- ராதா ரமேஷ்
பள்ளிக்கல்வி கூட முடிக்காத ஒரு தலைவர் தான் காமராஜர். கல்வியின் மதிப்பை உணர்ந்து பள்ளிகள் தோறும் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்து அதன் மூலம் மாணவர்களை வறுமையின் பிடியில் இருந்து நீக்கி கல்வி கற்க தூண்டியவர். அதனால் தான் அவர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.
'கல்வி வளர்ச்சி நாள்' என்பது ஒரு புறம் இருந்தாலும், முதலில் கல்வி என்பது என்ன என்பதை நம்மில் எத்தனை பேர் சரியாக புரிந்து கொண்டோம் என்ற கேள்வி எழுகிறது.
சமீபத்தில் ஒரு கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்ற போது கல்வி என்றால் என்ன? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கலந்துரையாடலில் பங்கேற்ற அனைவரும் பட்டதாரிகளே. அவர்களிடம் கல்வி என்றால் என்ன? என்ற கேள்வி எழுப்பப்பட்ட போது அனைவரிடமும் பதில் சொல்வதற்கு ஒரு வித தயக்கம் இருந்தது. கல்வி என்பது நல்ல நடத்தையை கொண்டு வருவது, ஒழுக்கத்தை கொண்டு வருவது, ஆளுமையை வளர்த்துக் கொள்வது, தகவல் பரிமாற்றத்தை வளர்த்துக் கொள்வது, வாழ்வில் வாழ கற்றுக் கொடுப்பது இப்படி எத்தனையோ கருத்துக்கள் வந்து விழுந்தன.
இதெல்லாம் கல்வியால் பெறக்கூடிய பயன்கள், அப்படியானால் கல்வி என்பது என்ன? என்று மறுபடியும் கேள்வி வந்தது. எங்கும் ஒரே மௌனம். அப்படியென்றால் கல்வி என்பது என்ன?
ஒரு மனிதனை ஒரு நிலையிலிருந்து அடுத்த கட்ட நிலைக்கு உயர்த்துவதுதான் கல்வி. கல்வி என்பது அறியாமையை எனும் இருளை விரட்டக்கூடிய வெளிச்சம்.
கல்வி என்பது படித்து, பட்டம் பெற்று சம்பாதிப்பதற்கு என்ற மனநிலையில் நாம் அனைவரும் வளர்ந்து வருகிறோம். ஆனால் கற்றலின் பயனானது வாழ்வு முழுதும் தொடரக்கூடியது. படித்து பணம் சம்பாதிப்பது கல்வியின் ஒரு பகுதியே தவிர அதுவே கல்வியாகாது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் கல்வி என்பது வெறும் பணம் சம்பாதிப்பதற்கு என்ற நிலை வந்து விட்டது.
கல்வி என்பதன் நோக்கம் வெறுமனே பணம் சம்பாதிப்பது மட்டுமில்லை. அதையும் தாண்டி, வாழ்வியலை சரியாக புரிந்து கொள்வதிலும், வரக்கூடிய சிக்கல்களுக்கு நிதானமாக தீர்வுகளைத் தேடிக் கொள்வதிலும் இருக்கிறது கல்வியின் வெற்றி. எனவே நாம் கல்வியையும், கல்வியால் பெறக்கூடிய பயன்களையும் மிகச் சரியாக புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.