
வேலைக்குச் செல்வோர், பள்ளி செல்லும் குழந்தைகள் என அனைவரும் உணவை எடுத்துச் செல்ல லஞ்ச் பாக்ஸைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், சில சமயங்களில் இந்த லஞ்ச் பாக்ஸ்களில் இருந்து விரும்பத்தகாத துர்நாற்றம் வீசத் தொடங்குகிறது. பசியோடு இருக்கும் நேரத்தில், இப்படி துர்நாற்றத்துடன் கூடிய உணவை சாப்பிட யாருக்குமே மனம் வராது. குறிப்பாக, குழந்தைகள் பலர் இதனால் உணவை சாப்பிடாமல் திரும்புகின்றனர். ஆனால், இந்த துர்நாற்றத்தை போக்க சில எளிய வழிகள் உள்ளன.
1. கழுவிய பின் உலர வைக்கவும்:
லஞ்ச் பாக்ஸில் துர்நாற்றம் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, அதை சரியாக உலர விடாமல் மூடி வைப்பதுதான். உணவை சாப்பிட்ட பிறகு, லஞ்ச் பாக்ஸை நன்றாக கழுவ வேண்டும். சோப்பு மற்றும் வெந்நீரைப் பயன்படுத்தி கழுவுவது சிறந்தது. கழுவிய பின், லஞ்ச் பாக்ஸை உடனடியாக மூடி வைக்கக் கூடாது. அதற்கு பதிலாக, அதன் மூடியை திறந்து, காற்றோட்டமான இடத்தில் சிறிது நேரம் உலர வைக்க வேண்டும்.
2. உருளைக்கிழங்கு மற்றும் உப்பு:
உருளைக்கிழங்கு ஒரு இயற்கையான சுத்திகரிப்பான். இது லஞ்ச் பாக்ஸில் உள்ளன துர்நாற்றத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது. ஒரு உருளைக்கிழங்கை எடுத்து, அதை இரண்டாக வெட்டிக் கொள்ளவும். வெட்டிய உருளைக்கிழங்கின் மீது சிறிது உப்பைத் தூவவும். உப்பைத் தூவிய பகுதியை லஞ்ச் பாக்ஸின் உட்புறம் நன்றாக தேய்க்கவும். பிறகு, 15-20 நிமிடங்கள் அப்படியே ஊற விட்டு பின்னர் கழுவவும்.
3. இலவங்கப்பட்டை அல்லது எலுமிச்சை தோல்:
இலவங்கப்பட்டை, எலுமிச்சை தோல் இரண்டும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. இலவங்கப்பட்டையை சிறிய துண்டுகளாக உடைத்து, தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். கொதித்த தண்ணீரை லஞ்ச் பாக்ஸ் மற்றும் தண்ணீர் பாட்டிலில் ஊற்றி, 10-15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பின்னர், வெதுவெதுப்பான நீரில் கழுவினால் துர்நாற்றம் நீங்கும். இலவங்கப்பட்டைக்கு பதிலாக, எலுமிச்சை தோல்களையும் இதே முறையில் பயன்படுத்தலாம்.
4. பேக்கிங் சோடா:
பேக்கிங் சோடா ஒரு சிறந்த சுத்திகரிப்பான். இது துர்நாற்றத்தை உறிஞ்சும் பொருள். லஞ்ச் பாக்ஸை கழுவிய பிறகு, ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவை உள்ளே தூவி, இரவு முழுவதும் அப்படியே வைக்கவும். காலையில் லஞ்ச் பாக்ஸை தண்ணீரில் கழுவினால், துர்நாற்றம் நீங்கிவிடும். அல்லது, வெதுவெதுப்பான நீரில் பேக்கிங் சோடாவை கலந்து, அந்த நீரில் லஞ்ச் பாக்ஸை சிறிது நேரம் ஊற வைத்தும் கழுவலாம்.
5. வினிகர்:
வினிகர் ஒரு இயற்கையான கிருமி நாசினி. இது லஞ்ச் பாக்ஸில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, துர்நாற்றத்தை நீக்க உதவுகிறது. வெதுவெதுப்பான நீரில் வினிகரை கலந்து, அந்த கரைசலில் லஞ்ச் பாக்ஸை சிறிது நேரம் ஊற வைக்கவும். பின்னர், சுத்தமான நீரில் கழுவினால் துர்நாற்றம் நீங்கிவிடும். வினிகர் வாசனை போக, லஞ்ச் பாக்ஸை சிறிது நேரம் உலர வைக்கவும்.