
‘குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று’ என்ற சொல் வழக்கு ஆரம்பத்தில் இருந்தே நடைமுறையில் இருந்து வருகிறது. அதுபோல, எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையில். அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னையின் வளா்ப்பில் உள்ளது. அதில் தந்தைக்கும் பெரும் கடமை உண்டு!
குழந்தை பாக்கியம் என்பது இறைவன் கொடுத்த வரம். அது எளிதில் சிலருக்கு அமைவதில்லை! அதைப் பற்றிய கவலைகளும் பலரிடம் உள்ளது. ஒரு காலகட்டத்தில் சில காரண, காரியங்களால் குழந்தைப்பேறு வேண்டாம் என நினைப்பதும், வேறு சில விஷயங்களால் வாடகைத்தாய் மற்றும் தத்து எடுத்து வளா்த்தல் முறையும் வழக்கத்தில் இருந்துவருவதும் யதார்த்தம் கலந்த உண்மைதான்.
பிறக்கப்போகும் குழந்தை ஆணாக இருக்க வேண்டும் அல்லது பெண்ணாக இருக்க வேண்டும் என்ற ஆசைகளும் மேலோங்கி இருப்பது இயல்பானதுதான். அதில் தவறேதும் கிடையாது. அப்படிப் பிறந்த குழந்தையை வளா்த்து ஆளாக்குவதில் கணவன், மனைவி இருவருக்கும் தலையாயக் கடமைகள் உள்ளன.
சில குடும்பங்களில் முதலில் பெண் குழந்தை பிறந்து, அடுத்ததாக ஆண் குழந்தை என்ற ஆசையில் இருப்பவர்களுக்கு இரண்டாவதும் பெண்ணாகப் பிறந்துவிட்டால் அது தொடர்பாக மருமகளைத் திட்டுவது, அந்தக் குழந்தையை வெறுப்பது, மருமகள் வீட்டில் உள்ளவர்களை மதிப்பில்லாமல் நடத்துவது என தேவையில்லாத நிகழ்வுகள் தலைதூக்குவதும் வாடிக்கையே!
பொதுவாகவே, இந்தக் காலத்தில் ஆணோ, பெண்ணோ அவர்களை வளா்த்து ஆளாக்குவது என்பது சிரமமான நடைமுறைதான். குழந்தைகளை வளா்க்கும்போதே அவர்களை ஆரோக்கியமாக வளா்க்க வேண்டும். நல்ல ஒழுக்கங்களை, பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுத்து வளா்க்க வேண்டும். நல்ல நூல்களை படிக்க வைக்க வேண்டும். மேலும், புராணக் கதைகளையும் சொல்லிக்கொடுக்க வேண்டும்.
அவர்கள் கேட்டதையெல்லாம் வாங்கித் தராமல், அதிக செல்லம் கொடுக்காமல் வளா்ப்பதும், குடும்ப சூழலுக்கேற்ப வளரக் கற்றுக்கொடுப்பதும் சிறந்த விஷயமே. கூடவே படிப்பில் நாட்டம் செலுத்த வைத்து அவர்களுக்குப் புரியாத பாடங்களை கணவனோ, மனைவியோ சொல்லிக்கொடுக்கலாம். பெரியோர்களை மதிக்கக் கற்றுக்கொடுப்பது சாலச் சிறந்தது. ஆன்மிக சிந்தனை, நல்ல நெறிமுறைகள், கண்ணியமான பேச்சு போன்றவற்றைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
படிப்பு தவிர, அவர்களுக்குப் பிடித்தமான விஞ்ஞான ரீதியான நாட்டம், இதர கலை, விளையாட்டு, பாடல், நாட்டியம், பேச்சுப் பயிற்சி, சிலம்பம், கராத்தே, யோகா, தியானம், பிறருக்கு உதவும் மனப்பக்குவம், பொய் பேசாமை, நோ்மறை சிந்தனை போன்ற நல்ல விஷயங்களையும் சொல்லிக்கொடுத்து, வளா்க்க வேண்டும்.
அதேபோல, குழந்தைகளை அடுத்த பிள்ளைகளோடு ஒப்பிடுதல், அவர்களை வைத்துக்கொண்டே குடும்ப விஷயங்களைப் பேசுதல், பக்கத்து வீட்டு தோழிகளுடன் அக்கப்போர் பேசுதல் போன்றவை வேண்டாமே! தொலைக்காட்சியில் தேவையில்லாத நிகச்சிகள் பார்ப்பதைத் தவிர்த்தல், ஆடம்பர செலவு போன்ற இனங்களில் கவனமாக செயல்படுதல் என பல்வேறு விஷயங்களில் கவனமாக இருப்பதும் பிள்ளைகளை நல்வழிப்படுத்தும். இப்படிப் பல்வேறு விஷயங்களில் பிள்ளைகள் வளர பெற்றோர்களும் சில தியாகங்கள், ஆசாபாசங்களை தவிர்த்துத்தான் ஆக வேண்டும்.
முதலில் யாராக இருந்தாலும், ‘நீ, வா, போ’ போன்ற ஒருமைகளை விடுத்து மரியாதையாகப் பேச, பண்பாடுகளோடு நடக்கக் கற்றுக்கொடுப்பது அவர்களுக்கு எதிர்காலத்திற்கு நல்லதாகும். அவர்களை மிகவும் கடுமைப்படுத்தாமல் தைரியமாக, பத்தாம்பசலித்தனமில்லாமல் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வைத்து, நல்ல நண்பர்கள் சோ்க்கையுடன் வளா்க்க வேண்டும்.
வயதாக ஆக பல பொறுப்புகளை அவர்களாகவே நம்மைக் கேட்டு முடிவெடுக்கும் தைரியத்தை வளா்த்துக்கொள்ளும் நிலைக்கு ஆளாக்க வேண்டும். சில தவறுகள் செய்தால் ஆரம்பத்திலேயே அதை நல்லவிதமாய் சொல்லிக் கொடுத்து வளா்ப்பதே சாலச் சிறந்தது.
குழந்தைகளைப் பெற்றெடுப்பதில் எவ்வளவு சிரமம் இருக்கிறதோ, அதேபோல வளா்ப்பதும் சிரமம்தான். முள்ளில் விழுந்த சேலையை எடுப்பதுபோல, முள்ளும் கையில் குத்தாமல், சேலையும் கிழியாமல் கவனமாய் கையாள்வது பெரிய கலை. அதில் வெற்றி பெற்று, நல்ல நல்ல பிள்ளைகளாய் வளா்ப்பது தாய், தகப்பனார் கையில்தான் உள்ளது. நல்ல நல்ல பிள்ளைகளை நம்பித்தானே இந்த நாடே இருக்கிறது!