
அழகுக்காக வீட்டிற்கு உள்ளேயும் வீட்டைச் சுற்றி காம்பவுண்ட் சுவருக்கு உள்ளேயும் செடிகள் வளர்ப்பது தற்போது பிரபலமாகி வருகிறது. 'வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்' என்று சுற்றுச்சூழலை பாதுகாக்க நினைத்தாலும், அழகில்தான் ஆபத்தும் இருக்கிறது என்பது போல சில செடிகள் மற்றும் மரங்களை வீட்டில் வளர்ப்பது தீமையைத் தரும் என்கின்றனர் இயற்கை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வாஸ்து நிபுணர்கள். வீட்டிற்குள் வளர்க்கக் கூடாத மரங்கள், செடிகள் எவையெவை? ஏன்? என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
கற்றாழை தற்போது அதன் மருத்துவ குணங்கள் மற்றும் குறைந்த பராமரிப்பு முறை போன்ற காரணங்களால் வீடுகளில் வளர்க்கப்படுகிறது. ஆனால், வாஸ்துவின் கூற்றுப்படி முள் போன்ற கூர்மையான வடிவம், 'நேர்மறையை ஈர்ப்பதில் சிறந்தவை அல்ல. எதிர்மறை சக்தியை ஈர்க்கும்’ என்று கருதப்படுகிறது. எனவே, அவற்றை வீட்டிற்கு வெளியே அல்லது மொட்டை மாடியில் வளர்ப்பதே நல்லது.
90களில் சீனாவின் போன்சாய் (Bonsai) அழகுக்காகவும், அதன் கலை வடிவம் மற்றும் சிறிய வடிவிலான மினியேச்சர் அற்புதங்களுக்காகவும் பெரிதும் விரும்பப்பட்டு வீடுகளுக்குள் வளர்க்கப்பட்டது. இன்றும் போன்சாய்க்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால், உண்மையில் போன்சாய்கள் முழுமையாக வளர விடாமல் வேண்டுமென்றே கட்டுப்படுத்தப்பட்ட தாவரங்கள் என்பதால் அவற்றை வீட்டிற்குள் கொண்டு வருவது வளர்ச்சி, செழிப்பு மற்றும் நல்வாழ்வைத் தடுக்கலாம் எனும் கருத்து இருப்பதால் இவற்றை வீட்டிற்குள் வைப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
புளி மற்றும் பருத்தி செடிகள் இயற்கைக்கு அப்பாற்பட்டவற்றை ஈர்க்கும். அதிலும் புளி மரங்கள் எதிர்மறை அதிர்வுகளை ஈர்க்கும் என்று கருதப்படுகிறது. சில கலாசாரங்களில் மரண சடங்குகளுடன் தொடர்புடைய பருத்தி செடிகளும் இதேபோன்று கருதப்படுகிறது என்பதால் இந்தச் செடிகளை வீட்டினுள் மற்றும் காம்பவுண்ட்குள்ளும் வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள். மீறினால் பண இழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை தருகிறது வாஸ்து.
அரச மரம் புனிதம் நிறைந்ததாகக் கருதப்படுகிறது. இது ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்தது, ஆசீர்வாதங்களையும் வழிகாட்டுதலையும் வழங்குகிறது என்று நம்பப்படுகிறது. இருப்பினும், அரச மரத்தை வீட்டிற்குள் வைத்தால் அதன் சக்தி வாய்ந்த ஆற்றல் இயற்கை சமநிலையை சீர்குலைக்கும் என்பதால் அவற்றின் ஆற்றல் கோயில்கள் அல்லது வெளிப்புற இடங்களுக்கு மிகவும் பொருத்தமானது எனக் கருதப்படுகிறது.
தாவர வகைகளில் ஓலியாண்டர் Oleander (Nerium oleander) அதிக நச்சுத்தன்மையுடன் இதயப் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதாலும், ஆமணக்கு பீன்(Castor Bean) நச்சுத்தன்மை விதைகள் கடுமையான நோயை ஏற்படுத்துவதாலும் டைஃபென்பாச்சியா ( Dieffenbachia) வாய்வழி மற்றும் இரைப்பை குடல் எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய நச்சு சேர்மங்களைக் கொண்டுள்ளதாலும் வீட்டில் வளர்க்கக் கூடாத நச்சுத் தாவரங்களாக மேலை நாடுகளில் இவற்றை குறிப்பிடுகின்றனர்.
மேலும், ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்னைகளை அதிகரிக்கும் பூஞ்சை காளான் உற்பத்தி செய்யும் தாவரங்கள் (e.g., maidenhair fern, bird's nest fern ex...), தலைவலி அல்லது ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தும். அதிகமான வாசனை கொண்ட மலர்கள் உள்ள தாவரங்கள், குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு ஆபத்தான முள் உள்ள கள்ளிச்செடி வகைகள் போன்றவற்றை வீட்டில் வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
வீடுகள் என்பது உயிரோட்டத்தையும் புதிய ஆற்றலையும் கொண்டிருக்க வேண்டும் என்னும் கருத்தின்படி அழகுக்காக உயிரற்ற மணமற்ற பூக்களை வளர்ப்பதைத் தவிர்த்து எப்போதும் புத்துணர்ச்சியூட்டும், அதிக நேர்மறை ஆற்றலைக் கொண்டுவரும் மல்லிகை, ரோஜா, துளசி உள்ளிட்ட தாவரங்களை வீட்டில் வளர்ப்பது நல்லது. இல்லையெனில் தாவரக் கலை நிபுணர்களின் உதவியை நாடுவது சிறப்பு.