

ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயமே பிரதான வாழ்க்கையாக இருந்தது. நமது பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்தே நிலத்தை அன்புடன் உழுது பயிர் செய்து விவசாயத்தில் வெற்றி கண்டனர். முப்போகமும் விளையும் பூமியை அவர்கள் தெய்வமாக கருதி ஆராதித்து வழிபட்டனர்.
விவசாயம் மட்டுமல்ல, கால்நடை வளர்ப்பும் அவர்களின் கைவந்த கலையாக இருந்தது. மாடு, எருது, ஆடு போன்ற கால்நடைகள் குடும்பத்தின் ஒரு பகுதியாகவே கருதப்பட்டன. அறுவடை காலத்தில் வயலில் விளைந்த பயிர்களை விவசாயி தான் மட்டும் உண்ணாமல், தன்னுடன் உழைத்த தொழிலாளர்களுடனும் பகிர்ந்து கொண்டார். இதனால் அனைவரும் மனமகிழ்ச்சியுடன் உழைத்து வளமான வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர்.
ஒரே நிலத்தில் பனை, தென்னை, கமுகு, மா, பலா, வாழை போன்ற மரங்களை அடுக்கு முறையில் வளர்த்து முழு நிலத்தையும் பயனுள்ளதாக பயன்படுத்தினர். இவ்வகையான விவசாய அறிவை நம் முன்னோர்கள் தலைமுறைகள் கடந்து பாதுகாத்து வந்தனர். இதனைப் பற்றி ஒளவையார் தனது பாடலில் குறிப்பிடுகிறார்:
“வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்.”
இந்த வரிகள் விவசாயம் வளர்ந்தால் மக்கள் வளமாக வாழ்வார்கள் என்பதை எடுத்துரைக்கின்றன. அன்றைய விவசாயி தன் வாழ்க்கையையே உயர்த்தாமல், தன் பிள்ளைகளையும் விவசாயத்தில் ஈடுபடச் செய்தார். அதோடு வேறு வகையான வர்த்தகங்களிலும் தொழில்களிலும் ஈடுபட்டு வாழ்வை சமநிலைப்படுத்தினார்.
ஆனால் காலங்கள் மாறின. குழந்தைகள் வளர்ந்து திருமணம் செய்து வேறு ஊர்களுக்கு குடிபெயரத் தொடங்கினர். அதே சமயம் இயற்கை மாற்றங்களாலும் பல ஆறுகள் வற்றி, நீர்ப்பஞ்சம் ஏற்பட்டது. காடுகள் வறண்டு, நெல் வயல்கள் காய்ந்து போனது. இதனால் விவசாயம் மெதுவாக பின்தங்கத் தொடங்கியது.
மனிதன் நகர வாழ்க்கையை நாட ஆரம்பித்தான். நகரத்தில் வாழலாம்; ஆனால் உணவுக்கு விவசாயம் அவசியம் என்பதை பலர் மறந்துவிட்டனர். விவசாயி இல்லாமல் உணவு கிடையாது என்ற உண்மையை இன்றைய தலைமுறை உணராமல் போயுள்ளது.
ஒரு காலத்தில் மாசி, பங்குனி மாதங்களில் வருடாந்திர தேவைக்கான பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி சேமித்து வைத்துக் கொண்டனர். “இல்லை” என்ற வார்த்தை அவர்கள் வாழ்க்கையில் இடம் பெறாதபடி முன்னேற்பாடுடன் வாழ்ந்தனர்.
ஆனால் இன்றைய தலைமுறை அதனை “பணமுடக்கம்” என்று கருதுகிறது. தேவையான நேரத்தில் பொருட்களை வாங்கிக்கொள்ள “Instant Delivery” போன்ற புதிய வணிக முறைகள் வளர்ந்து வருகின்றன. இதனால் வீடுகளில் சமையல் செய்யும் பழக்கமும் குறைந்து வருகிறது.
இந்த நிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில் கட்டப்படும் வீடுகளில் சமையலறை அல்லது பொருட்கள் சேமிக்கும் அலமாரிகள் கூட இல்லாமல் போகலாம் என்பது உண்மை போல தோன்றுகிறது. மேலும் வேகமான வாழ்க்கை முறையும் “Fast Food” கலாச்சாரமும் மக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.
வேலைப்பளு மற்றும் உடல்நலக் குறைபாடுகள் காரணமாக பலர் வீட்டுப் பொறுப்புகளுக்கு நேரம் ஒதுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
கல்வி கற்று வானுயரக் கட்டடங்கள் கட்டினால் போதும் என்று ஆகிவிட்டது. ஆனால் இந்த உலகம் முழுவதும் மக்கள் பசி பட்டினியால் அவதிப்படாமல் இருக்க விவசாயிகளும் விவசாய நிலங்களும் தேவை.
நகர் மற்றும் நகர்ப்புறங்களில், “நாங்கள் எங்கள் வீட்டின் மாடியில் தோட்டம் அமைத்து எங்களுக்கு தேவையான காய்கறிகளை விளைவித்துக் கொள்கிறோம்” என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறோம். ஆனால் காய், கனிகள் மட்டுமே வாழ்க்கை அல்ல; மற்ற தானியங்களும் தேவை என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
இந்நிலையிலே நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையையும், விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் மீண்டும் நினைவுகூர்ந்து, அதிலிருந்து நல்லவற்றை மீட்டெடுப்பதே இன்றைய காலத்தின் அவசியமாகும்.
பூமித்தாய் பசுமையாக இருந்தால் மட்டுமே நாமும் நம் தலைமுறையினரும் புசித்து வாழ முடியும் என்பதை உணர்ந்து, விவசாயத்தை காப்போம்.