனம் வைக்க வேண்டும். நடப்பவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். நமது விதியை நேசிக்க வேண்டும்’ என்கிறார்.
4. நற்குணங்களைக் கொண்டிருத்தல்: ஸ்டாயிக் தத்துவம் நற்குணங்களை கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அறிவு நடுநிலைத் தன்மை சகிப்புத்தன்மை மற்றும் துணிச்சல் போன்றவை ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டியது அவசியம். ஞானம், மாயையில் இருந்து உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. நடுநிலைத் தன்மை நல்லவற்றை செய்யத் தூண்டுகிறது. சகிப்புத்தன்மை நமது உணர்ச்சிகளை கட்டுக்குள் வைக்கிறது. துணிச்சல் சவால்களை தைரியமாக எதிர்கொள்ள கற்றுத் தருகிறது. 'ஒரு நல்ல மனிதனாக எப்படி இருப்பது என்று விவாதம் செய்து நேரத்தை வீணடிக்காதீர்கள். அப்படியே வாழ்ந்து விடுங்கள்' என்கிறார் அரேலியஸ்.
5. பறவையின் பார்வை வேண்டும்: ‘எந்த ஒரு முடிவை எடுக்கும் முன்பும் சூழ்நிலையின் எல்லாவிதமான சாத்தியக்கூறுகளையும் அலச வேண்டும். கூர்மையான ஒரு பறவையின் பார்வை போல இருக்க வேண்டும். இரையை தேடும் பறவை நாலு விதமான கோணங்களில் இருந்து கூர்மையாக பார்க்கும். அதன் பின்பே தனது இரையை தேடி அடையும். அதுபோல மனிதன் ஒரு முடிவு எடுக்கும் முன்பு பல வித கோணங்களையும் அலசி ஆராய வேண்டும். அது நல்லவிதமான முடிவுகளை எடுக்க வைக்கும்’ என்கிறார். 'நாம் கேட்கும் அனைத்துமே கருத்துக்கள் மட்டுமே. அவை உண்மைகள் அல்ல. நாம் பார்க்கும் அனைத்துமே நம்முடைய பார்வையைத் தவிர உண்மை அல்ல' என்கிறார்.