தனிமையின் கொடுமையை தவிர்ப்பது எப்படி?

loneliness
loneliness
Published on

உறவுகளைப் பிரிந்து வாழ்பவர்களையும், பிள்ளைகளைப் பிரிந்து முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களையும் விசாரித்தால், தனிமை மிகவும் கொடுமையானது என்பது நமக்கு தெரிய வரும்.

நம்மில் சிலர் தாமாகவே தனிமையில் ஆழ்ந்துவிடுவது உண்டு. அதற்கு இன்றைய வாழ்க்கைச் சூழல், பணிச்சுமை, குடும்பப் பிரச்னைகள், சமூகப் பிரச்னைகள் எனப் பல காரணங்கள் கூறப்படுகின்றன.

பொதுவாக மனிதர்கள் அகத் தனிமையாலும், புறத் தனிமையாலும் பாதிக்கப்பட்டவர்களாக வாழ்ந்து வருகிறார்கள். பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பு, பிறகு வேலை என்று வாழ்க்கையில் பல்வேறு பரிணாமங்களை எடுத்தாலும்கூட அகத் தனிமையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுடன் ஒட்டாமலேயே வாழ்க்கையை நடத்துபவர்களாக இருக்கிறார்கள். இவர்கள், வெறுமையை அதிகமாக உணர்வதால், மனச்சோர்வுடன் (Depression) காணப்படுவார்கள். எனவே, மற்றவர்களுடன் அதிகம் பழகுவதைத் தவிர்ப்பார்கள்.

அகத் தனிமையினருக்கு நேர் எதிரான வாழ்க்கையை நடத்துபவர்கள் புறத் தனிமையினர். நண்பர்கள், உறவுகள் என அனைவரும் வேண்டும் என நினைப்பார்கள். இவர்களின் பெரிய குறையே பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்னும் ஐயமே ஆகும். இவர்கள் பிறர் சொல்வதைக் கேட்டே தனது வாழ்க்கையை நட்த்திக்கொண்டிருப்பவர்கள்.

இவர்களைத் தவிர நோயாளிகளும், ஆளுமைப் பண்பு உள்ளொடுங்கியவர்களும், தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களும் தனிமையை அதிகமாக விரும்புகிறார்கள். இப்படித் தனிமை உணர்வு தொடரும்போது மனச்சோர்வில் தொடங்கி மனச்சிதைவு (Schizoid) வரை பல்வேறு உள நோய்களுக்கு (Psychosis) இவர்கள் உள்ளாக நேரிடுகிறது. இது தனிமனித வாழ்க்கையில் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

சில சமயங்களில் இவர்களுக்கு தற்கொலை எண்ணம் கூட வரலாம். இதை அடையாளம் காணும் உறவுகள் அவர்களுக்கு தனிமையில் இருக்கும் வாய்ப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தனிமையைத் தவிர்க்க ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் கிடைக்கும் மெய்நிகர் உறவுகளுக்குப் பதிலாக, உண்மையிலேயே நம் நலம் விரும்பும் உறவுகளுடன் நேரத்தைச் செலவிடலாம்.

நம் மனதில் எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும்போது உடனடியாக அவற்றைத் தவிர்த்துவிட்டு, நேர்மறையான எண்ணங்களைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். நாம் பேசும்போது பிறரின் கண்களைப் பார்த்துப்பேசுவதன் (Eye Contact) மூலம் தயக்கங்களைத் தவிர்த்து, உறவுகளை மேம்படுத்தி, தனிமையைத் துரத்த முடியும்.

இதையும் படியுங்கள்:
தனிமை என்பது கொண்டாட்டமா? திண்டாட்டமா?
loneliness

நாம் மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்ப்பதை தவிர்த்துவிட வேண்டும். மற்றவர்களை அவர்களின் குறைகளுடன் அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுவது நல்லது. நம்மை தனிமை துரத்தும்போது, சில மனப்பயிற்சிகளில் ஈடுபடலாம். நாம் எதிர்பார்ப்பவற்றை மனக் காட்சியாக (கற்பனை) உருவாக்கிப் பார்க்கலாம். இது நல்ல பலனைத் தரும். சமூகத்துடனான தொடர்பை மேம்படுத்திக்கொள்ள சமூக சேவை, செய்யும் குழுக்களுடன் இணைந்து செயல்படுவதில் தம்மை ஈடுப்படுத்திக்கொள்ளலாம்.

நாம் தினமும் நம் மனநலத்திற்காகவும், உடல்நலத்திற்காகவும் சில மணி நேரங்களை ஒதுக்க வேண்டும். அது நமக்கு நெருக்கமானவர்களுடன் இருப்பதாக இருக்க வேண்டும். வீட்டில் உள்ளவர்களுடன் பயனுள்ள வழியில் அந்த நேரத்தைச் செலவழிக்க முயல வேண்டும்.

குழு விளையாட்டுகளில் கலந்துகொள்ளுவதன் மூலம் நம்முடைய ஈகோவை விரட்டி, விட முடியும்.இவை தவிர, தனிமையில் இருந்து விடுபட நல்ல புத்தகங்கள், மனதுக்கு உற்சாகம் அளிக்கும் நல்ல இசை, முடிந்தால், முறைப்படி பாடவோ, இசைக்கருவி மீட்டும் கலையை கற்றுக் கொள்வதிலோ ஈடுபடலாம். ஒரு மனிதனின் ஆற்றலைக் குறைத்து, அவனைப் பலவீனமாக்கும் சக்தி தனிமைக்கு மட்டுமே உண்டு. எனவே தனிமையை நாம் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, முதுமையில் தனிமையை தவிர்க்க நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
தனிமை எப்படிப்பட்டது தெரியுமா?
loneliness

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com