

அன்பால் உருவாக்கப்பட்டது கணவன் மனைவி உறவு. பெரும்பாலான கணவன் மனைவி இருவருக்கும் அன்பு அதிகமாக இருந்தாலும் அடிக்கடி சண்டை வருவது இயல்புதான். காலையில் ஊடல் மாலையில் கூடலாக மாறிவிடும். இத்தகைய உறவில் இருவரைத்தாண்டி மூன்றாவது நபருக்கு சண்டைகள் குறித்து தெரிய வரும்போது பிரச்னை பெரிதாக வாய்ப்பு அதிகம். அந்த வகையில் கணவன் மனைவி சண்டை குறித்து யாரிடம் சொல்லலாம். யாரிடம் சொல்ல கூடாது? என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.
பாசிட்டிவான விஷயங்களை பகிரலாம்
கணவன் மனைவி இருவரும் தங்களது உறவினர்களிடம் பாசிட்டிவான விஷயங்களை எப்போது வேண்டு மானாலும் வெளிப்படுத்தலாம். அந்த நேரத்தில் இருவரது திறமைகள் குறித்து பாராட்டி பேசும்போது சின்ன சின்ன குறைகள் மூன்றாம் நபர் கண்ணுக்கு தெரியாது.
தவறான வழியை தெரியப்படுத்துவது அவசியம்
அதேசமயம் அதிக செலவு செய்யும் மனைவியையும் ,தவறான வழியில் பணத்தை முதலீடு செய்தல், போதைப் பழக்கத்திற்கு அடிமையான கணவரின் செயல் போன்ற தீவிரமான கணவன் மனைவி பிரச்சனைகளை வீட்டு உறவினர்களிடம் பேசி அவர்களின் உதவியை பெறுவது உத்தமம்.
பிரச்னையை தள்ளி போடலாம்
கணவன் மனைவி இருவருக்கும் பிரச்னை வந்தால் அதனை ரத்த உறவுகளிடம் பகிராமல் ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு பிரச்சனையை தள்ளிப்போட வேண்டும். மேலும் ஒருவர் அந்தப் பிரச்சினையில் இருந்து வெளிவர தன்னால் எப்படி உதவமுடியும் என்பதையும் மற்றவர் யோசித்து செயல்பட வேண்டும். பிரச்னையில் யார் ஜெயிக்கிறார்கள் என்ற போட்டியும், ஈகோவையும் தவிர்ப்பதோடு மூன்றாம் நபரிடம் இவ்விஷயத்தை கொண்டு செல்லாமல் இருந்தாலே பிரச்னை பெரிதாகாமல் அன்பு மேம்பட ஆரம்பித்துவிடும்.
பேசாமல் பிரச்னை தீராது
கணவன் மனைவி இருவரும் தங்களுக்குள் இருக்கும் பிரச்னைகளை வெளிப்படுத்தாமல் இருக்கும்போது, உறவுகள் துருவித் துருவி கேள்வி கேட்பர். அவர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. மேலும் இப்பிரச்னை 'சீக்கிரமே சரியாகிவிடும்' என்று சாதாரணமாக கூறுபவர்களால் எந்த பிரயோஜனமும் இல்லை. ஏனெனில் பேசாமல் பிரச்னை தீராது.
பிரச்னை தீர கூறவேண்டிய நபர்கள்
கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை வரும்போது பேசி தீர்க்க முடியவில்லை என்றால் அவர்கள் கண்டிப்பாக மனநல ஆலோசகரை அணுகவேண்டும். மேலும் தங்களது பிரச்னைகள் குறித்து 'கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் 'போன்ற நிபுணர்களிடம் பகிர்ந்துகொள்ளலாம். இதனால் பிரச்சனைகளின் தீவிரம் குறித்து ஆராய்ந்து யாரால் பிரச்னை உருவாகிறது என்பதனை தெளிவாக கூறுவார்கள்.
மேலும் பிரச்னை வராமல் இருப்பதற்கு வேண்டிய ஆலோசனையையும் வழங்குவார்கள். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் சண்டைகள் குறைந்து சந்தோசமாக வாழ்க்கை தொடர வழிவகை ஏற்படும்.