Aluminium Foil
Aluminium Foil

அச்சறுத்தும் 'Aluminium Foil'-உயிருக்கு ஆபத்தா?

Published on

நாம் எப்போதாவது கவலை அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், அதிலிருந்து நம்மை சற்று விடுவித்துக் கொள்வதற்காக, ஆர்டர் செய்தோ அல்லது கடைகளில் பார்சல்  வாங்கியோ, சாப்பிடுவது வழக்கமாக இருக்கும். அவ்வாறு வாங்கும், உணவுப் பொருள்கள் பிளாஸ்டிக் கொண்டு பேக்கேஜிங் செய்யப்படும் அல்லது அலுமினியத் தகடு (Aluminium foil) கொண்டு பேக்கேஜிங் செய்யப்பட்டிருக்கும்.  சில வீடுகளிலும் கூட மீதமான உணவுகளை சேமித்து வைப்பதற்கும், உணவுப் பொருள்களை பேக்கேஜிங் செய்வதற்கும், கேக், பிரட் போன்ற உணவுப்பொருள்களை பேக்கிங் செய்வதற்கும் பயன்படுத்தப்படும் இந்த அலுமினியத் தகடு (Aluminium foil) பாதுகாப்பானதா? பாதகமானதா ? என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

இது தெரியுமா?

பழங்கள், காய்கறிகள், இறைச்சி, மீன், தானியங்கள், தேயிலை இலைகள், காளான்கள், கீரைகள், முள்ளங்கி  மற்றும் பால் பொருட்கள் உள்ளிட்ட பெரும்பாலான உணவுகளில் அலுமினியம் இயற்கையாகவே நிறைந்துள்ளது. இவற்றை உணவுகளாக எடுத்துக்கொள்ளும்போது, நம் உடலுக்குத் தேவையான அளவு அலுமினியம் கிடைத்துவிடுகிறது.

அலுமினியத் தகடை உடல் ஆரோக்கியத்துடன் இணைக்கும் வலுவான ஆதாரங்கள் மற்றும் ஆய்வுகள் எதுவும் தற்போது வரை இல்லை என்றாலும், சூடான உணவை அலுமினியம் ஃபாயிலில் வைத்து உண்பதோ அல்லது அதில் சேமித்து வைப்பதோ ஆபத்தானது. அலுமினிய ஃபாயிலை இவ்வாறு பயன்படுத்தும் போது, அது உணவில் கசிந்து, கூடுதல் அலுமினிய நுகர்வுக்கு வழிவகுப்பதால்,  ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்ற கருத்துக்கள் நிலவி வருகின்றன. எனவே, முடிந்தவரை குறைந்த வெப்பநிலையில் உணவை அலுமினிய ஃபாயிலில் சேமித்து வைக்கலாம் மற்றும் பேக்கேஜிங் செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
பொங்கல் சாப்பிட்டால் ஏன் தூக்கம் வருகிறது தெரியுமா?
Aluminium Foil

அலுமியத் தகடு பயன்படுத்துவது ஆபத்து என்றால் வீட்டில் சமையலுக்குப்  பயன்படுத்தப்படும் அலுமினியப் பாத்திரங்களிலும் ஆபத்து இருக்கும் தானே? என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், அலுமினியப் பாத்திரங்களை வைத்து சமைப்பது ஆரோக்கியத்திற்கு ஒரு பிரச்னையும் இல்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஆனால், தக்காளி, எலுமிச்சை போன்ற அமில உணவுகளை சமைக்கும்போது, அலுமினியம் அல்லாத பாத்திரங்களைப் பயன்படுத்தவும். அலுமினியத் தகடின் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளவும்.

மீதமான உணவை கெட்டுப் போகக்கூடாது என்பதற்காக அலுமினியத் தகடில் பொதிந்து வைப்போம். இது உணவின் உள்ளே ஆக்சிஜன் நுழைவதைத் தடுக்காமல், பாக்டீரியா வளர அனுமதிக்கிறது. எனவே, அனுமினியத் தகடில் வைக்கப்படும் உணவுகள் கெட்டுப் போக வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

சமைத்த உணவை அலுமினியத் தகடில் சேகரிப்பதற்குப் பதிலாக, காற்றுப் புகாத பாத்திரங்களில் சேகரித்து வைக்கலாம். முடிந்தவரையில், சமைத்த உணவை சேமித்து வைத்து சூடுபடுத்தி சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். அலுமினியத் தகடு (Aluminium foil) கொண்டு பேக்கேஜிங் செய்யப்பட்டு விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதைக் குறைப்பது அலுமினிய உட்கொள்ளலைக் குறைக்க உதவுகிறது.

logo
Kalki Online
kalkionline.com