தற்போதைய வாழ்க்கை முறை மாற்றங்களால் ஹைப்பர் டென்ஷன் போன்ற நோய்கள் குழந்தைகளையும் பாதிக்கத் தொடங்கியுள்ளன. பெரும்பாலும் பெரியோர்களுக்கு ஏற்படும் இந்த பிரச்சனை குழந்தைகளுக்கு ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன என்பதை இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
ஹைப்பர் டென்ஷன் என்பது ரத்த நாளங்களில் ரத்தம் அதிகமான அழுத்தத்துடன் பாயும் ஒரு நிலை. இது படிப்படியாக உடலின் பல்வேறு உறுப்புகளை பாதிக்கக்கூடும். பொதுவாக ஹைப்பர் டென்ஷன் என்பது வயதானவர்களுக்கு ஏற்படும் ஒரு பிரச்சனை என்றாலும், தவறான உணவுப் பழக்க வழக்கங்கள், உடலின் தன்மை மன அழுத்தம் போன்ற காரணங்களால் குழந்தைகளும் இதனால் பாதிக்கப்படலாம்.
குழந்தைகளுக்கு ஹைப்பர் டென்ஷன் ஏற்படுவதற்கான காரணங்கள்:
குடும்பத்தில் ஏற்கனவே மற்றவர்களுக்கு ஹைப்பர் டென்ஷன் இருந்தால் குழந்தைகளுக்கும் அது வர வாய்ப்புள்ளது. அதிக எடை மற்றும் உடற்பருமன் உள்ள குழந்தைகளுக்கு ஹைப்பர் டென்ஷன் வரும் வாய்ப்புகள் அதிகம்.
அதிக உப்பு, கொழுப்பு மற்றும் சர்க்கரை உணவுகளை சாப்பிடுவதாலும் இந்த பாதிப்பு ஏற்படக்கூடும். போதுமான உடல் உழைப்பு இல்லையென்றால் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இது ஹைப்பர் டென்ஷனுக்கு வழிவகுக்கும்.
குழந்தைகளுக்கு பள்ளி, வீடு மற்றும் சமூக வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தம் அவர்களின் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். மேலும் சிறுநீரகம், இதயம், அட்ரினலின் சுரப்பி போன்ற உறுப்புகளில் ஏற்படும் பிரச்சனைகளாலும் குழந்தைகளுக்கு ஹைப்பர் டென்ஷன் ஏற்படலாம்.
அறிகுறிகள்: பெரும்பாலும் குழந்தைகளில் ஹைப்பர் டென்ஷன் வெளிப்படையான அறிகுறிகளை காட்டாது. இருப்பினும் சில குழந்தைகளில் கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்படலாம்:
தலைவலி
தலைச்சுற்றல்
மூக்கில் ரத்தம் வடிதல்
கண் பார்வை மங்கலாக தெரிதல்
காதுகளில் ஓசை கேட்டல்
சோர்வு
அதிகப்படியான வியர்வை
மனநிலை மாற்றங்கள்
குழந்தைகளுக்கு ஹைப்பர் டென்ஷன் இருப்பது தெரியவந்தால் அவர்களது வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை கட்டாயம் கொண்டுவர வேண்டும். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, மன அழுத்தத்தை குறைத்தல் போன்றவை இதில் அடங்கும். குறிப்பாக, பெற்றோர்கள் குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் எதையும் செய்யக்கூடாது. குழந்தைகளை அவர்களது போக்கில் இருக்க விட வேண்டும்.
குழந்தைகளில் ஹைப்பர் டென்ஷன் என்பது எளிதில் சரிசெய்யக்கூடிய பிரச்சனைதான். சரியான வாழ்க்கை முறை மாற்றங்கள், மற்றும் உடற்பயிற்சி செய்வதன் மூலமாக ஹைப்பர் டென்ஷனைத் தடுக்க முடியும். உங்கள் குழந்தைக்கு ஹைப்பர் டென்ஷனின் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம்.