
பெரிய வீடாகக் கட்டி அதிக வாடகை எதிர்பார்ப்பதை விட சின்ன வீடுகளாக அடிப்படை வசதிகளுடன் கட்டி குறைந்த வாடகைக்கு விடுவது லாபம் தரும். ஆனால் எக்காரணம் கொண்டும் கடன் வாங்கி வீடு கட்டி வாடகைக்கு விடுவது சரியல்ல. வீட்டை வாடகைக்கு விடும் பொழுது போடும் ஒப்பந்தத்தில் குழாய், பிளம்பிங் ஒர்க், டைல்ஸ்களில் பாதிப்பு ஏற்பட்டால் அதை சரி செய்ய பணம் பிடிக்கப்படும் என்று ஒப்பந்தம் செய்வது அவர்கள் வீட்டை காலி செய்யும்பொழுது பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தாது. நிலம் வாங்கி வீடு கட்டுவது உண்மையில் சிறந்த முதலீடு கிடையாது.
நிலம் வாங்கி செலவு செய்து பத்திரப்பதிவு செய்து, சுற்றி வேலி அமைத்து வீடுகட்ட ஒரு குறிப்பிட்ட பெரிய தொகையை வைத்து கட்டி முடிக்கப்படும் வீட்டில் வாடகை என்பது பெரிதாக ஒன்றும் வராது. கட்டுமான செலவு அதிகமாகும். ஆனால் வரும் வாடகையோ நாம் செலவு செய்த தொகைக்கு ஈடாகாது. நாம் வீடுகட்ட செலவு செய்த அதாவது முதலீடு செய்த பணத்தை எடுக்கவே 10, 15 ஆண்டுகள் ஆகும். அதுவே அந்தத் தொகையை பிக்சட் டெபாசிட்டில் சேமித்து வைத்தால் நல்ல வட்டி கிடைக்கும்.
வாடகைக்கு நல்ல ஆட்களாக பார்த்து விடுவது ஒரு பெரிய சவாலான விஷயம். பிரச்சனை தராதவர்களாக, மாதா மாதம் குறிப்பிட்ட தேதியில் வாடகை தருபவராக அமைய வேண்டும். வாடகை வாங்குவதில் பிரச்சனை, சில நேரங்களில் வாடகை பிரச்சினை, மேலும் சில மாதங்களில் வீட்டை வாடகைக்கு விட முடியாமல் காலியாக வைத்திருக்கும் பிரச்னை என்று பிரச்னைகள் அதிகரித்துக் கொண்டுதான் செல்லும். வீட்டின் அதிகபட்ச ஆயுள் 60 ஆண்டுகள் என்று வைத்துக் கொண்டால் போகப்போக நம் வீட்டின் மதிப்பு இறங்கி கொண்டு தான் இருக்கும். அவசரத்திற்கு விற்கச் சென்றால் நஷ்டம் தான் ஏற்படும். அதுவே வங்கியில் பணமாக வைத்திருந்தால் ஓரளவுக்கு பாதுகாப்பாக இருப்பதுடன், வட்டியும் கிடைக்கும். தேவைப்படும் சமயங்களில் அந்த பணத்தின் மீது லோன் வாங்கவும் முடியும்.
வீடுகட்ட பெருந்தொகையை வைப்பதுடன் வீட்டு வரி, குடிநீர் வரி, வீட்டு வருமான வரி என்று பராமரிப்பு செலவும் அதிகரிக்கும். கையில் பணம் இருந்தால் அதனை பங்கு சந்தையிலோ, மியூச்சுவல் ஃபண்டிலோ, தங்க காசுகள், தங்க பத்திரம் வாங்கியோ சேமிக்கலாம். வீடு கட்டி வாடகைக்கு விடுவது என்பதை கடைசி முதலீடாக வைத்துக் கொள்வது தான் நல்லது. இருந்தாலும் சிலருக்கு வீடு கட்டி வாடகைக்கு விடுவதில் ஒரு சந்தோஷம், நிறைவு இருக்கிறது. கையில் பணம் இருந்தால் டாக்குமெண்ட் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்து, லீகல் ஒப்பினியன் கேட்டு மனதிற்குப் பிடித்த இடத்தில் இடத்தை வாங்கிப்போடலாம். ஒரே பெரிய வீடாக கட்டுவதை விட கைக்கு அடக்கமாக எல்லா வசதிகளுடன் கூடிய சின்ன வீடுகளாக கட்டி வாடகைக்கு விடுவதுதான் லாபம் தரும். மெயின்டைன் பண்ணுவதும் ஈசியாக இருக்கும். வாடகையையும் கணிசமாக ஏற்றலாம்.
பெரிய நகரங்களில் நிலத்தின் விலை அதிகரித்துக்கொண்டே செல்லும். வாடகையும் உயர்ந்துகொண்டே செல்லும். எனவே இரண்டு பெட்ரூம், சிங்கிள் பெட்ரூம் என கட்டி வாடகைக்கு விடுவது லாபம் தரும். நீண்டகால வருமானத்திற்கு வீடு கட்டி வாடகைக்கு விடுவது லாபம்தான். சொந்தமாக பணம் இல்லாமல் வங்கியில் லோன் வாங்கியோ அல்லது வட்டிக்கு கடன் வாங்கியோ வீடு கட்டுவது லாபம் தராது.
அதுவே நம் கையில் சொந்தமாக பணம் இருப்பின் அதை ஒரு முதலீடு மற்றும் பிற்கால தேவைக்காக ஒரு வீட்டைக்கட்டி வாடகைக்கு விடுவது குறிப்பாக அதிக வாடகை கிடைக்கும் ஏரியாவில் கட்டி வாடகைக்கு விடுவது லாபகரமானதாகும். இல்லையெனில் மாதாமாதம் ஈ.எம்.ஐ கட்டுவது வரும் வாடகை விட அதிகமாக இருக்கும்.
சின்ன ஊர்களில் வாடகை என்று பெருசாக எதுவும் வராது. அதுவே பெரிய நகரங்களில் வீடு கட்டி வாடகைக்கு விடுவதும், ஃபிளாட்டுகளை வாங்கி வாடகைக்கு விடுவதும் லாபம் தரும்.
நல்ல பிசியான நகரங்களில் எப்பொழுதும் மார்க்கெட் இருந்து கொண்டே இருக்கும். வாழ்வதற்கு சொந்த வீடு அவசியம். வாடகை கொடுத்து கட்டுபடியாகாது. அதே நேரம் வாடகைக்கு விட்டு சம்பாதிக்க நினைத்தால் நல்ல பிசியான இடங்களில் ஃபிளாட்களையோ, வீடுகளையோ கட்டி வாடகைக்கு விடுவதுதான் லாபம்.