

"மாய்ஞ்சு மாய்ஞ்சு இவருக்காக வேலை செய்கிறேன் ஆனால் இவர் என்னை மதிப்பதே இல்லை" "கல்யாணம் ஆன புதுசுல என்னைவே சுத்தி சுத்தி வந்தார் ஆனால் இப்ப சுத்தமா கண்டுக்கறதே இல்லை" "அப்ப கொஞ்ச நேரம் பேச மாட்டோமா என்று ஏங்கிய காலம் போய் இப்ப பேசினாலே சண்டையில் போய் முடியுது" இப்படி எல்லாம் புலம்பும் மனைவியா நீங்க?
மனைவியை பிடிக்கவில்லை என்பதைவிட இவள் நமக்கானவள் என்ற உணர்வே கணவர்கள் கண்டு கொள்ளாமல் இருக்கும் காரணமாகிறது என்கிறது உளவியல். கண்டுகொள்ளாத கணவனிடம் பொறுக்க முடியாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்யும் பெண்கள் பலர் உண்டு.
ஆனால் இனி சண்டையே போடாமல் அகிம்சை வழிகளான இந்த 5 எளிய வழிகளை கடைபிடிப்பதன் மூலம் உங்கள் கணவரை மாற்றிவிட முடியும். அது என்ன வழிகள் தெரியுமா?
உங்கள் சுயமரியாதை எல்லையை வகுத்துக் கொள்ளுங்கள் .
ஏதோ ஒரு விஷயத்துக்காக இருவருக்கும் சண்டை ஏற்பட்டு இருக்கலாம். அந்த நேரத்தில் அவர் கடுமையான வார்த்தைகளால் உங்களை சாடி இருக்கலாம். அது உங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் நேரத்திலும் அடுத்த ஐந்து நிமிடங்களில் சென்று (காபி வேண்டுமா போன்ற..) அவருக்கான தேவைகளை நிறைவேற்றாதீர்கள். ஒன்றும் நடவாதது போல் நீங்கள் அவரை மீண்டும் கவனிக்கும்போது "ஓ இவளை நாம் எப்படி வேண்டுமானாலும் திட்டலாம்.. எங்கேயும் போக முடியாது" என்ற எண்ணம் கணவருக்கு வந்துவிடும். இதை தவிர்க்க எப்போதும் போல உங்கள் கடமையை செய்யுங்கள். ஆனால் வலியமாக சென்று கணவரை தாங்குவதை நிறுத்துங்கள். உங்கள் சுயமரியாதையை விட்டுத்தர மாட்டீர்கள் என கணவருக்கு இதன் மூலம் உணர்த்துங்கள்.
பேச்சை மட்டுமல்ல வார்த்தைகளையும் குறையுங்கள்.
ஏதேனும் சண்டை ஏற்பட்டால் கணவரிடம் அதற்கான விளக்கத்தை தருவதில் பெண்கள் முன்னிலையில் இருப்பார்கள். நான் எதற்காக இப்படி செய்தேன் தெரியுமா என்றெல்லாம் ஆரம்பித்து தன்னிலை விளக்கத்தை தருவதால் கணவருக்கு உங்கள் மேல் அன்பு வரப்போவதில்லை. மாறாக தான் செய்தது சரிதான் என்றுதான் நினைப்பார்கள். பேசாமல் இருந்து பாருங்கள். "எப்போதும் சண்டை வந்தால் பேசும் மனைவி இன்று பேசவில்லையே" என்பது கணவருக்கு புரியும். ஏதோ நாம் தவறு செய்து விட்டோமோ என்ற எண்ணம் தோன்றக்கூடும். இதுவரை தான் மனைவியை மதிக்கவில்லை என்பதையும் தன்னால் மனைவி காயப்பட்டுள்ளார் என்பதையும் உணர்வார். கத்திப் பேசி சாதிக்க முடியாததை மௌனத்தால் சாதிக்கலாம்.
வீட்டில் உங்களுக்கு முன்னுரிமை தாருங்கள்.
பொதுவாக பெண்கள் எப்போதும் வீட்டில் உள்ள அனைவரும் குறிப்பாக கணவர் சாப்பிட்ட பின் சாப்பிடுவது, அவருக்கான பணிகளை செய்வது என தங்களை பின்னிறுத்திக் கொள்வார்கள். இது மிகவும் தவறு. தியாகம் செய்வது உங்கள் பணி அல்ல.
நீங்கள் சம உரிமையுள்ளவர் என்பதை மனதில் நிறுத்துங்கள். பசித்தால் சாப்பிடுங்கள். உங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முன் வாருங்கள். உடல் உபாதைகளை தெரியப்படுத்தி ஓய்வு எடுங்கள். இதனால் உங்களுக்கும் உணர்வுகளும் மன விருப்பங்களும் உண்டு என்பதை கணவருக்கு தெளிவாக உணர்த்துங்கள்.
உங்களுக்கு என ஒரு தனி உலகத்தை அமைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு சில பெண்கள் எப்போதும் "கணவரே உலகம்" என்று நினைத்து வாழ்ந்து வருவார்கள். கணவரைத்தாண்டி அவர்கள் எதையும் கற்றுக்கொள்ளவோ தெரிந்துகொள்ளவும் விரும்பமாட்டார்கள். அப்படி இருக்கும் பெண்களை கணவர் "இவள் நான் கிழித்த கோட்டைத் தாண்டமாட்டாள்" என பெருமை தருவதுபோல சுலபமாக தங்கள் அடிமையாக்கி கொள்வார்கள். இதற்கு இடம் தராதீர்கள். கணவரை தாண்டி கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இந்த உலகில் உள்ளது. உங்களுக்கு பிடித்த ஹாபியை கையிலெடுத்து உங்கள் திறமையை கணவருக்கு தெரிய வையுங்கள். தன்னையே சார்ந்திருக்கும்போது தராத மரியாதையை இப்போது தருவார் கணவர் நிச்சயமாக.
கண்ணீரை ஆயுதமாக்காதீர்கள்.
பெண் என்றாலே "அழப்பிறந்தவள்" என்ற நிலை தற்போது மாறி பெண் என்றால் "ஆளப்பிறந்தவள்" என்று ஆகியுள்ளது. இன்னும் மனைவிமார்கள் கணவரிடம் ஏதேனும் பிரச்னை என்றால் முதலில் தங்கள் ஆயுதமாக பயன்படுத்துவது கண்ணீரைத்தான். ஆனால் இது மிகப்பெரிய தவறு. மனது எவ்வளவு சங்கடப்பட்டாலும் கணவர் முன் தயவு செய்து அழாதீர்கள். அது உங்கள் பலவீனத்தைக் காட்டி மேலும் உங்களுக்கு அவமானத்தையே தரும்.
பிரச்னை என்றால் உங்கள் முகத்தில் இதெல்லாம் தூசி என்பது போன்ற பக்குவப்பட்ட ஒரு தன்னம்பிக்கை தெரியவேண்டும். இன்னும் சொல்லப்போனால் "இது என்னை எந்த விதத்திலும் காயப்படுத்தாது" எனும் திமிர்த்தனம் இருக்கவேண்டும். மனைவியை காயப்படுத்த முடியாது என்பது தெரிந்துவிட்டால் நிச்சயம் விலகிப்போவதுடன் மதிப்புடனும் பார்ப்பார்கள் கணவன்மார்கள்.