
வானுயர நிமிர்ந்து நிற்கும் மால்களிலும், பெரிய பெரிய நகை கடைகள், ஜவுளி கடைகளிலும் அவர்கள் கூறும் விலைக்கு பேரம் பேசாமல் வாங்கும் நாம் சந்தைகளிலும், சாலையோரங்களில் காய்கறிகள், பழங்களை விற்பவர்களிடம் பேரம் பேசி பொருட்கள் வாங்குவது சரியா? வயதான மூதாட்டி தன்னம்பிக்கையுடன் தனித்து போராடி வாழ கீரை வியாபாரம் செய்தால் அவரிடம் பேரம் பேசி வாங்கலாமா? இதுவே மால்கள், பெரிய பெரிய கடைகளில் பேரம் பேசுவதை ஒரு கௌரவ பிரச்னையாக பார்க்கும் நாம் ஒரு வார்த்தை கூட பேசாமல் சொன்ன விலைக்கு வாங்கி வருகிறோம்.
சிறு வியாபாரிகள்:
சாலை ஓரங்களில் மழையிலும் வெயிலிலும் கடை போட்டு வியாபாரம் செய்யும் சிறு சிறு வியாபாரிகளிடம் எக்காரணம் கொண்டும் பேரம் பேசவேண்டாம்.
கீரைக்கார அம்மாவிடம்:
தலையில் கூடையை ஏற்றி பாரம் சுமந்து வரும் கீரை விற்கும் பெண்மணியிடம் பேரம் பேசுவது பெரிதும் தவறு. அவர்கள் கால் வலிக்க நடந்து நாலு இடத்திற்கு சென்று கீரை விற்றால்தான் அவர்கள் வயிற்று பிழைப்புக்கு வழி கிடைக்கும். அம்மாதிரி இருக்கும் கீரை விற்கும் பெண்மணிகளிடம் பேரம் பேசுவதை தவிர்த்து விடவும். அவர்கள் கூறும் விலைக்கு பேரம் பேசாமல் வாங்கி விடுவது நல்லது. இதனால் நம் சொத்து ஒன்றும் குறைந்து விடப் போவதில்லை.
தள்ளுவண்டி வியாபாரி:
தள்ளு வண்டியில் பல கிலோமீட்டர் தூரம் கால் வலிக்க நடந்து சென்று காய்கள், பழங்கள் விற்பவர்களிடம் எக்காரணத்தைக் கொண்டும் பேரம் பேசாதீர்கள். சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு சென்று இம்மாதிரி பேரம் பேச முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்.
மாற்றுத்திறனாளிகள்:
மாற்றுத்திறனாளிகள் பாவம் அவர்கள் தங்கள் ஊனத்தையும் பொருட்படுத்தாமல் வலியுடன் வந்து விற்கும் பொருள்களை வாங்கும் பொழுது பேரம் பேசி அவர்கள் மனதை காயப்படுத்த வேண்டாம். அவர்களின் மனதிடத்தை பாராட்டி அவர்களிடம் இருந்து பொருட்கள் வாங்கி அவர்களை ஊக்குவிக்கலாம்.
வயதானவர்கள்:
வயதான பெரியவர்கள் எந்த பொருளை விற்றாலும் விலை குறைத்து கேட்காமல் வாங்கி அவர்களை ஊக்கப்படுத்தலாம். இத்தனை வயதிலும் அவர்கள் தன்னம்பிக்கையுடன் பாடுபடுகிறார்கள் என்றெண்ணி முடிந்தால் பாராட்டவும் செய்யலாம். தெருவில் வியாபாரம் செய்தால் பேரம் பேசி விலையை குறைக்க பார்க்கிறோம். உண்மையில் இவர்கள் விற்கும் காய்கள், பழங்கள் எந்தவித கெமிக்கல் உரங்கள் இல்லாமல் தோட்டத்தில் விளைந்ததாகவும், தரமானதாகவும் இருக்கும்.
தெருவோர வியாபாரிகளிடம் பேரம் பேசுவது சரியில்லை. மேலும் அவர்கள் நாம் தரும் பணத்தில் நிலவில் நிலம் வாங்கி கட்டப் போவதில்லை. குடும்பத்திற்கு மூன்று வேளையும் தட்டாது உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் உழைக்கிறார்கள் என்பதை நினைவில் கொண்டால் போதும்.