18 வயது ஆகாமல் டூவீலர் ஓட்டினால்... பெற்றோர்களே கவனியுங்கள்!

Teenage boy driving a bike
Teenage boy driving a bike
Published on

ஒரு காலத்தில் அரசு வேலை செய்பவர்களிடம் கூட டூவீலர் இருக்காது. சைக்கிளில் தான் சென்று வருவார்கள். ஆனால் இப்போது பள்ளி செல்லும் குழந்தைகளே பைக்கில் பறக்கின்றனர். இதனால் ஏற்படும் ஆபத்துகளை பெற்றோர்கள் சரிவர அறிவதில்லை. சிலர் அறிந்தும் சிந்திப்பதில்லை.

இன்றைய காலகட்டத்தில் ஒரு வீட்டுக்கு குறைந்தபட்சம் இரண்டு டூவீலர்கள் என்றாகிவிட்டது. பள்ளி படிக்கும் மகன் அல்லது மகள் கேட்கிறார்கள் என்பதற்காக, அவர்களுக்கும் ஒரு டூவீலர் வாங்கி கொடுக்க வேண்டிய கட்டாயம் பெற்றோர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதில் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் என்றால் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் தான். அப்படி இருக்க அவர்களுக்கு லைசென்ஸ் வாங்க முடியாது. லைசன்ஸ் வாங்கினால் தான் டூவீலர் உட்பட அனைத்து ரக வாகனங்களையும் இயக்க முடியும் என்பது அரசு விதி. ஆனால் குழந்தைகள் நச்சரிக்கிறார்களே என்பதற்காக கடன் வாங்கியாவது இருசக்கர வாகனங்களை வாங்கி கொடுக்கின்றனர் பெற்றோர். அதில் செல்லும் குழந்தைகள் சாலை விதிகள் பற்றி சிறிதும் அறியாதவர்கள். வண்டியில் ஏறி அமர்ந்து ஆக்ஸிலேட்டரை சொடுக்கினால் வண்டி பறக்கிறது. அவ்வளவுதான் அவர்களுக்கு தெரிந்தது. இதனால் பல இடங்களில் சிறிய மற்றும் பெரிய அளவிலான விபத்துக்கள் ஏற்படுகின்றன.

இப்போதும் பாதிக்கப்படுவது பெற்றோர்கள் தான். ஏனெனில் மகன் அல்லது மகள் ஆசைப்பட்டார்களே என்பதற்காக அவர்களின் ஆசை நிறைவேற்றி அதுவே அவர்களின் துயரத்துக்கும் காரணமாக அமைந்தால் அவர்கள் என்னதான் செய்வது?

தங்கள் குழந்தைகள் கேட்டால், பெற்றோர்கள் இருக்கும் நிலவரத்தை அவர்களுக்கு விளக்கி கூற வேண்டும். இப்போது அரசு, குழந்தைகள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு ஏதும் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது பலருக்கும் தெரிந்திருக்கும். சிலருக்கு தெரிந்திருக்காது.

இதையும் படியுங்கள்:
கணவன், மனைவி உறவு என்றும் கசக்காமல் இருக்க சில யுக்திகள்!
Teenage boy driving a bike

குழந்தைகள் கேட்டாலும்,18 வயது முடிந்த பின்னர் கல்லூரிக்கு சென்றதும் டூவீலர் வாங்கித் தருகிறேன் என அவர்களை சமாதானம் செய்ய வேண்டும். அதிலும் அதிவிரைவு இரு சக்கர வாகனம் வாங்கி தர மாட்டோம், சாதாரண நூறு சிசி திறன் கொண்ட வாகனம் மட்டுமே வாங்கி தருவோம் என அவர்களிடம் நீங்கள் கண்டிப்பாக கூறி விட வேண்டும்.

அதிவேகமாகச் செல்லும் வாகனங்களில் சென்று விபத்து ஏற்பட்டால் அதன் விளைவு மிகவும் பயங்கரமானதாக இருக்கும். இதையும் பள்ளிப் பருவத்திலேயே மாணவர் மனதில், பெற்றோர்கள் பதிய வைக்க வேண்டும். எல்லாவற்றையும் கேட்டு, மிகவும் முரண்டு பிடித்தால், தெரிந்த போலீஸ் நண்பர்கள் மூலமாக அன்பாக விளக்கி கூற வைக்க வேண்டும்.

மாணவர்களின் பாதுகாப்பான எதிர்காலத்திற்கு பெற்றோர்கள் சிறிது கட்டுப்பாடுடன் இருப்பதில் எந்த தவறும் இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com