

திருமணம் என்னும் பந்தம் ஆயிரம் காலத்து புனிதமான உறவு என்றும், அது சொர்க்கத்திலே நிச்சயிக்கப்படுகின்றது என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். உறவுகள் புடைசூழ, கலாசாரம், பண்பாடு, மரபு, மரியாதை ஆகியவை ஒன்றிணைந்து நடைபெறும் இந்த இனிய வைபவம் மனித வாழ்க்கைக்கு நிறைவும் ஆனந்தமும் அளிக்கிறது. திருமணம் என்பது இரண்டு மனங்களை மட்டுமல்ல, இரண்டு குடும்பங்களையும் இணைக்கும் புனித சங்கமமாகும்.
அரை நூற்றாண்டுக்கு முன்பு, திருமணங்கள் பெரும்பாலும் வீட்டுப் பெரியவர்கள் நிச்சயித்து ஏற்பாடு செய்தவையாக இருந்தன. அந்த பந்தத்தில் கவிதையாய் வாழ்ந்து மறைந்தவர்கள் பலர்; கலைந்து சிதறியவர்கள் மிகச் சிலரே.
‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு’ என்ற எண்ணத்தை முறியடித்து, இன்று பெண்கள் கல்வியில் சிறந்து, உயர்ந்த பதவிகளில் அமர்ந்து, உலகளவில் சாதனை புரிந்து வருகின்றனர். கல்வி பெண்ணுக்கு சுயமரியாதையையும் உரிமையையும் வழங்குகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
ஆனால், இன்றைய திருமணச் சூழலில் அந்தக் கல்வியே சில நேரங்களில் கர்வமாக மாறுகிறதோ என்ற ஐயம் எழுகிறது. ஒரு காலத்தில் முதிர்கன்னிகளின் கண்ணீர் இலக்கியங்களில் இடம்பெற்றது; இன்றோ முதிர்கண்ணன்களும் அதே வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது காலத்தின் மாற்றமா அல்லது நம் சிந்தனையின் மாற்றமா என்ற கேள்வி எழுகிறது.
இன்றைய பெற்றோர், மகள்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பை பெருமையாகக் கருதுகிறார்கள். ஆனால், அதே நேரத்தில், குடும்ப உறவுகள், சமரசம், பொறுப்பு போன்ற வாழ்க்கை நுணுக்கங்களை கற்றுக்கொடுப்பதில் குறைபாடு காணப்படுகிறது. எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும், மனைவி, அம்மா என்ற பொறுப்புகளை உணர்ந்து குடும்பத்தை ஒருங்கிணைக்கும்போதே பெண்மையின் பூரணத்துவம் வெளிப்படுகிறது.
இந்தப் புரிதல் இல்லாமையால், பல திருமணங்கள் சில காலங்களிலேயே முறிவுக்கு உள்ளாகி, நீதிமன்ற வாசலுக்கு செல்லும் நிலை உருவாகிறது. ‘ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே’ என்ற பழமொழிக்கேற்ப, கல்வியோடு பண்பாட்டையும், சுயநிலையோடு பொறுப்பையும் இணைத்து, திருமணம் எனும் பந்தத்தை அர்த்தமுள்ள ஒன்றாகக் காக்க வேண்டியது இன்றைய சமூகத்தின் முக்கியக் கடமையாகும்.