

சமையலறையில் சேமிக்கப்படும் மளிகை சாமான்கள், சர்க்கரை, தின்பண்டங்கள் மற்றும் பழங்களை எறும்புகளிடமிருந்து பாதுகாப்பது மிகவும் முக்கியம். அதிலும் மழைக்காலங்களில் எறும்புகளை சமாளிப்பது சவாலான விஷயமாக இருக்கிறது. அந்த வகையில் சமையலறைக்குள் எறும்புகள் நுழையாமல் பார்த்துக் கொள்ளும் சில வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. காற்று புகாத டப்பாக்களில் சேமிக்கவும்: கண்ணாடி, ஸ்டீல் அல்லது பிளாஸ்டிக் கண்டெய்னர்கள் இறுக்கமான மூடிகளைக் கொண்டுள்ளதால் அவற்றில் மளிகை சாமான்கள், சர்க்கரை, மாவு வகைகள், அரிசி மற்றும் தின்பண்டங்கள் போன்றவற்றை போட்டு வைக்கும்போது எறும்புகளுக்கு அந்த உணவின் வாசனை தெரியாது என்பதால் அவற்றுக்குள் எறும்புகள் நுழைய முயற்சிக்காது. ஆகவே, இத்தகைய ஜாரில் சேமித்து வைக்கலாம்.
2. சிந்திய உணவுப் பொருட்களை உடனடியாக சுத்தம் செய்யவும்: வீட்டிற்குள் தவறுதலாக உணவுப் பொருட்கள் கொட்டி விட்டால் அதனை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும். அதோடு, மளிகை சாமான்களை போட்டு வைத்திருக்கும் கண்டெய்னர்கள் அல்லது பாட்டில்களின் வெளிப்புறத்தில் உணவுப்பொருட்கள் ஒட்டி இருக்காமல் பார்த்துக்கொள்வதன் மூலம் எறும்பு தொல்லையில் இருந்து விடுபடலாம்.
3. இயற்கை பூச்சி விரட்டியாக செயல்படும் வினிகர்: வினிகர் எறும்புகளை விரட்டும் பூச்சி மருந்தாக செயல்படுகிறது. சம அளவு தண்ணீரில் வினிகரை கலந்து அந்தத் தண்ணீரை செல்ஃபுகள், கவுண்டர் டாப் மற்றும் ஸ்டோரேஜ் பெட்டிகளை துடைத்தால் இந்த வாசனைக்கு எறும்புகள் வராது.
4. பிரியாணி இலை: எறும்புகளுக்கு பிரியாணி இலை மற்றும் கிராம்புகளின் வலிமையான வாசனை பிடிக்காது. ஆகவே, அரிசி மாவு மற்றும் மளிகை சாமான்கள் வைத்திருக்கும் இடங்களில் ஒரு சில பிரியாணி இலைகள் அல்லது கிராம்புகளை போட்டு வைப்பது எறும்பை விரட்டும் பாதுகாப்பான பயனுள்ள வழியாக இருக்கிறது.
5. விரிசல்கள் மற்றும் இடைவெளிகளை அடைக்கவும்: எறும்புகள் எளிதாக கதவு, ஜன்னல் போன்ற இடங்களில் உள்ள சிறு விரிசல்கள் மற்றும் இடைவெளிகள் மூலமாகவே நுழையும் என்பதால் உடனடியாக இது மாதிரியான நுழைவு வாயில்கள் இருப்பதை கவனித்தால் அதனை அடைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
6. பழங்கள் மற்றும் காய்கறிகளை உலர்ந்த நிலையில் வைக்கவும்: எறும்புகள் விரைவாக ஈரப்பதமாக இருக்கும் உணவுப்பொருட்கள் மீது வந்தடையும் என்பதால் பழங்கள் மற்றும் காய்கறிகளை கழுவிய பிறகு சேமித்து வைப்பதற்கு முன்பு அவற்றை உலர்த்தி வைக்க வேண்டும்.
7. எலுமிச்சை தோல் அல்லது சிட்ரஸ் தண்ணீர்: எறும்புகளுக்கு சிட்ரஸ் வாசனை பிடிக்காது என்பதால் மளிகை சாமான் வைத்திருக்கும் செல்ஃபுகளுக்கு அருகில் எலுமிச்சை தோல்களை வைப்பதோடு ,எலுமிச்சை சாற்றை ஆங்காங்கே ஸ்பிரே செய்யலாம். இது இடத்தை சுத்தப்படுத்துவதோடு எறும்புகளையும் விரட்டும்.
8. மஞ்சள் தூள் அல்லது உப்பு: எறும்புகள் சாரை சாரையாக வரும்போது அதற்கு இடையில் உப்பு, மஞ்சள் தூள் கொண்டு கோடு போல வரைந்தால் அதனைத் தாண்டி எறும்புகள் வராது.
மேற்கூறிய வழிமுறைகளை கையாள்வதன் மூலம் எறும்புகள் தொல்லையிலிருந்து விடுபடலாம்.