
சமையலறை என்பது உணவுகளைத் தயாரிக்கவும், அன்போடு அதைப் பரிமாறவும் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு அங்கமாகக் காணப்படுகிறது. வீட்டின் இதயமாக சமையலறை காணப்படுகிறது. அப்படிப்பட்ட இந்த சமையலறையானது பல பெண்களுக்கு ஒரு கனவாகவே இருக்கிறது. அதாவது, கனவு என்றால் நீங்கள் நினைக்கும் ஆடம்பரமான சமையலறை இல்லை. அதற்கு மாற்றாக சமையலுக்கு தேவையான அடிப்படை விஷயங்களைப் பூர்த்தி செய்யும் விதமாக சமையலறை இருந்தால் நன்றாக இருக்கும் என்பதே பல பெண்களின் கனவாக இருக்கிறது.
நகரங்களில் குட்டி குட்டியான அப்பார்ட்மெண்ட்களில் வாழும் மக்களும், அதேபோல் நெருக்கமாக இருக்கும் பகுதிகளில் வாழும் மக்களின் வீடுகளில் உள்ள சமையலறையானது பார்ப்பதற்கு அடக்கமாகவும், சிறியதாகவும்தான் காணப்படும். மற்றொருபுறம் மினி கிச்சன் இருப்பதால் நம் கைக்கெட்டும் தொலைவில் எல்லா சமையல் பொருட்களும் கிடைத்துவிடும். அதேபோல், சமைக்கும் நேரமும் விரைந்து முடிக்கப்படும் என்று ஒரு சிலர் இந்த மினி கிச்சனை விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட இந்த மினி கிச்சனில் உள்ள சாதகங்கள், பாதகங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
சாதகங்கள்:
* மினி கிச்சன் பார்ப்பதற்கு அடக்கமாகக் காணப்படும். அனைத்தும் ஒரே இடத்திலே காணப்படும்.
* சமையலுக்குப் பயன்படுத்தக்கூடிய மசாலா பொருட்கள் கைக்கெட்டும் தூரத்திலே இருக்கும்.
* மினி கிச்சனில் குறைவான மேற்பரப்பு இருப்பதால் சுத்தம் செய்வதும் எளிதாகி விடுகிறது.
* எந்தப் பொருளை எங்க வைத்தோம் என்ற குழப்பம் இருக்காது. அனைத்துமே நம் கைக்கெட்டும் தூரத்திலேயே இருக்கும்.
* சமைக்கும் நேரமும், பாத்திரங்களைக் கழுவும் நேரமும் மிச்சமாகின்றன.
* காய்கறி கழிவுகள், குப்பைகள், நெகிழி குப்பைகள் போன்றவற்றை எளிதில் அடையாளம் கண்டு சீக்கிரமாக அப்புறப்படுத்த உதவியாக இருக்கிறது.
* மசாலா பொருட்களை ஓரிடத்தில் தேடுவதும், பருப்பு வகைகளை ஓரிடத்தில் தேடுவதும், எண்ணெய் பாட்டிலை ஓரிடத்தில் தேடுவதும் என்ற குழப்பம் இதில் இருப்பதில்லை.
* அதேபோல், சமைக்கப் பயன்படும் பாத்திரங்களின் எண்ணிக்கையும் குறைந்த அளவில் இருப்பதால், பாத்திரம் கழுவுவதற்கான நேரமும் மிச்சப்படுகின்றன.
பாதகங்கள்:
* மினி கிச்சனின் பரப்பளவு குறைந்த அளவில் இருப்பதால் போதுமான காற்றோட்டம் கிடைப்பதில்லை.
* ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் இணைந்து சமைக்க முடிவதில்லை.
* கிரைண்டர், ஃபிரிட்ஜ் போன்ற மின்சாதனப் பொருட்கள் வைப்பதற்கான இடம் மிகக் குறைந்த அளவில் காணப்படும். அதேபோல், வைப்பதற்கான இடமும் காணப்படுவதில்லை.
* குறைவான அலமாரி மற்றும் கவுண்டர் இடத்துடன் இவை காணப்படுகின்றன. மினி சமையலறைகளில் உபகரணங்கள், பாத்திரங்கள் மற்றும் உணவுக்குப் போதுமான சேமிப்பு இடம் இருப்பதில்லை.
* எல்லா பொருட்களுமே கைக்கெட்டும் தூரத்தில் இருப்பதால், ஒரு சில நேரம் தவறுதலாக கைபட்டு கண்ணாடி பொருட்களோ அல்லது வேறொரு பொருட்களோ கீழே விழுந்து உடையும் அபாயம் உள்ளது.
* வீட்டிற்கு விருந்தாளிகள் அதிகமாக வரும்பொழுது அவர்களுக்கான உணவுகளை தயாரிப்பதில் தாமதமாகிறது.
மினி கிச்சன் சாதகமா, பாதகமா என்பதைத் தாண்டி ஒவ்வொரு மக்களும் தங்களின் அன்றாட பொருளாதாரத்தின் நிலைமையை உணர்ந்து அவரவர்களின் வசதிக்கேற்ப சமையலறையை அமைத்துக்கொள்வதுதான் சிறந்தது.