காலையில் எழுந்ததும் நாம் செய்யும் முதல் வேலை பல் துலக்குவதுதான். டிவி விளம்பரங்களைப் பார்த்தால், பிரஷ் முழுவதும் நிரம்பி வழியும் அளவுக்கு டூத் பேஸ்ட் வைப்பார்கள். அதைப் பார்த்து நாமும், "ஓகோ.. நிறைய பேஸ்ட் வைத்தால்தான் பல் பளிச்சென்று இருக்கும் போல" என்று நினைத்து, பிரஷ்ஷில் தாராளமாக பேஸ்ட்டை பிதுக்கித் தேய்ப்போம். ஆனால், உண்மையில் நாம் செய்வது மிகப்பெரிய தவறு. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது டூத் பேஸ்ட்டுக்கும் பொருந்தும்.
விளம்பர மாயை!
சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பல் மருத்துவ நிபுணர் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் அவர், "விளம்பரங்களில் காட்டுவது போல பிரஷ் முழுவதும் பேஸ்ட் வைப்பது தேவையற்றது, அது வெறும் வியாபார உத்தி" என்று போட்டுடைத்துள்ளார். அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம் (CDC) நடத்திய ஆய்வில் கூட, 40 சதவீத மக்கள் தேவைக்கு அதிகமான பேஸ்ட்டை பயன்படுத்துவதாகத் தெரியவந்துள்ளது.
வயதுக்கு ஏற்ற சரியான அளவு என்ன?
உங்கள் வீட்டில் சின்னக் குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கு ஒரு அரிசி மணி அளவுக்கு பேஸ்ட் வைத்தாலே போதுமானது. அவர்கள் துப்பக் கற்றுக்கொள்ளும் வரை இந்த அளவே சிறந்தது.
மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் நாம் எல்லோருமே, ஒரு பட்டாணி அளவுக்கு பேஸ்ட் பயன்படுத்தினாலே போதும். அதுவே பற்களைச் சுத்தம் செய்யத் தாராளமானது.
அதிகமாகப் பயன்படுத்தினால் என்ன ஆபத்து?
டூத் பேஸ்ட்டில் 'ஃப்ளூரைடு' என்ற வேதிப்பொருள் இருக்கும். இது அளவுக்கு அதிகமானால், பற்களில் வெள்ளைப் புள்ளிகள் அல்லது கோடுகள் விழும் 'டெண்டல் ஃப்ளூரோசிஸ்' என்ற பிரச்சனை வரும்.
குழந்தைகள் நிறைய பேஸ்ட் வைத்துத் தேய்க்கும்போது, அதை அறியாமல் விழுங்கிவிட வாய்ப்புள்ளது. இதனால் வயிறு எரிச்சல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.
அதிக பேஸ்ட் அதிக நுரையை உண்டாக்கும். இதனால் வாயில் ஒருவித அசௌகரியம் ஏற்பட்டு, சீக்கிரம் வாய் கொப்பளிக்கத் தோன்றும். இதனால் முழுமையாகப் பல் தேய்க்க மாட்டோம். மேலும், இது பற்களின் மேல் உள்ள எனாமலைத் தேய்த்து, ஈறுகளில் எரிச்சலை உண்டாக்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு இது வாந்தி உணர்வைத் தூண்டும்.
எனவே, இனிமேல் பல் தேய்க்கும்போது விளம்பரங்களை மனதில் வைக்காதீர்கள். பெரியவர்கள் பட்டாணி அளவும், சிறியவர்கள் அரிசி அளவும் பயன்படுத்தினாலே போதும்.