
தற்காலத்தில் நான்-ஸ்டிக் பாத்திரங்கள் நமது வீட்டின் சமையல் அறையை பெரிதும் ஆக்ரமித்துள்ளன. பெண்கள் நான்-ஸ்டிக் பாத்திரங்களை பெரிதும் விரும்புகிறார்கள். எதனால் என்றால் பாத்திரங்களில் உணவுகள் ஒட்டாமல் சுலபமாக சமைக்க முடிகிறது. குறைந்த அளவு எண்ணெய் செலவாகிறது. மேலும் இவற்றை சுத்தம் செய்வதும் எளிது. நான்-ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்துவது நல்லதா ? இல்லையா ? வாருங்கள் இந்த பதிவில் நாம் அதைப்பற்றித் தெரிந்து கொள்ளுவோம்.
சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னால் சமையல் அறையில் மண் பாத்திரங்கள் பெரிதும் இடம் பிடித்திருந்தன. இதில் சமைப்பது மிகவும் ஆரோக்கியமானது. இதைத் தொடர்ந்து அலுமினியம், பித்தளை, வெண்கலம், இரும்பு, எவர்சில்வர் முதலான பாத்திரங்கள் இடம் பெற்றன. தற்காலத்தில் சமையல் அறையே முற்றிலும் நவீனமாக மாறிப்போய் புதிய வடிவம் பெற்றுள்ளது. மைக்ரோவேவ் அடுப்பில் சமைக்க பிரத்யேகப் பாத்திரங்கள் உள்ளன. மேலும் நான்-ஸ்டிக் பாத்திரங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.
முன்பெல்லாம் குளிர்சாதனப் பெட்டியில் ப்ரெயான் (Freon Gas) என்ற வாயு பயன்படுத்தப்பட்டது. 1938 ஆம் ஆண்டில் ராய் ஜெ.பிளங்கெட் என்பவர் ப்ரெயான் வாயுவிற்கு பதிலாக குளோரோபுளோரோ கார்பன் என்ற வாயுவை உருவாக்க முயன்று கொண்டிருந்தார்.
இதற்காக பல சோதனைகளை செய்தவண்ணம் இருந்தார். அப்போது அவரால் எதேச்சையாக கண்டுபிடிக்கப்பட்டதுத்தான் “பாலிடெட்ரா புளோரோ எதிலீன்” என்ற ஒரு கரிம சேர்வை. இந்த வேதிப்பொருளை தயாரிக்கும் ஒரு நிறுவனம் சூட்டிய வணிகப் பெயரே “டெஃப்லான்” ஆகும்.
பாலிடெட்ரா புளோரோ எதிலீனில் உள்ள கார்பன் சங்கிலியானது புளோரின் அணுக்களால் சூழப்பட்டுள்ளதால் கார்பன் மற்றும் புளோரின் அணுக்களுக்கு இடையில் மிகவும் வலுவான பிணைப்பு ஏற்படுகிறது. இதனால் இது வேதிப்பொருட்களோடு அவ்வளவாக வினைபுரியாது.
மேலும் இதன் மேற்பரப்பானது அதிக வழக்கும் தன்மை உடையதாக இருக்கும். அதிக வழுக்கும் தன்மை கொண்ட காரணத்தினால் டெஃப்லான் பூசப்பட்ட பாத்திரங்களில் சமைப்பதால் அடிபிடிப்பதில்லை.
சுத்தம் செய்வதும் எளிது. எண்ணெயும் அதிக அளவில் செலவாவதில்லை. இதன் காரணமாகவே இல்லத்தரசிகள் இத்தகைய நான்-ஸ்டிக் பாத்திரங்கள் மற்றும் தவாக்களை அதிக அளவில் விரும்பி உபயோகிக்கின்றனர். சமையல் பாத்திரங்களில் மட்டுமின்றி பல்வேறு தொழில்துறை தயாரிப்புகளிலும் டெஃப்லான் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
நான்-ஸ்டிக் பாத்திரங்களில் பூசப்பட்டுள்ள டெஃப்லானானது அதிக வெப்பநிலையில் உலோகத்துடன் வினைபுரிந்து மணமற்ற நச்சுப்புகையினை வெளியேற்றும். பாலிடெட்ரா புளோரோ எதிலீன் ஒரு பாதுகாப்பான வேதிப்பொருள்தான். ஆனால் 300o C க்கு அதிகமான வெப்பநிலைக்கு மேல் அதை வெப்பப்படுத்தும்போது நான்-ஸ்டிக் பாத்திரங்கனின் மீது பூசப்பட்டுள்ள டெஃப்லான் பூச்சுக்கள் உடைந்து நச்சுப்புகை வெளியேறும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதன் காரணமாகவே நான்-ஸ்டிக் பாத்திரங்களை கீறல் விழாத வகையில் உபயோகிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
கீறல் விழுந்தால் நச்சுப்புகையானது அதிகஅளவில் வெளியேறும். நான்-ஸ்டிக் பாத்திரங்களில் சமைக்கும் போது 300o C க்குக் குறைவான வெப்பநிலையில் சமைக்க வேண்டும். உலோகக்கரண்டிகளைப் பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால் பாத்திரங்களின் மேற்பரப்பில் கீறல்கள் விழுந்து நச்சுப்புகை அதிக அளவில் வெளியேறும் வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாகவே நான்-ஸ்டிக் பாத்திரங்களை உபயோகிக்கும் போது மரக்கரண்டிகளை உபயோகிக்குமாறு கூறுகிறார்கள். இத்தகைய பாத்திரங்களை சுத்தம் செய்ய மெட்டல் ஸ்க்ரப்பரை (Metal Scrubber) பயன்படுத்தாமல் மென்மையான பாத்திரம் தேய்க்கும் பொருட்களை பயன்படுத்தி கீறல்கள் விழாதவாறு சுத்தம் செய்யவேண்டும்.
நான்-ஸ்டிக் பாத்திரங்கள் பாதுகாப்பானவையே. ஆனால் நான்-ஸ்டிக் பாத்திரங்களில் சமைக்கும்போது குறைவான வெப்பநிலையில் சமைக்க வேண்டும். சமையல் பொருட்களைக் கிளற மற்றும் தோசை சுட உலோகக் கரண்டிகளைப் பயன்படுத்தக்கூடாது. இதற்கு பதிலாக மரக்கரண்டிகளைப் பயன்படுத்த வேண்டும். நான்-ஸ்டிக் பாத்திரங்களை சுத்தம் செய்யும் போது உலோகக் ஸ்க்ரப்பர்களை பயன்படுத்தாமல் மென்மையான துலக்கும் பொருட்களைக் கொண்டு கீறல்கள் விழாமல் சுத்தம் செய்யவேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.