செருக்கு என்னும் சொல்லுக்கு பெருமிதம் என்ற பொருள் மட்டுமல்லாமல், ஆணவம் அல்லது கர்வம் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. நாராயண பட்டத்திரி எழுதிய சம்ஸ்கிருத காவியமான, ‘நாராயணீயம்’ என்பதில் இதுகுறித்து அழகாக சொல்லியுள்ளார்.
மாயக்கண்ணனின் லீலைகள் குறித்து அழகு கொஞ்சும் கவிதைகளை இவர் எழுதியுள்ளார். ஒரு கோபிகைக்கு, ‘கண்ணன் தனக்கு மட்டுமே சொந்தம்’ என்ற கர்வம் தோன்றியதாம். பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொது அன்றோ? அவள் கர்வத்தை அழிக்க நினைத்த கண்ணன், அவளை விட்டு மறைந்துபோனான். யமுனை கரையெங்கும் கண்ணனைத் தேடித் தேடி அவள் கரைந்தாள். அவளது கர்வம் முற்றிலும் அழிந்த பின்னர் அவள் முன்பு காட்சி தந்து அவளைப் பரவசப்படுத்தினான் கண்ணன் என குறிப்பிடுகிறார் பட்டத்திரி. நற்குணமான பக்தி என்றாலும்கூட செருக்குக் கொள்வது தவறு என்பதை இது வலியுறுத்துகிறது.
செருக்கு என்பது ஓர் தீய குணம். அதுவே பல தீய விளைவுகளுக்கு காரணமாகவும் ஆகிறது. ‘நான்’ எனும் செருக்குள்ளவர்கள் என்றுமே உயர்ந்த நிலையை அடைய முடியாது. செருக்கு யாரிடம் இருக்கிறதோ அவர்கள் மற்றவர்களிடமிருந்து அன்பு, நட்பு, பாசம் போன்றவற்றைப் பெற இயலாது. அவர்களுக்கு நல்லவற்றை சொன்னாலும் கேட்க மாட்டார்கள். சொன்னவர்களையே அற்பமானவர்களாகக் கருதி ஏளனம் செய்வார்கள். இந்த செருக்கினால் அழிந்த ராவணன், துரியோதனன் போன்ற இதிகாச கதாபாத்திரங்கள் நமக்கு எச்சரிக்கை தருகிறார்கள்.
அரசன் ஒருவன், ‘நான்’ எனும் செருக்கு நிரம்பி இருந்தான். ஒரு சமயம் அவன் வேட்டைக்குச் சென்றபோது ஒரு துறவியை சந்திந்தான். கண்களை மூடித் தியானம் செய்து கொண்டிருந்த அந்தத் துறவியிடம், தான் பல நாடுகளை வென்றவன் என்று பல தற்பெருமைகளைக் கூறிய அரசன், எல்லாம் இருந்தும் தான் நிம்மதி இல்லாமல் இருப்பதாகக் கூறி, தனக்கு எப்போது மகிழ்ச்சி கிடைக்கும் எனக் கேட்டான்.
அவனது நச்சரிப்பால் தியானம் கலைந்து கண் விழித்த துறவி, சற்றே சினமுற்று ”நான் மரணித்தால்தான் உமக்கு மகிழ்ச்சி கிடைக்கும்" என்று கூறி விட்டு மீண்டும் கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்து விட்டார்.
துறவியின் பதிலால் அதிர்ந்துபோன அரசன், ‘நான் எத்தனைப் பெரிய அரசன். என்னையே அவமானப்படுத்துகிறாரே இவர்’ என்று சற்றும் சிந்திக்காமல் துறவியை கைது செய்ய எத்தனித்தான். உடனே துறவி, "அட மூடனே, ‘நான்’ என்றால், என்னைச் சொல்லவில்லை. உன்னிடமுள்ள, ‘நான்’ என்ற செருக்கு மரணித்தால்தான் உமக்கு மகிழ்ச்சி கிடைக்கும். உன் கண்ணில் விழுந்த தூசு போன்ற, ‘நான்’ அந்த செருக்கை சுத்தம் செய்யாமல் உன்னால் மகிழ்ச்சி காண இயலாது. எனவே, செருக்கு என்கிற தூசியை சுத்தம் செய்து விட்டு உலகத்தைப் பாருங்கள், மகிழ்ச்சி புலப்படும்” என்று கூறினார் துறவி.
அரசன் தனது துர்குணத்தை நினைத்து அந்தத் துறவியிடம் மன்னிப்பு கேட்டு, ‘நான்’எனும் செலுக்கை விலக்கி, துறவியிடம் ஆசிகள் பெற்று மகிழ்ச்சியுடன் சென்றான்.
இந்த, ‘நான்’ எனும் செருக்கு நம் மேல் அக்கறை கொண்டுள்ள பலரிடம் இருந்து நம்மைப் பிரித்து தனித் தீவாக்கி நம் வெற்றிக்குத் தடையாகிவிடும். செருக்கினை அழித்து நம் வாழ்க்கைப் பாதையை சீராகக் கொண்டு சென்றால் வாழ்க்கையில் எதிர்பாராத பல வெற்றிகளைப் பெறலாம். செருக்கின்மையே வாழ்க்கையின் வெற்றிக்கு ஆதாரம் என்பதால் வாழ்வில் மேன்மை பெற இதை நிச்சயம் விலக்கி விடுங்கள்.