

வீட்டில் உள்ள ஒவ்வொருவரையும் பார்த்துப் பார்த்து கவனித்து மகிழும் இல்லத்தரசிகள், பொதுவாக தங்களை கவனிக்க மறந்துவிடுவார்கள். எப்போதும் புத்துணர்ச்சி யுடனும் அழகாகவும் இல்லத்தரசிகள் தம்மை வைத்துக்கொள்ள உதவும் சில குறிப்புகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
அகத்தின் அழகு முகத்தில்:
அழகு என்பது ஒருவரின் சரும நிறத்திலோ அல்லது உடல் அமைப்பிலோ இல்லை. ஒருவருடைய மனநிலையில்தான் இருக்கிறது. ‘நான் இன்னும் கொஞ்சம் உயரமாக பிறந்திருக்கலாம், இன்னும் கொஞ்சம் சிவப்பாக இருந்திருக்கலாம்’ என்கிற மனநிலையை மாற்றிக் கொள்ளுங்கள். உங்களுடைய இயற்கையான உடல் அமைப்பையே அழகாக மாற்ற முடியும். தன்னுடைய உடல் அழகை நேசிக்கத் தொடங்குங்கள்.
மகிழ்ச்சியான மனநிலை:
எப்போதும் எதையாவது நினைத்துக் கவலைப்படுவதை விடுங்கள். ‘வெளியூரில் ஹாஸ்டலில் படிக்கும் மகன் சரியாக சாப்பிட்டானா, தூங்கினானா? கல்லூரிக்கு சென்றிருக்கும் மகள் சரியான நேரத்தில் திரும்பி வருவாளா?’ என்று எடுத்ததற்கெல்லாம் கவலைப்படுவதை நிறுத்திவிட்டு நிகழ்காலத்தில் வாழப்பழகுங்கள். ஒரு சிறு புன்னகை எப்போதும் உங்கள் முகத்தில் இருக்கட்டும். அது முகச்சுருக்கங்களை மறைத்து இளமையாகக் காட்டும்.
இயற்கையோடு இணைந்த சரும பராமரிப்பு:
சமையலறை ஒரு சிறந்த அழகு நிலையம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். க்ரீம், லோஷன் போன்றவற்றை காசு கொடுத்து வாங்கத் தேவையே இல்லை. இயற்கையான வழிகளை பின்பற்றினாலே போதும். தக்காளிச்சாறு சருமத்தின் கருமையை போக்கும். பால் ஏடு மற்றும் தேன் கலந்த கலவை வறண்ட சருமத்திற்கு சிறந்த ஈரப்பதத்தை வழங்கும். நீண்ட நேரம் சமையல் வேலை மற்றும் அலைபேசி பார்ப்பதால் கண்கள் சோர்வடையலாம். வெள்ளரிக்காய்த் துண்டுகளை கண்களின் மேல் வைத்து சோர்வை நீக்கி கருவளையத்தை குறைக்கலாம்.
நேர்த்தியான தோற்றம்:
வீட்டில் இருக்கும்போது எப்போதும் நைட்டி போட்டுக்கொண்டு சுற்றாதீர்கள். நீங்கள் அணியும் ஆடைகள் விலை உயர்ந்ததாக இருக்க வேண்டியதில்லை. சுத்தமாக, நேர்த்தியாக இருந்தால் போதும். ஒரு புடவை அல்லது சுடிதாரை உங்கள் விருப்பம்போல் அணிந்து கொள்ளலாம். இது உங்களையே அழகாக உணரவைக்கும். லேசான பவுடர் பூச்சு, ஒரு சிறு பொட்டு தலைமுடியை அழகாக வாரிக்கொள்வது போன்றவை உங்கள் தோற்றத்திற்கு மெருகூட்டும்.
ஆரோக்கியமே அழகு:
உடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே முகம் பொலிவுடன் இருக்கும். நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். நச்சுக்களை வெளியேற்றி சருமத்தை பளபளப்பாக்கும். வீட்டில் இருக்கும் மிச்சமான உணவை உண்பதை தவிர்த்துவிட்டு, புரதம், மற்றும் நார்ச்சத்து மிகுந்த உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும். பழங்கள், காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.
சுய பாராட்டு:
‘நான் அழகாக இருக்கிறேன், என்னால் எதையும் சாதிக்க முடியும், அமைதியான உறுதியான மனநிலையுடன் வாழ்க்கையை எதிர்கொள்வேன்’ என்கிற நேர்மறை உறுதிமொழிகளை தனக்குள் சொல்லிக்கொள்ளுங்கள். இது உங்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
உங்களுக்கான நேரம் - மீ டைம்:
எப்போதும் குடும்பத்திற்காகவே ஓடிக்கொண்டிருக்காமல் தினமும் குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது உங்களுக்காக ஒதுக்குங்கள். புத்தகம் படிப்பது, இசை கேட்பது, நடைப்பயிற்சி செய்வது, தையல் வேலை போன்றவை உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும். இரவு நேரங்களில் 10 மணிக்கு உறங்கசெல்லுங்கள். ஏழு மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் செல்களை புதுப்பித்து காலையில் புத்துணர்ச்சியுடன் எழச்செய்யும்.
இல்லத்தரசி என்பவர் தியாகத்தின் உருவம் மட்டுமல்ல, அவர் ஆளுமையின் அடையாளம். நீங்கள் உங்களை அழகாக தன்னம்பிக்கை மிக்கவராக உணரும்போது உங்களை சுற்றி உள்ள மனிதர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.