
கணவன் மனைவிக்கு இடையே நல்ல அன்யோன்யம் இருந்தால்தான் வாழ்க்கைச் சக்கரம் அமைதியாகவும், சந்தோஷமாகவும் ஓடும். இதற்கு மனைவிக்கு பிடித்த விஷயங்களை கணவன் அறிந்து கொள்வதும், அவள் மீது அக்கறை செலுத்துவதும் அவசியம்.
புரிதல் அவசியம்:
கணவன் மனைவி உறவில் நல்ல புரிதல் இருப்பது அவசியம். அதிலும் மனைவியைப் பற்றி புரிந்து கொள்ளுதல் நிறைவான வாழ்க்கையை வலுவாக்க உதவும். மனைவியின் விருப்பு வெறுப்புகளை தெரிந்து கொள்வதும், அவரின் மனநிலையை புரிந்து கொள்வதும் மிகவும் அவசியம். ஒரு குறுஞ்செய்தி அனுப்புவது, ஃபோன் செய்வது போன்ற செயல்களின் மூலம் நீங்கள் அவர்களை எவ்வளவு நேசிக்கிறீர்கள், அக்கறை காட்டுகிறீர்கள் என்பதை அவர்களுக்குப் புரியவைக்கும்.
நேரம் செலவிடுவது:
மனைவிக்கு பிடித்தமான பொழுதுபோக்குகளை தெரிந்துகொள்ளவும். அவற்றில் உங்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும் மனைவிக்காக, அவரின் ஆசைக்காக சிறிது நேரமாவது செலவிடுவது உங்கள் மீது பாசத்தை அதிகரிக்க உதவும். மனைவியுடன் தினமும் சிறிது நேரமாவது தனிமையில் செலவிடுவது உங்கள் மீது அதிக அன்புக்கொள்ள வைக்கும்.
பிடித்த உணவுகள்:
மனைவிக்கு எந்த உணவு அதிகம் பிடிக்கும், எதை அவர்கள் அதிகம் விரும்புவார்கள் என்பதை அறிந்துகொண்டு உங்களுக்கு நேரம் கிடைத்தால் வீட்டிலேயே விடுமுறை நாட்களில் செய்து கொடுத்து மகிழ்விக்கலாம். உங்களுக்கு சமைக்க வரவில்லை என்றால் நல்ல ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அவர் விரும்பும் உணவை ஆர்டர் செய்யலாம்.
அன்பு மொழி:
அன்பின் பகிர்தல்களே ஆனந்தத்தின் அடிப்படை. சிலர் அன்பான வார்த்தைகள் மூலம் தங்கள் ஆசையை வெளிப்படுத்துவார்கள். சிலர் பரிசுகள் கொடுத்து அன்பை காண்பிப்பார்கள். வேறு சிலரோ முத்தமிடுதல் கட்டி அணைத்தல் போன்ற செயல்கள் மூலம் தெரியப்படுத்துவார்கள். எனவே நம்முடைய பார்ட்னரின் காதல் மொழியைத் தெரிந்துகொண்டு அதற்கு ஏற்ற வகையில் நடந்துகொள்ள நல்ல பிணைப்பு ஏற்படும்.
விருப்பு வெறுப்பை அறிவது:
மனைவியின் விருப்பங்களை அறிந்து கொள்வது அவருக்கு பிடித்த உணவு, நிறம், திரைப்படங்கள், நண்பர்கள், புத்தகங்கள், உடை, உணர்வுகள், எதிர்பார்ப்புகள் போன்ற எல்லாவற்றையும் தெரிந்து கொள்வது அவசியம். உங்கள் மனைவிக்கு எதன் மீது, எந்த விஷயத்தில் அதிக ஈடுபாடு உள்ளது என்பதை அறிந்து கொள்வதும், அவரின் விருப்பம் எது, வெறுப்பை ஏற்படுத்துவது எது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி அதைத் தவிர்க்கவும் முயலவேண்டும்.
உடல் நலத்தில் அக்கறை:
நம்முடைய உடல் நலத்தில் கவனம் செலுத்துவதுபோல் மனைவியின் உடல் நலத்திலும் அக்கறை கொள்வது நல்லது. உடல்நிலை சரியில்லை என்று தெரிந்தால் ஆதரவாக இருப்பதும், அன்பான வார்த்தைகள் பேசுவதும், தானே கவனித்துக் கொள்வாள் என்று விடாமல் தகுந்த மருத்துவரிடம் அழைத்துச் செல்வதும் தன் மீது அக்கறை கொண்டு உள்ளார் என்ற எண்ணம் உருவாக வழிவகுக்கும்.
ஆன்மீக நம்பிக்கைகள்:
நமக்கு ஆன்மீகத்தில் அதிக நாட்டம் இல்லை என்றாலும் நம் துணைக்கு ஆன்மீகத்தின் மீது அதிக பற்று இருந்தால் அதனை எதிர்க்காமல் இருப்பதும், அவர்களின் திருப்திக்காக அவர்களை சந்தோஷப்படுத்தும் விதத்தில் அழைக்கும்போது மறுக்காமல் கோவில்களுக்கு செல்வதும் அவர்களை உங்கள் பக்கம் இழுக்கும்.
விருப்பத்திற்கு ஆதரவளிப்பது:
மனைவியின் விருப்பம் எதுவோ அதைத் தடை செய்யாமல் உங்களால் முடிந்த அளவு ஆதரவைத் தரலாம். மனைவியின் கனவுகள் மற்றும் லட்சியங்களை அறிந்து கொண்டு அவரின் இலட்சியத்திற்கு ஆதரவு அளிப்பது அவர்களுக்கு உங்கள் மீது ஒரு தனி காதல், பாசம், பற்று, அன்னியோன்யம் ஏற்பட வழிவகுக்கும்.
உறவுகளுக்கு முக்கியத்துவம்:
மனைவிக்கு நெருக்கமான குடும்ப உறவினர்களை அறிந்து கொள்வதும், அவர்கள் அழைக்கும் நிகழ்ச்சி களுக்கு தவறாமல் மனைவியுடன் சென்று பங்கேற்பதும் நீங்கள் உங்கள் மனைவிக்கு அளிக்கும் முன்னுரிமை யையும், முக்கியத்துவத்தையும் பிறருக்கு எடுத்துக் காட்டும். மனைவிக்கும் உங்கள் மீது மரியாதை ஏற்படும்.