

நமக்குப் பிடித்த நபர் நம்மைக் காயப்படுத்தும்போது முதலில் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். அந்த வலியை தாங்கிக்கொள்ள முடியாமல் தவித்துப்போய் விடுவோம். ஆனால், சிறிது நிதானமாக சிந்தித்துப் பார்த்தோமேயானால் அவர்கள் ஏன் நம்மை காயப்படுத்த வேண்டும் என்று யோசிக்க யோசிக்க பதில் கிடைக்கும். அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு பொறுமையாகப் பேசி தீர்க்க முயற்சி செய்யலாம். அது பலனளிக்காத சமயத்தில் அவர்களை விட்டு விலகிச் செல்வது நல்லது.
யாரையும் காயப்படுத்தி விடக் கூடாது என்று மிகவும் கவனமாக இருப்பவர்கள்தான் அதிகமாகக் காயப்படுகிறார்கள். பிடித்த நபர் என்றாலும், பிடிக்காத நபராகவே இருந்தாலும் கூட நம் மீது தவறு எதுவும் இல்லாதபோது ஏன் காயப்படுத்த வேண்டும்? நம் மீது ஏதேனும் தவறு இருந்தால், அவர்கள் நம்மை உதாசீனப்படுத்தினாலும் நாமே வலியச் சென்று பேசி மன்னிப்பு கேட்டு, செய்த தவறுக்காக வருந்தலாம். அதுவே நம் மீது தவறு எதுவும் இல்லாதபொழுது காயப்படுத்தினால் விலகி விடுவதுதான் நல்லது.
பொதுவாகவே, மனிதர்களுக்கு இயல்பாய், ஆனந்தமாய் இருக்கத் தெரிவதில்லை. அடுத்தவர்களை கஷ்டப்படுத்தி, காயப்படுத்தி மகிழ்ச்சி கொள்பவர்கள்தான் இங்கு அதிகம். இயல்பிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் எவரும் அடுத்தவரை காயப்படுத்த விரும்ப மாட்டார்கள். நமக்குப் பிடித்தவர்கள் நம்மைக் காயப்படுத்துவது ஒருவேளை அதீத அன்பின் காரணமாகக் கூட இருக்கலாம். அதிக உரிமை எடுத்துக் கொள்வதன் காரணமாகவும் இருக்கலாம். அவர்களுக்கு மட்டுமே நாம் சொந்தம் என்று நினைப்பதும், பிறரிடம் நாம் சிரித்துப் பேசுவதைப் பார்க்க சகிக்காமல் காயப்படுத்துபவர்களாக இருப்பார்கள்.
இப்படி ஓவராக நம்மிடம் ஆதிக்கம் செலுத்துபவர்களிடம் மனம் விட்டுப் பேசலாம். நீங்கள் எப்படி எனக்கு முக்கியமோ அதுபோல் அவர்களும் எனக்கு முக்கியம் என்று புரிய வைக்க முயற்சிக்கலாம். ஒருவரை நமக்குப் பிடித்தால் மட்டும் போதுமா? அவருக்கும் நம்மைப் பிடிக்க வேண்டும் அல்லவா? சிலர் பிறரை எப்பொழுதும் சொல்லாலும், செயலாலும் காயப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.
இத்தகைய சுயநல எண்ணங்கள் கொண்டவர்களை நினைத்து வருந்த வேண்டியது இல்லை. இப்படிப்பட்டவர்கள் பிறர் காயப்பட்டாலும் கவலைப்படுவதில்லை. தான் மகிழ்ச்சியாக இருந்தால் போதும் என்று எண்ணுவார்கள். அப்படிப்பட்டவர்களிடம் எதிர்பார்ப்பது நம் தவறுதானே!
நமக்குப் பிடித்தவர்கள் நம்மை காயப்படுத்தும்போதுதான் அவர்களது இனிமையான நினைவுகள் அதிகமாகத் தூண்டப்படுகிறது. எப்படி எல்லாம் நம்முடன் அன்பாக பழகினார்கள், ஆசையாக பேசினார்கள், இப்படி மாறிவிட்டார்களே என்று மனதிற்குள் புழுங்கி விடத் தோன்றுகிறது. இல்லாதவற்றையும், இழந்தவற்றையும் பற்றி ஆழமாக யோசிக்கத் தோன்றுகிறது. நாம் பேசத் துடிக்கும் வார்த்தைகளை கேட்கக் கூட விருப்பம் இல்லாமல் நகர்பவர்களை நினைத்து வருத்தப்படுவதை விட, இனி நாம் என்ன பேசினாலும் தப்பாகத்தான் தெரியும் என்று உணர்ந்து ஒதுங்கி விடுவதே, விலகி விடுவதே நல்லது.