
மகாபாரதத்தில் வரும் சல்லியன் பற்றி தெரியுமா? நகுலன் சகாதேவன் இருவருக்கும் தாய் மாமன் இந்த சல்லியன். பாண்டவர்களின் தந்தை பாண்டு மன்னனுக்கு குந்தி மற்றும் மாத்தரி என்று இரண்டு மனைவியர்கள். தர்மன், பீமன், அர்ஜுனன் மூவரும் குந்திக்கு புதல்வர்கள். நகுலன், சகாதேவன் இருவரும் இரண்டாவது மனைவி மாத்தரிக்கு புதல்வர்கள். மாத்தரியின் சகோதரன் சல்லியன். இவன் வில்லிலும், வாள் செலுத்துவதிலும் பேராற்றல் பெற்றவன். தேரோட்டுவதிலும் வல்லவன். இவனுடைய மிகப்பெரிய பலவீனம் பசி தான். இவனால் பசி தாங்க முடியாது. பசி வந்துவிட்டால் எதையும் கவனிக்க மாட்டான்.
மகாபாரதப் போரில் தன்னுடைய மருமகன்களுக்கு போரில் உதவுவதற்காக பெரும் படைகளுடன் வந்து கொண்டிருந்தான். செய்தி அறிந்த துரியோதனன், சல்லியனை எப்படியாவது தனக்கு உதவியாக இருக்குமாறு செய்து கொள்வதற்கு எண்ணி, அறுசுவை உணவை தயாரிக்க செய்து, வரும் வழியில் அவனை படைகளுடன் சேர்த்து அறுசுவை உணவினை உண்ணச் செய்தான்.
உணவு அருந்திய சல்லியனோ சிறிது நேரம் இளைப்பாறிக் கொண்டே யார் இந்த அறச்செயலை செய்தவர்? எதன் பொருட்டு இதனை மேற்கொண்டனர்? என்று சிந்தனையில் ஆழ்ந்து இப்படிப்பட்டவர்களுக்கு என்ன கைமாறு செய்வேன் என்று தன்னை அறியாமலே உரக்க கூறினான்.
அதுவரை மறைந்திருந்த துரியோதனனோ சல்லியனுக்கு முன் தோன்றி," மாமா சௌக்கியமா?" என்று கேட்க, சல்லியனுக்கோ அதிர்ச்சி. "இது உன் கூடாரமா? தெரியாமல் சோற்றை உண்டு விட்டேனே!" என்று நொந்து கொண்டான்.
ஆனால் துரியோதனனோ, "வரப்போகும் போரில் எனக்கு துணையாக நில்லுங்கள். இந்த உதவியே போதும். இதுதான் நான் எதிர்பார்க்கும் கைமாறு," என்று சல்லியனை தன் பக்கம் இழுக்க, சல்லியனோ வேறு வழியின்றி கௌரவர்கள் தரப்பில் போரிட ஒப்புக் கொண்டான். செஞ்சோற்று கடனுக்காக துரியோதன் தரப்பில் நின்று போரிட நேர்ந்தது.
எனவேதான் அவசியம் இல்லாமல் பிறர் வீட்டில் உண்ணக்கூடாது என்பார்கள்.
அடுத்ததாக போர் நடந்து கொண்டிருந்தது. போரின் பொழுது நல்ல பசி எடுக்க சற்று தொலைவில் நல்ல நெய் மணத்துடன் சமையல் வாசனை வர அங்கு சென்று வயிறு முட்ட சாப்பிடுகிறான் சல்லியன். இப்படிப்பட்ட சமையல் செய்தவரை பாராட்டியே ஆக வேண்டும் என்று எண்ணி சமையல் கூடம் சென்று பார்க்க அங்கே முண்டாசு கட்டிக் கொண்டு கைகளில் கரண்டியுடன் கிருஷ்ணன் இருக்கிறான்.
"பிரமாதம் இதுவரை இப்படி ஒரு சாப்பாட்டை சாப்பிட்டதில்லை. உனக்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என்ன வேண்டும் கேள்" என்று கூற, கிருஷ்ணனும் "நீ தேரை ஓட்டும் பொழுது ஒரு சக்கரத்தை பள்ளத்தில் இறக்கி ஒரு நொடியில் அதை மேலே ஏற்றி ஓட்டுவாயே. அதில் நீ கைதேர்ந்தவன். அந்த வித்தையை எனக்கு எப்படி என்று சொல்லிக் கொடு" என்று கேட்க, சல்லியனும் சொல்லிக் கொடுக்கிறான்.
17-வது நாள் கர்ணன் - அர்ஜுனன் யுத்தம் நடக்கும்போது தேரோட்டியாக சல்லியனும், பாண்டவர்கள் பக்கம் கிருஷ்ணனும் தேரோட்ட, அர்ஜுனனின் அம்புகள் சரமாரியாக பொழிகின்றன. கர்ணன் நாகாஸ்திரத்தை அர்ஜுனனின் தலைக்கு குறி வைக்க, கிருஷ்ணன் தான் கற்ற வித்தையை கொண்டு அர்ஜுனனை காப்பாற்றி விடுகிறான்.
எனவே தான் தேவையில்லாமல் பிறர் வீட்டில் சாப்பிடக்கூடாது என்ற பழக்கம் வந்தது. அதனால் தான் பெண்களை திருமணம் செய்து கொடுத்த மருமகன் வீட்டிற்கு செல்வதாக இருந்தால் கூட, இன்றளவும் காய்கறி, அரிசி, பழ வகைகளை வாங்கிக் கொண்டு போய் கொடுத்த பின்புதான் சாப்பிடுவது வழக்கமாக உள்ளது. வெறும் கையை வீசிக்கொண்டு போய் சாப்பிட்டு கடன் படக்கூடாது என்ற பழக்கம் வந்ததாக கூறப்படுவதுண்டு.