
கடல் கன்னி மெர்மேட்(mermaid) என்பது புராணங்களில் காணப்படும் ஒரு கற்பனை பாத்திரம். பாதி மனிதன் உருவமும் பாதி மீன் போன்ற தோற்றமும் கொண்டது. அறிவியல் ரீதியாகப் பார்த்தால் கடல் கன்னிகள் என்பது உண்மையில் இல்லை என்றே சொல்லலாம். ஆனால், கடல் கன்னிகள் பற்றிய கதைகள் உலகம் முழுவதும் பல கலாசாரங்களில் காணப்படுகின்றது. கடல் கன்னிகள் பற்றிய கதைகள் பல நாடுகளில், குறிப்பாக இந்தியா, சீனா, ஐரோப்பா என பல இடங்களிலும் இதைப் பற்றிய கதைகள் நிறைய உலா வருகின்றன.
பல கதைகளில் கடல் கன்னிகள் மனிதர்களைக் கவர்ந்து இழுத்துச் செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. பண்டைய காலங்களில் கடற்கன்னிகளை சில கதைகளில் நல்லவர்களாகவும், சில நேரங்களில் அவர்களை கெட்டவர்களாகவும் சித்தரித்து காட்டியுள்ளன. ‘அட்டாகடிசு’ எனும் தேவதை தன்னுடைய மனித காதலனை தவறுதலாகக் கொன்றதும் அவமானத்தினால் கடல் கன்னியாக மாறினாள் என்றும் கதைகள் சித்தரிக்கின்றன.
மேற்கத்திய இலக்கியங்களில் கடல் கன்னிகள் பற்றிய குறிப்புகள் அதிகம் உள்ளன. பண்டைய புராணங்கள் மற்றும் இலக்கியங்களில் தேவதைகள் போன்ற கலப்பின உயிரினங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவற்றின் உடலின் பாகங்கள் மனித வடிவிலும், பிற பகுதிகள் விலங்கு அம்சத்துடனும் காணப்படுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மீன் வால்களுடன் கூடிய தேவதைகளை விவரிக்கும் முதல் பதிவு ‘புக் ஆஃப் மான்செஸ்டர்ஸ் ஆஃப் வேரியஸ் கைண்ட்ஸ்’ என்ற லத்தின் மொழி புத்தகத்தில் உள்ளது.
நெடுங்காலமாகவே கடல் கன்னிகள் பற்றிய விஷயங்கள் பரவி வந்தாலும் அதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. என்றாலும், பலருடைய நம்பிக்கைகள் காரணமாக கடல் கன்னிகள் பற்றிய கதைகள் நிறைய உலவிக் கொண்டுதான் உள்ளன. இந்த கடல் கன்னிகள் ஆழமான கடல்களில் வாழ்வதாகவும் நம்பப்படுகிறது.
ஆரம்ப நாட்களில் இதைப் பற்றிய கருத்தை வெளியிட்டவர் அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டோபர் கொலம்பஸ்தான். 1493ம் ஆண்டு கடல் வழிப்பயணம் மேற்கொண்ட பொழுது கரீபியன் தீவுகளுக்கிடையே கடல் கன்னிகளைப் பார்த்ததாக தெரிவித்துள்ளார். மேலும், 1608ம் ஆண்டு ஐரோப்பாவை சேர்ந்த ஹென்றி ஹட்சன் என்பவர் கடல் பயணத்தின்போது கடல் கன்னியை பார்த்ததாகவும், அந்தக் கடல் கன்னி அவரை பல கடல் கன்னிகள் இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் கூறியுள்ளார்.
உண்மையில் கடல் கன்னிகள், இச்சாதாரி பாம்புகள் போன்றவை எல்லாம் மனிதர்களின் கற்பனையே. வாழ்வில் சுவாரசியத்தைக் கூட்டுவதற்காக இம்மாதிரியான கற்பனைக் கதைகள் உலவி வருவதாகக் கூறப்படுகிறது. கடற்கன்னிகள் கதைகளிலும், கற்பனைகளிலும் மட்டுமே காணப்படுபவையாகும். கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் மட்டுமே உண்மை. மக்களின் கற்பனையில் உதயமாகும் இவற்றை ரசிக்கலாமே தவிர, அதைப் பற்றி தீவிரமாக உண்மையா? பொய்யா? என்று அலசுவது தேவையற்றது.