

நாம் நம் குடும்ப உறவுகளிடமிருந்து பெறும் நன்மைகளை விட, நம் நண்பர்கள் மூலம் பெறும் உதவி, அன்பு, ஆதரவு போன்றவை அதிகம் என்றொரு பொதுவான கருத்து உண்டு. ஆனால், நண்பர்கள் வைத்துக்கொள்ளாமல் நாம் நாமாக தனித்து செயல்படும்போது, நமக்கு மேலும் பல நன்மைகள் கிடைப்பதாக மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அவை யாவை என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. நெருங்கிய நண்பர்கள் இல்லாதபோது, ஒருவர் தன்னைத்தானே நம்பி முடிவெடுக்கக் கற்றுக்கொள்கிறார். இது மன வலிமையையும் தன்னம்பிக்கையையும் (self-reliance) வளர்க்கிறது.
2. நட்பு வட்டங்களில் ஏற்படும் பொறாமை, ஒப்பீடு, தவறான புரிதல்கள், மனக்கசப்புகள் போன்றவை குறைந்து மனம் அமைதி பெற வாய்ப்பு உண்டாகும்.
3. மொபைல் உரையாடல், பிறந்த நாள் பார்ட்டியில் பங்கேற்பது போன்ற நண்பர்களுடனான விஷயங்களுக்காக நேரம் ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படாது. இதனால் வாசிப்பு, தியானம், படைப்பாற்றல், திறன் வளர்ப்பு போன்றவற்றில் கவனம் செலுத்த நேரம் கிடைக்கும். நாளின் இருபத்தி நான்கு மணியும் உங்களுக்கே உங்களுக்கு என்ற நிலை உருவாகும்.
4. நெருங்கிய நண்பர்கள் இல்லாத நிலையில், ஒருவர் தம் இலக்கைத் தெளிவாக நிர்ணயிக்கவும், அதை அடைவதற்கு பெரும்பாலான நேரத்தை, தான் விரும்பியபடி செலவழித்து உழைக்கவும் முடியும்.
5. தனிமை என்பது எப்போதும் துன்பம் அல்ல. அது ஆழ்ந்த சுய சிந்தனைக்கு வழி வகுக்கும். தனது ஆசைகள், பயங்கள், விருப்பங்கள் ஆகியவற்றை புரிந்துகொள்ள உதவும். தொட்டதற்கெல்லாம் பிறர் துணையை நாடாமல், தனக்குத்தானே துணையாகவும், தன்னைத்தானே மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ளத் தெரிந்த ஒருவர் சூப்பர் பவர் கொண்டவர் என மனோதத்துவம் கூறுகிறது.
6. நட்பின் துணையில்லாமல் வலி, தோல்வி, ஏமாற்றம், மன அழுத்தம், வெவ்வேறு மாறுபட்ட சூழல்களை கையாளுதல், அசௌகரியங்களை அனுபவித்தல் போன்ற வாழ்க்கையில் உண்டாகும் கடுமையான சவால்களை சுயமாக சமாளிக்கக் கற்றுக் கொள்வதால் உணர்ச்சி முதிர்ச்சி (Emotional maturity) அதிகரிக்கும்.
7. ஒரே நெருங்கிய வட்டத்தில் சிக்காமல், பல்வேறு மனிதர்களுடன் அளவான, மரியாதையான உறவுகளை வைத்துக்கொள்ள முடியும்.
8. நட்பு வட்டத்திற்குள் உருவாகும் சண்டை சச்சரவுகளை தீர்த்து வைப்பது அல்லது அவர்களின் தனிப்பட்ட தேவைகளுக்கு உதவ வேண்டியது போன்ற சூழ்நிலை உருவாகும்போது நமது பங்களிப்பையும் தர வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். நண்பர்களைத் தவிர்த்துவிடும்போது இந்த மாதிரியான தர்மசங்கடமான நிலை வருவதையும் தவிர்த்து விடலாம்.
9. தொழில் முறை அல்லது உறவு முறைகளுக்குள் முக்கியமான முடிவெடுக்க வேண்டிய நேரங்களில், மூன்றாம் மனிதரின் குறுக்கீடின்றி நாம் விரும்பியபடி முடிவெடுத்துக் கொள்ளலாம்.
10. வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமல்ல என்ற நிலைப்பாடு நட்புறவுக்கும் பொருந்தக் கூடியதே. நிரந்தரமில்லாத நட்பு வட்டத்தில் சிக்கி, பின் அதை இழக்கும்போது அனுபவிக்கும் வலியை விட தனிமை எவ்வளவோ மேல் என நினைத்து தனித்திருக்கப் பழகிக் கொள்ளலாம்.
11. நெருங்கிய நண்பர்கள் உங்கள் வாழ்க்கைத் தரம் அவர்கள் தரத்திற்கு இணையாக இருப்பதையே விரும்புவார்கள். எனவே, நீங்கள் தனித்திருந்து, சுதந்திரமாக செயல்பட்டு உங்கள் வாழ்க்கைத் தரம் உயர முயற்சிப்பதே சிறப்பு. நெருங்கிய நட்பு இல்லாத வாழ்க்கை குறைபாடுடையது என்ற எண்ணம் தவறானது. அது சிலருக்கு அமைதி, சுய வளர்ச்சி, மன வலிமை ஆகியவற்றுக்கான பாதையாகவும் இருக்கலாம். ‘தனிமையைப் புரிந்தவன், தன்னைப் புரிந்தவன்’ எனவும் கூறலாம்.