மாதம் ஒருமுறை பாத்ரூமுக்கு மெழுகுவர்த்தி எடுத்துட்டு போங்க... நடக்குற அதிசயத்தை நீங்களே பாருங்க!
நாம் நம் வீட்டின் வரவேற்பறையை எவ்வளவு சுத்தமாக வைத்திருக்கிறோமோ, அதே அளவு முக்கியத்துவம் குளியலறைக்கும் கொடுக்க வேண்டும். ஆனால், பாத்ரூமைச் சுத்தமாகப் பராமரிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. டைல்ஸ் இடுக்குகளில் சேரும் கறுப்பு நிற அழுக்கு, குழாய்களில் படியும் பிடிவாதமான உப்புக்கறை, கதவைத் திறக்கும்போது வரும் எரிச்சலூட்டும் சத்தம் எனப் பிரச்சனைகள் ஏராளம்.
இதற்காகக் கடைகளில் விற்கும் விலை உயர்ந்த 'கிளீனிங் லிக்விட்'களை வாங்கிப் பணத்தைக் கரைப்பதை விடுங்கள். மின்சாரம் இல்லாத போது வெளிச்சத்திற்காகப் பயன்படுத்தும் ஒரு சாதாரண வெள்ளை மெழுகுவர்த்தி, உங்கள் பாத்ரூமின் தலையெழுத்தையே மாற்றும்
பொதுவாக டைல்ஸ்களுக்கு இடையில் இருக்கும் சிமெண்ட் பூச்சு பஞ்சு போன்ற தன்மை கொண்டது. நாம் குளிக்கும்போது தெறிக்கும் சோப்புத் தண்ணீையும் அழுக்கையும் அது எளிதில் உறிஞ்சிவிடும். ஈரப்பதம் தங்குவதால்தான் அங்குப் பூஞ்சை மற்றும் பாசி படிகிறது. இதைத் தடுக்க ஒரு சூப்பர் வழி இருக்கிறது.
முதலில் டைல்ஸ் மற்றும் இடுக்குகளை நன்றாகத் தேய்த்துக் கழுவி, ஈரம் இல்லாமல் காய விடுங்கள். ஈரம் காய்ந்த பிறகு, ஒரு சாதாரண வெள்ளை நிற மெழுகுவர்த்தியை எடுத்து, டைல்ஸ் இடுக்குகளின் மீது பென்சிலால் கோடு கிழிப்பது போல அழுத்தித் தேய்க்க வேண்டும். மெழுகில் இருக்கும் Paraffin தண்ணீர் உள்ளே இறங்காமல் தடுக்கும் ஒரு 'வாட்டர் ப்ரூஃப்' ஆகச் செயல்படும். இதனால் தண்ணீர் அதன் மேல் பட்டாலும் ஒட்டாமல் வழிந்தோடிவிடும்; அழுக்கும் சேராது.
அடுத்த பெரிய தலைவலி, சில்வர் நிறக் குழாய்களில் படியும் வெள்ளைத் திட்டுக்கள். நம் ஊர் தண்ணீரில் உப்பு அதிகம் என்பதால், குளித்து முடித்ததும் பைப்புகளில் வெள்ளையாகத் திட்டுக்கள் படியும். இதைத் தவிர்க்க, பைப்பைத் துடைத்து ஈரம் நீக்கிய பிறகு, அதன் மேல் மெழுகுவர்த்தியை லேசாகத் தேயுங்கள். பின்னர் ஒரு மென்மையான துணியால் அதை நன்றாகத் துடைத்தால் பைப் கண்ணாடி போல ஜொலிக்கும். மெழுகு பூச்சு இருப்பதால், இனி தண்ணீர் அதன் மேல் நிற்காது, முத்து போல உருண்டு ஓடிவிடும். இதனால் உப்புக்கறை படிய வாய்ப்பே இல்லை.
மூன்றாவதாக, பாத்ரூம் கதவு மற்றும் அலமாரிகளில் இருந்து வரும் 'கீச் கீச்' சத்தம். குளியலறையில் இருக்கும் ஈரப்பதம் காரணமாக இரும்பு கீல்கள் துருப்பிடித்து உராயும்போது இந்தச் சத்தம் வரும். எண்ணெய் ஊற்றினால் அது வழிந்து தரையை அசுத்தமாக்கும். அதற்குப் பதிலாக, மெழுகுவர்த்தியை அந்த இணைப்புகளில் தேய்த்துவிட்டு கதவை இரண்டு முறை திறந்து மூடுங்கள். மெழுகு ஒரு சிறந்த Lubricant ஆகச் செயல்பட்டு அந்தச் சத்தத்தை உடனடியாக நிறுத்திவிடும்.
இந்த எளிய பராமரிப்பு முறைக்குத் தேவைப்படுவதெல்லாம் ஒரு சிறிய மெழுகுவர்த்தி மட்டுமே. மாதம் ஒருமுறை இதைச் செய்தாலே போதும், உங்கள் பாத்ரூம் எப்போதும் புதியது போலவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். ஆயிரக்கணக்கில் செலவு செய்து பராமரிப்பதை விட, புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால் வேலையும் மிச்சம், பணமும் மிச்சம்.

