

உங்களுடைய போனை சார்ஜ் போட்டுவிட்டு, அவசரத்தில் சார்ஜர் கேபிளை மட்டும் சுவரில் இருக்கும் பிளக்கிலேயே தொங்கவிட்டுச் செல்லும் பழக்கம் உண்டா? 'இதில் என்ன தவறு இருக்கிறது?' என்று நீங்கள் நினைக்கலாம். ஒரு சாதாரண பழக்கமாகத் தோன்றும் இது, சில மிக முக்கியமான பின்விளைவுகளைக் கொண்டிருக்கிறது.
போனில் இணைக்கப்படாமல் பிளக்கில் மட்டும் இருக்கும் சார்ஜர், ஒரு சிறு அளவு மின்சாரத்தை தொடர்ந்து இழுத்துக் கொண்டே இருக்கும். இதைத்தான் 'ஃபாண்டம் பவர்' (phantom power) அல்லது 'வேம்பயர் எனர்ஜி' (vampire energy) என்று அழைக்கிறார்கள். இது ஒரு வாட்டிற்கும் (watt) குறைவாக இருந்தாலும், உங்கள் வீட்டில் பல சார்ஜர்கள் இவ்வாறு பிளக்கில் இருந்தால், காலப்போக்கில் மின்சார விரயம் அதிகமாகும். மின் கட்டணத்தைக் குறைக்க நினைப்பவர்களுக்கு, இது மிகவும் எளிய மற்றும் பயனுள்ள ஒரு பழக்கமாகும்.
நல்ல தரமான, சான்றளிக்கப்பட்ட சார்ஜர்கள் எப்போதும் பிளக்கில் இருக்கும்போது பாதுகாப்பாகவே இருக்கும். ஆனால், மலிவான, அல்லது சேதமடைந்த சார்ஜர்கள் இருந்தால், அதுவே அபாயத்தின் அறிகுறி. குறைந்த தரமுள்ள சார்ஜர்களில் வெப்பத்தை ஒழுங்குபடுத்தும் வசதி குறைவாக இருக்கும். அவை நீண்ட நேரம் பிளக்கில் இருக்கும்போது அதிகமாக வெப்பமடைய வாய்ப்புள்ளது.
சார்ஜரால் தீ விபத்து ஏற்படுவது மிகக் குறைவுதான் என்றாலும், சேதமடைந்த அல்லது கம்பி வெளியே தெரியும் சார்ஜர்கள் ஆபத்தை உருவாக்கலாம். உங்கள் சார்ஜர் சூடாக இருந்தாலோ, கம்பி கிழிந்திருந்தாலோ, உடனடியாக அதை மாற்றுவது அவசியம்.
சார்ஜர்களை எப்போதும் பிளக்கிலேயே விட்டுச் செல்வது, அதன் உட்புற பாகங்களை மெதுவாகச் சிதைக்கக்கூடும். அதன் ஆயுட்காலத்தைக் குறைக்கலாம். சார்ஜர் எப்போதுமே பிளக்கில் இருப்பதால், அது தேவைப்படும்போது திடீரென வேலை செய்யாமல் போகவும் வாய்ப்புள்ளது.
ஒரு தனிப்பட்ட சார்ஜரால் சுற்றுச்சூழலுக்குப் பெரிய பாதிப்பு இல்லைதான். ஆனால், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தாத சார்ஜர்களை பிளக்கில் விடும்போது, வீணாகும் மின்சாரம் அதிகாமாகும். மின்சாரத்தை மிச்சப்படுத்துவதன் மூலம், சுற்றுச்சூழலுக்கு உங்கள் பங்களிப்பை வழங்க முடியும்.
எனவே, உங்கள் சார்ஜரைப் பயன்படுத்தாதபோது அதை பிளக்கிலிருந்து அகற்றுவது என்பது ஒரு மிகச் சிறிய செயல். இது தேவையற்ற மின் விரயத்தைக் குறைக்கும். உங்கள் சார்ஜரின் ஆயுளை நீட்டிக்கும். மேலும், தரமற்ற சார்ஜர்களால் ஏற்படும் சிறிய வெப்ப அபாயத்தைக் கூட தவிர்க்கும்.