வேலையில் சேரும் முன் உஷார்! இன்டர்வியூவில் இந்த 6 அறிகுறிகள் இருந்தால் தெறித்து ஓடிவிடுங்கள்!

Interview
Interview
Published on

2026-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நாம், தொழில்நுட்பம் மற்றும் வேலைவாய்ப்பு சந்தையில் மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டு வருகிறோம். செயற்கை நுண்ணறிவு (AI) ஒரு பக்கம் வேலைகளை எளிதாக்கினாலும், மறுபக்கம் சரியான வேலையைத் தேர்ந்தெடுப்பது என்பது குதிரைக் கொம்பாக மாறிவிட்டது. வேலை தேடும் அவசரத்தில், பலரும் நிறுவனங்கள் விரிக்கும் வலையில் எளிதாக விழுந்துவிடுகிறார்கள். 

நேர்காணல் என்பது நிறுவனம் உங்களைத் தேர்வு செய்யும் இடம் மட்டுமல்ல; நீங்களும் அந்த நிறுவனத்தை எடைபோடும் ஒரு களம் என்பதை மறந்துவிடாதீர்கள். நேர்காணலின் போதே சில நுட்பமான அறிகுறிகள் அந்த நிறுவனம் உங்களுக்கு ஏற்றதா அல்லது ஆபத்தானதா என்பதைச் சொல்லிவிடும். 

1. தெளிவற்ற பணி விவரங்கள்: நீங்கள் என்ன வேலை செய்ய வேண்டும் என்று கேட்டால், அதற்குக் குழப்பமான பதிலைச் சொல்கிறார்களா? அல்லது "எல்லா வேலையும் பார்க்க வேண்டி இருக்கும்" என்று பொத்தாம் பொதுவாகச் சொல்கிறார்களா? உஷாராகுங்கள். இதன் அர்த்தம், ஒருவருக்குச் சம்பளம் கொடுத்து மூன்று பேரின் வேலையை உங்கள் தலையில் கட்டப் பார்க்கிறார்கள் என்று அர்த்தம். 2026-ல் 'மல்டி டாஸ்கிங்' என்ற பெயரில் சுரண்டப்படுவதற்கு இதுவே முதல் அறிகுறி.

2. நாங்கள் ஒரு குடும்பம்: கேட்பதற்கு இது இனிமையாக இருக்கலாம். ஆனால், கார்ப்பரேட் உலகில் "நாங்கள் ஒரு குடும்பம்" என்று ஒரு நிறுவனம் சொன்னால், அவர்கள் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது 'தியாகம்'. அதாவது, சம்பளம் இல்லாத கூடுதல் நேர வேலை, விடுமுறை நாட்களில் வேலை செய்தல் போன்றவற்றை நீங்கள் கேள்வியின்றிச் செய்ய வேண்டும் என்று அவர்கள் மறைமுகமாகச் சொல்கிறார்கள். தொழில்முறை உறவு வேறு, குடும்பம் வேறு என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

3. முன்னாள் ஊழியர்களைப் பற்றி: உங்களை இன்டர்வியூ செய்பவர், அந்த வேலையில் முன்பு இருந்தவரைப் பற்றியோ அல்லது வேலையை விட்டுச் சென்றவர்களைப் பற்றியோ குறை கூறிக்கொண்டே இருந்தால், அது ஒரு மிகப்பெரிய அபாயச் சங்கு. நாளை நீங்கள் அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறினால், உங்களைப் பற்றியும் இப்படித்தான் பேசுவார்கள். இது அந்த நிறுவனத்தின் மோசமான கலாச்சாரத்தைக் காட்டுகிறது.

4. சம்பளத்தைப் பற்றிப் பேசத் தயங்குதல்: வேலை என்னவோ பெரிதாக இருக்கும், ஆனால் சம்பளம் பற்றிப் பேச்சு வரும்போது, "இப்போதைக்குச் சேருங்கள், அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்" என்று மழுப்புகிறார்களா? இது ஆபத்து. வெளிப்படைத்தன்மை இல்லாத இடத்தில் நேர்மையை எதிர்பார்க்க முடியாது. உங்கள் திறமைக்கான ஊதியத்தை நிர்ணயிப்பதில் இழுபறி இருந்தால், அங்குச் சேராமல் இருப்பதே நல்லது.

இதையும் படியுங்கள்:
பாலமேடு ஜல்லிக்கட்டு துவங்குவதில் தாமதம்..! 2 மணி நேரம் தாமதமாக துவக்கம்..!
Interview

5. மரியாதை இல்லாத அணுகுமுறை: நேர்காணலுக்கு உங்களை நீண்ட நேரம் காத்திருக்க வைப்பது, நீங்கள் பேசும்போது மொபைலை நோண்டிக்கொண்டே இருப்பது, அல்லது உங்கள் கேள்விகளுக்குத் திமிராகப் பதில் சொல்வது போன்றவை நடந்தால், அங்கு உங்களுக்குச் சுயமரியாதை கிடைக்காது என்று அர்த்தம். இன்டர்வியூவிலேயே இப்படி என்றால், வேலைக்குச் சேர்ந்த பிறகு நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்.

6. அவசரப்படுத்தினால்: "இப்போதே முடிவைச் சொல்லுங்கள், நாளைக்கு இந்த ஆஃபர் இருக்காது" என்று உங்களை அவசரப்படுத்தினால், யோசிக்காமல் 'நோ' சொல்லிவிடுங்கள். உங்களைச் சிந்திக்க விடாமல் தடுப்பது, ஏதோ ஒரு குறையை மறைப்பதற்கான உத்தியாக இருக்கலாம். நல்ல நிறுவனங்கள் எப்போதுமே நீங்கள் யோசித்து முடிவெடுக்கச் சிறிது அவகாசம் கொடுப்பார்கள்.

இதையும் படியுங்கள்:
மன ஆரோக்கியத்தைக் காக்கும் சில வழிமுறைகள்!
Interview

மன அமைதி இல்லாத, சுயமரியாதை இல்லாத ஒரு இடத்தில் அதிக சம்பளம் கிடைப்பதாலேயே வேலைக்குச் சேர்வது, எரியும் நெருப்பில் விழுவதற்குச் சமம். மேலே சொன்ன இந்த 6 அறிகுறிகளில் எது தென்பட்டாலும், அந்த வேலையைத் தவிர்ப்பது உங்கள் எதிர்காலத்திற்கு நல்லது. பொறுத்திருந்து நல்ல வாய்ப்பைத் தேர்ந்தெடுங்கள்; உங்கள் திறமைக்கான களம் கண்டிப்பாகக் கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com