புத்திசாலியான ஒரு நபர் தன்னுடைய சொற்கள், செயல்கள் மற்றும் நடத்தையில் மிகவும் கவனமாக இருப்பார். அவர் இந்த எட்டு தவறுகளை நிச்சயம் செய்ய மாட்டார். அவை என்ன என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. சிந்திக்காமல் செயல்படுவது: ஒரு புத்திசாலியான நபர் எப்போதும் சிந்திக்காமல் செயல்பட மாட்டார். சிந்திப்பதன் அவசியத்தை நன்றாகப் புரிந்து வைத்திருப்பதால், தான் செய்யப்போகும் செயல்களின் விளைவையும், அவை உருவாக்கக்கூடிய தாக்கத்தையும் கருத்தில் கொள்வார். மேலும், அவசர முடிவுகள் எடுப்பது அல்லது உணர்ச்சிவசப்படுவது போன்றவற்றை தவிர்ப்பார்.
2. கற்றல் வாய்ப்புகளை புறக்கணித்தல்: வாழ்க்கை என்பது தொடர்ச்சியாக கற்கும் ஒரு களமாகும். தொடர்ச்சியான கற்றல், வளர்ச்சிக்கு அவசியமென்பதை புத்திசாலிகள் அறிவார்கள். எனவே, புதிய அனுபவங்கள் மற்றும் புதிய அறிவு பெறுவதற்கு தயங்க மாட்டார்கள். தன்னுடைய திறன்களை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை எப்போதும் அவர்கள் புறக்கணிக்க மாட்டார்கள். அத்தகைய வாய்ப்புகளை கெட்டியாகப் பிடித்துப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
3. மனக்கசப்புகளை சேகரித்தல்: இந்த வாழ்க்கை எல்லோரையும் போல புத்திசாலிகளுக்கும் கசப்பான அனுபவங்களையும் நிகழ்வுகளையும் வழங்குகிறது. ஆனால், அவர்கள் அவற்றை மனதிற்குள் சேகரம் செய்து வைத்துக்கொள்ள மாட்டார்கள். கோபத்தை அடக்கி வைப்பது, பிறர் தன் மீது காட்டிய வெறுப்பை மனதிற்குள் பத்திரப்படுத்துவது போன்றவற்றை செய்ய மாட்டார்கள். மனக்கசப்புகளை அப்போதே வெளியேற்றிவிட்டு தெளிவான மனதுடன் இருப்பார்கள்.
4. பழி வாங்குதல்: தங்களுக்கு யாராவது தீங்கிழைத்து விட்டால் பதிலுக்கு பதில் பழி வாங்க வேண்டும் என்று அவர்கள் துடிக்க மாட்டார்கள். தங்களை கேலி, கிண்டல் செய்த நபர்களை புறக்கணித்துச் செல்வார்கள். தீங்கிழைத்தவர்களை விட்டு விலகி செல்வார்களே தவிர, பழிவாங்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். அது தன்னுடைய மனதையும் வாழ்வையும் பாதிக்கும் என்று நன்கு அறிந்தவர்கள் புத்திசாலிகள்.
5. ஆக்கப்பூர்வமான விமர்சனத்தை புறக்கணித்தல்: தன்னைப் பற்றி பிறர் கூறும் விமர்சனங்களை காது கொடுத்து கேட்பார்கள். அவற்றை தங்களை மேம்படுத்துவதற்கான ஒரு கருவியாக பார்ப்பார்கள். விமர்சனங்களை புறக்கணிக்காமல், தங்களை வளர்த்துக்கொள்ளும் ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்கிறார்கள்.
6. எதிர்மறை தாக்கங்களுடன் சூழ்ந்திருத்தல்: புத்திசாலிகள் எப்போதும் நேர்மறை சிந்தனை மற்றும் செயல் கொண்டவர்கள். தங்களைச் சுற்றிலும் எதிர்மறை எண்ணங்கள் கொண்ட நபர்கள் இருந்தால் அல்லது எதிர்மறையான சூழல்கள் இருந்தால் அவர்களுடன் நேரத்தை செலவிடுவதை தவிர்த்து விடுவார்கள். நச்சுத்தன்மையுள்ள நபர்களை விலக்கி விட்டு, தங்கள் இலக்குகளில் மட்டும் கவனம் செலுத்துகிறார்கள்.
7. தனது தோல்விக்கு பிறரை குறை கூறுதல்: தான் செய்யும் செயல்களில் தோல்விகள் ஏற்பட்டால், அதற்குப் பிறரை காரணம் காட்டி குறை கூறுவதில்லை புத்திசாலிகள். மாறாக, தங்கள் செயல்களுக்கும் விளைவுகளுக்கும் தாங்களே பொறுப்பேற்கிறார்கள். விஷயங்கள் தவறாக நடக்கும்போது தாங்கள் என்ன தவறு செய்தோம் என்பதை சிந்தித்து அதிலிருந்து மீள கற்றுக் கொள்கிறார்கள்.
8. கம்ஃபோர்ட் சோனை விட்டு வெளியேறாமல் இருப்பது: பழகிய, பிடித்த இடம், வேலை, சூழ்நிலை போன்றவற்றை காரணம் காட்டி கம்ஃபோர்ட் சோனில் அவர்கள் ஒருபோதும் இருக்க மாட்டார்கள். மாறாக புதிய சூழ்நிலைகள், புதிய வேலைகள், புதிய மனிதர்களுடன் பணிபுரிய அவர்கள் தயாராக இருப்பார்கள். அதற்காக அவர்கள் சவால்கள், போராட்டங்கள், சிக்கல்களை சந்திக்க நேர்ந்தாலும் அஞ்ச மாட்டார்கள். கம்ஃபோர்ட் சோனை விட்டு வெளியே வந்தால்தான் வளர்ச்சி என்பதை அவர்கள் நன்றாக அறிவார்கள். இந்த எட்டு குணாதிசயங்கள் யாரிடம் இருக்கிறதோ அவர்கள் நிச்சயம் புத்திசாலிகள் என்பதில் சந்தேகமே இல்லை.