

வீடாக இருந்தாலும் சரி, ஆபீஸாக இருந்தாலும் சரி, உறவினர்களாக இருந்தாலும் சரி, சில நேரங்களில் நாம் அவர்களின் செயல்களை தவறாகப் புரிந்து கொண்டு வேண்டாத பிரச்னையை உருவாக்குகிறோம். அலுவலகத்தை எடுத்துக்கொண்டோமேயானால் ஆறு அல்லது ஏழு பேர் இணைந்துதான் ஒரு டீமாக செயல்படுவோம். எந்த வேலையாக இருந்தாலும் அந்த டீமின் வளர்ச்சி என்று சொல்லும்போது அந்த டீமில் உள்ள அத்தனை உறுப்பினர்களும் சேர்ந்துதான் ஒரு வேலையை செய்கிறார்கள். எல்லோருடைய ஒத்துழைப்புமே அதில் இருக்கிறது.
அதைப்போல வீட்டிலும், அனைவரின் ஒத்துழைப்பால்தான் குடும்பம் நன்றாக நடக்கிறது. அதைப்போலவே சமுதாயத்தைப் பொறுத்தவரையில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் ஒத்துழைப்பாலும் உதவியினாலும்தான் நம் வாழ்க்கைமுறை சீராகவும் அமைதியாகவும் நடைபெறுகிறது. இதை நாம் எல்லோருமே கண்டிப்பாக ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
இப்போது பிரச்னை என்னவென்றால், சில நேரங்களில் நம் டீமில் உள்ளவர்களோ அல்லது வீட்டுக்கு அருகில் இருப்பவர்களோ அல்லது உறவினர்களோ எங்கேயோ அவசரமாக சென்று கொண்டிருப்பார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த நேரம் பார்த்து, அவர்கள் எதிரில் நாம் செல்லும்போது நமக்கு அவர்கள் ‘ஹலோ’ என்று சொல்லாமலோ அல்லது கவனிக்காமல் வேகமாக சென்று விட்டாலோ, அதை நாம் தவறாக எடுத்துக் கொள்கிறோம்.
‘அவர் என் எதிரில் மிக அருகில்தான் சென்றார், என்னைப் பார்த்து விட்டு, ஒரு ஹாய் கூட சொல்லவில்லை, நிற்காமல் பேசாமலேயே வேகமாக போய் விட்டார். என்ன கோபமோ? இல்லை கர்வமோ? யாருக்குத் தெரியும்?’ என்று தனக்குத்தானே நாம் தப்புக் கணக்கு போட்டுக் கொள்கிறோம்.
இதைப்போலவே ஒருசில பேர் யாரிடமாவது ஏதாவது உதவி கேட்டிருப்பார்கள், தன்னுடைய சக ஊழியர்களிடமோ அல்லது பக்கத்து வீட்டுக்காரர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ இல்லை நண்பர்களிடமோ கேட்டிருப்பார்கள். ஆனால், அவர்கள் அதற்கு பதில் சொல்ல சிறிது அவகாசம் எடுத்துக்கொண்டால் இவர்களுக்கு அது தவறாகி விடும். ‘ஆபீஸ்ல கூடவே இருக்கிறான், பக்கத்து வீட்ல கூடவே இருக்கிறான், நெருங்கிய உறவுக்காரன் என்றுதான் பேரு, கேட்ட நேரத்துக்கு ஹெல்ப் கூட பண்ணாம, பதில் கூட சொல்லாம இருக்கான்’ என்று புலம்புவார்கள். அவர்களுக்கு என்ன பிரச்னை, என்ன சூழ்நிலை என்பதை பற்றியெல்லாம் கொஞ்சம் கூட சிந்திப்பதே கிடையாது.
ஒருவர் உங்களைப் பார்க்கும்போது ஹலோ சொல்லவில்லை என்றாலோ அல்லது நீங்கள் ஏதோ ஒன்று கேட்டு அதற்கு பதில் சொல்லவில்லை என்றாலோ, அதற்கான அர்த்தம் இதுவல்ல. அவர் உங்களை அவாய்ட் செய்கிறார் என்று நீங்களே தனக்குத் தானே அப்படி எடுத்துகொண்டு மறுநாள் அவர்கள் பேசினால் கூட பேசாமல் இருப்பீர்கள். அதன் விளைவு விரிசல்தான் ஏற்படும்.
உண்மையிலேயே நீங்கள் அவர்களை உயிருக்கு உயிராக நேசிப்பவர்களேயானால் நீங்கள் அவர்களிடமே நேரடியாகக் கேட்கலாமே, ‘நேற்று உங்களைப் பார்த்தேன், ஏன் எதுவும் பேசாமல் போய் வீட்டீர்கள்’ என்று. ஏதாவது உதவி கேட்டு பதில் சொல்லவில்லை என்றாலும், ‘என்னப்பா, உன்னால முடியலை என்றால் பரவாயில்லை, எனக்கென்னவோ நீயோ ஏதோ பிரச்னையில் இருக்கிற மாதிரி தோன்றுகிறது, நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று கூறுங்கள்.
அவர்களுடைய சூழ்நிலை என்ன என்று மறுபக்கம் நீங்கள் ஆராய வேண்டும். அப்போதுதானே உண்மை புரியும். உங்களுக்கு எப்படி பிரச்னைகள் இருக்கிறதோ அதைப் போலத்தான் எல்லோருக்குமே என்பதைப் புரிந்து கொண்டீர்களேயானால் இந்த மாதிரியான சிந்தனைகள் உங்களுக்கு வரவே வராது.