

முதல் ஏழு சிறிய கிண்ணங்கள் இருப்பதற்குப் பின்னால் ஆரோக்கியம், அறிவியல், மருத்துவ காரணங்கள் மற்றும் சமையல் கலை சார்ந்த பல முக்கியமான காரணங்கள் உள்ளன. இது வெறும் சேமிப்பு பெட்டி மட்டுமல்ல, இந்தியாவின் பாரம்பரிய ரகசியமாகும். ஆயுர்வேதத்தின்படி, ஒரு முழுமையான உணவு என்பது ஆறு சுவைகளையும் (இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு) கொண்டிருக்க வேண்டும். மசாலா டப்பாவில் உள்ள 6 அல்லது 7 கிண்ணங்கள் இந்த சுவைகளை வழங்கும் முதன்மை மசாலாக்களைக் கொண்டிருக்கின்றன. இது உடலின் மூன்று தோஷங்களை அதாவது வாதம், பித்தம், கபம் போன்றவற்றை சமநிலையில் வைக்க உதவுகிறது.
வட்ட வடிவத்தில் காணப்படும் இந்த மசாலா டப்பாவின் ரகசியங்கள்:
அஞ்சறைப் பெட்டி என்று அழைக்கப்படும் இந்த டப்பாவில் ஆரம்ப காலத்தில் ஐந்து முக்கிய பொருட்கள் மட்டுமே வைக்கப்பட்டன. காலப்போக்கில் சமையல் தேவைகளுக்காக இது ஆறு அல்லது ஏழு கிண்ணங்களாக மாற்றமடைந்தது. இந்த டப்பாக்களில் சமையலுக்கு தினமும் தேவைப்படும் கடுகு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், வெந்தயம்/பெருங்காயம், உளுத்தம் பருப்பு/கடலைப்பருப்பு என மிக முக்கியமான மசாலாக்கள் மட்டுமே வைக்கப்படுகின்றன.
ஒவ்வொரு முறை சமையல் செய்யும் பொழுதும் தனித்தனி டப்பாக்களைத் தேடித் திறக்கும் நேரத்தை மிச்சப்படுத்துவதற்கு இந்த வடிவமைப்பு உதவுகிறது. இந்திய சமையலில் தினமும் தாளிப்பதற்கும், சுவையூட்டுவதற்கும் முக்கிய மசாலாக்கள் அத்தியாவசியமானவை.
சமையல் வேகமும் நேர மேலாண்மையும்:
இந்திய சமையலில் பல வகையான மசாலாக்களை அடுத்தடுத்து மிகக் குறுகிய நேரத்தில் சூடான எண்ணெயில் போட வேண்டும். ஒவ்வொரு மசாலாவையும் தனித்தனி டப்பாவில் வைத்தால், ஒவ்வொன்றையும் தேடித் திறந்து மூடுவதற்குள் எண்ணெயில் இருக்கும் கடுகு அல்லது சீரகம் கருகிவிடும். ஒரே டப்பாவில் அனைத்தும் இருப்பதால் சமையல் வேகம் அதிகரிப்பதுடன், கைக்கெட்டும் தூரத்தில் அனைத்தும் தயாராக இருப்பதால் சமைக்கும் நேரமும் மிச்சம் ஆகிறது.
5/6/7 கிண்ணங்களின் ரகசியம்:
மசாலா டப்பாவில் உள்ள கிண்ணங்களின் எண்ணிக்கை சமையல் முறை மற்றும் தத்துவத்துடன் தொடர்புடையது.
ஐந்து பாத்திரங்கள் (பஞ்சபூதங்கள்):
நமது உடல் பஞ்சபூதங்களால் ஆனது போல அன்றாட சமையலுக்குத் தேவையான 5 முக்கிய மசாலாக்களை (கடுகு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், வெந்தயம்) இது குறிக்கிறது.
ஆறு பாத்திரங்கள் (அறுசுவை):
தமிழ் பாரம்பரியத்தின் படி உணவு என்பது இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு, உவர்ப்பு ஆகிய ஆறு சுவைகளையும் கொண்டிருக்க வேண்டும். அதற்குப் பயன்படும் மசாலாக்கள் இதில் அடங்கும்.
ஏழு பாத்திரங்கள் (வாரத்தின் ஏழு நாட்கள்/சப்தரிஷிகள்):
பொதுவாக பெரும்பாலான வீடுகளில் 7 கிண்ணங்கள் கொண்ட டப்பாவே பயன்படுத்தப்படுகிறது. இதில் அன்றாடம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் 7 முதன்மைப் பொருட்கள் வைக்கப்படுகின்றன.
பஞ்ச பூதங்களின் தத்துவம்:
வட்ட வடிவ டப்பாவிற்குள் வட்ட வடிவ கிண்ணங்கள் அமைக்கப்பட்டிருப்பதன் வடிவமைப்பு ரகசியம் தற்செயலானது அல்ல. இது ஆற்றல் மற்றும் பிரபஞ்ச வடிவத்தை குறிப்பதாகக் கருதப்படுகிறது. வட்ட வடிவம் சமையலறையில் நேர்மறை ஆற்றலைத் தரும் என்றும், மசாலாக்களின் வீரியம் குறையாமல் பாதுகாக்கும் என்றும் நம்பப்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆயுர்வேதம்:
இந்தப் பெட்டியில் இருக்கும் மசாலாக்கள் வெறும் சுவைக்காக மட்டுமல்ல, அவை ஒவ்வொன்றும் சிறந்த மருந்துகள். மஞ்சள் கிருமி நாசினி, சீரகம் செரிமானத்திற்கு, கடுகு காரத்தன்மை மற்றும் ஜீரணம், மிளகாய் தூள் உடலுக்குத் தேவையான வெப்பத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும், வெந்தயம் உடலின் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சியாக்கும், பெருங்காயம் வாயுத் தொல்லையை நீக்கும் என உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் பொருட்கள் எப்பொழுதும் கைக்கெட்டும் தூரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு.
காற்றுப் புகாத பாதுகாப்பு:
ஒரே பெரிய மூடி மூலம் அனைத்து மசாலாக்களும் மூடப்படுவதால், மசாலாக்களின் மணம் (Aroma) காற்றில் பறந்து போகாமல் நீண்ட நாட்களுக்குப் புதியதாகவே இருக்கும். வெளியில் இருக்கும் ஈரப்பதம் உள்ளே செல்லாமல் தடுப்பதுடன், மசாலாக்களின் நறுமணம் மற்றும் குணம் மாறாமல் அப்படியே வைத்திருக்க உதவும். சுருக்கமாகச் சொன்னால் இந்திய மசாலா டப்பி என்பது ஒரு சமையலறை மருந்தகம். சமையலை எளிமையாக்கவும், குடும்பத்தின் ஆரோக்கியத்தை அன்றாடம் காக்கவும் நம் முன்னோர்கள் உருவாக்கிய மிகச்சிறந்த வடிவமைப்பு இது.
நம் பாரம்பரிய அஞ்சறைப் பெட்டி என்பது வெறும் சமையல் சேமிப்புப் பெட்டி அல்ல; அது குடும்பத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ஒரு சமையலறை மருந்தகம் என்பதைப் புரிந்துகொண்டு, சமையலில் நேரத்தையும் சுவையையும் அதிகரிக்கலாம்.