

மனிதர்களின் சில குணங்கள் ரொம்பவே அலாதியானவை. சில குணங்கள் அற்பமானவையும் கூட. அப்படிப்பட்ட ஒரு குணம்தான் மற்றவரின் தனிப்பட்ட வாழ்வைத் தெரிந்துகொள்ள விரும்பும் குணமும். பொதுவாக, அப்பார்ட்மெண்டுகளில் இந்தப் பழக்கம் அதிகம் இருக்கும். யார் வீட்டுக்கு யார் வருகிறார்கள்? என்ன பேசுகிறார்கள்? எங்கு போகிறார்கள்? என்ன வாங்குகிறார்கள்? இன்று வந்தவர்கள் அவர்களுக்கு உறவுக்காரர்களா? நண்பர்களா? எனத் தெரிந்து கொள்வதில் மண்டையை போட்டு உடைத்துக் கொள்வார்கள்.
மனிதர்கள் இயல்பாகவே மற்றவர்கள் எப்படி வாழ்கிறார்கள்? அவர்களின் பிரச்னை என்ன? அவர்கள் எப்படி வெற்றிகரமாக இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள விரும்புவார்கள். இது அவர்களின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள உதவும் என நம்புகிறார்கள். இன்னும் சிலரோ, மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களுடன் இணைவதற்காகப் பிறரின் வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்ள முயற்சிப்பார்கள். இது உணர்ச்சி நுண்ணறிவின் (emotional intelligence) ஒரு பகுதியாகும்.
வெற்றிகரமான நபர்களின் வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்வதன் மூலம், தங்களுடைய வாழ்க்கையில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண அல்லது தங்கள் இலக்குகளை அடைய உத்வேகம் பெறுவதற்காகவும் பிறருடைய தனிப்பட்ட வாழ்க்கையைத் தெரிந்து கொள்வதில் சிலர் ஆர்வம் காட்டுவார்கள். சமூக ஊடகங்கள் மற்றும் இணையம் பெருகிவிட்டதால், பிரபலங்களின் அல்லது தெரிந்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பின்தொடர்வது ஒருவகையான பொழுதுபோக்காக மாறியுள்ளது. இது வதந்திகள் மற்றும் செய்திகளையும் அறிந்து கொள்ள உதவுகிறது.
பிறரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்ட மனிதர்கள், பெரும்பாலும் ஆர்வம், பச்சாதாபம், ஒப்பீடு செய்தல் அல்லது தங்கள் வாழ்க்கையில் உள்ள இடைவெளிகளை நிரப்புதல் போன்ற காரணங்களால் அவ்வாறு ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால், அது ஆரோக்கியமான ஆர்வமாக இருக்கும்போது பயனுள்ளதாக இருக்கும்.
ஆனால், தன் முதுகில் உள்ள அழுக்கை மறைக்க அல்லது மறக்க பிறர் முதுகில் உள்ள அழுக்கை சுட்டிக்காட்டும் அவலம் மிகவும் ஆபத்தானது. அடுத்த வீட்டுக் கதைகளைக் கேட்பதும், தெரிந்து கொள்வதும் பலருக்கு அச்சு வெல்லம் சாப்பிடுவது போல இருக்கும். நம்மை விட பொருளாதாரத்தில் குறைவாக இருப்பவர்களையோ அல்லது சமமாக இருப்பவர்களது வாழ்க்கையில் நடப்பவற்றை அறிந்து கொள்ளவோ நாம் மிகவும் ஆர்வம் காட்டுவோம்.
அதிலும், அவர்கள் நம்மை விட இன்னும் வாழ்க்கையில் முன்னேறவில்லை என்று அறிந்து கொண்டால் மிகவும் சந்தோஷப்படுவோம். இது பொதுவாகவே பலருக்கும் இருக்கும் கெட்ட பழக்கம்தான். என்ன செய்வது? இது நிச்சயம் ஒருவரை வாழ்வில் வெற்றியடைய செய்யாது. மாறாக, வீண் ஆசைகள், தன்னம்பிக்கை இல்லாமையைத்தான் உருவாக்கும்.