மனித குலத்திற்கு இறைவன் அருளியுள்ள கொடைகளில் பேசும் திறனும் ஒன்று. பேச்சுதான் மனிதனை குரங்கிலிருந்து வேறுபடுத்துகிறது. பேச்சு ஒரு சைகை மொழியுடன் தொடங்கியிருக்கலாம். ஆனால் மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியில், மொழிகள் உருவான பின், பேச்சு முக்கிய பங்கு வகிக்கின்றது. நாம் நினப்பதை பிறருக்கு தெளிவாக புரிய வைக்க பேசும் திறன் நமக்கு உதவுகிறது.
தற்போதுள்ள இயந்திரத்தனமான வாழ்க்கை முறையில் பெற்றோர்கள் கூட, தமது குழந்தைகளுடன் பேசுவதற்கு கணிசமான நேரத்தை ஒதுக்குவதில்லை. இது மிகவும் துரதிஷ்டவசமானது. நவீன தொழில் நுட்ப உலகத்தில் பேசும் திறனை மீட்டெடுக்கும் கடமை நம் எல்லோருக்கும் உண்டு.
இறைவன் நமக்கு இரண்டு காதுகளை கொடுத்து அதற்கு கேட்கும் ஒரே பணியைக் கொடுத்தான். ஆனால் ஒரே ஒரு வாயினைக் கொடுத்து, அதற்கு பேசும் பணியினையும், உண்ணும் பணியினையும் கொடுத்தான். எனவே, நாம் பேசுவதைவிட அதிகமாக கேட்க வேண்டும் என்பதே ஆண்டவன் கட்டளை. பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் இருப்பதும், பேசக்கூடாத நேரத்தில் பேசுவதும் நாம் பொதுவாக செய்யும் தவறுகள்.
அரசர்கள் ஆண்ட காலத்திலேயே தூது சென்றவர்களின் பேச்சாற்றலே பல பிரச்னைகள் தீர்க்க அவர்களுக்கு உதவியிருக்கின்றது. இதை ஒளவை அதியமான் சந்திப்பு நிகழ்வுகள் நமக்கு தெளிவுபடுத்துகின்றன.
பணிநாடுனராக நேர்காணலுக்கு செல்லும் ஒருவர், அங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு அவருக்கு பதில் தெரிந்தும், தவறுதலாக உளறிவிடுகிறார். இது அவரது அச்சத்தினாலும், மனக்குழப்பத்தினாலும் ஏற்படுகிறது. இதனால் அவருக்கு அந்த வேலை கிடைக்காமல் போகலாம். அவருக்கு பேசும் திறனில் உள்ள குறைபாடே அதற்கு காரணமாகின்றது.
தனிப்பட்ட நபருடன் பேசும்போது இயல்பாக பேசலாம். ஆனால் ஒரு சபையில் பல்வேறு பின்புல மக்கள் இருப்பார்கள். அவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் நமது பேச்சு கவனமுடன் இருக்க வேண்டும். என்ன பேச வேண்டும் என்பதை சிந்தித்து முன்னமே திட்டமிடுவது, கருத்துக்களின் ஆழம் அறிந்து பேசுவது ஆகியவை பேசும் திறனுக்கு அடிப்படையானவை. நாம் பேசும் போது, மென்மையான கை அசைவுகளை செய்யலாம். இது நமது தகவல் தொடர்புச் சங்கிலியை பலப்படுத்தும்.பேச்சின் ஊடே அமைதியான குரலில் கேட்பவர்களுடன் நகைச்சுவை உணர்வுடன் உரையாடுதல் நமது பேச்சினை ஆர்வமுள்ளதாக மாற்றும்.
தன்னம்பிக்கையுடன் திறம்பட பேசுவதற்கு அதிகம் கேட்பதுவும், வாசிப்பதுவும் முக்கியம். இது நமது சொற்களஞ்சியத்தை அதிகரிக்கும். நல்ல நோக்கத்துடனும், நேர்மறையான அணுகுமுறையுடனும் பேசுவது சிறந்தது. ஆரோக்கியமான, பயனுள்ள கருத்துக்களை குரலில் ஏற்றத் தாழ்வுடன் பேசுவதே அனைவராலும் விரும்பப்படுகிறது. நமது உடல்மொழி, நம்முடன் இருப்பவரின் மனநிலைக்கேற்ப அவரது கருத்துகளில் நேர்மறை, எதிர்மறை பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
நாம் சொல்ல நினைக்கும் கருத்துக்களில் நமக்கு தெளிவான அறிவு இருக்க வேண்டும். தெரிந்ததை தெளிவாக பேசினாலே, பாதி தன்னம்பிக்கை நமக்கு வந்துவிடும். தவறாக பேசுகிறோமோ என்ற ஒரு வினாடி சிந்தனையே, நம்மை தடுமாறச் செய்துவிடும். அதற்கு இடம் கொடுக்கக் கூடாது. கேட்பவரின் கண்களை நேராக பார்த்து பேசுவது நம் மனஉறுதியை கேட்பவருக்கு உரக்கச் சொல்லும். இது தேவையற்ற குழப்பங்களை தவிர்க்கவும் உதவும்.
நமது கருத்துகள் ஊகத்தின் அடிப்படையில் இருக்கக்கூடாது. நமது கருத்துக்களை பிறர் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கவும் கூடாது. நமது பேச்சு குறித்த விமர்சனங்களை திறந்த மனதுடன் ஆராய வேண்டும். இதனால் நமது கருத்து சார்ந்த கூடுதல் பரிணாமங்களை நாம் அறிய முடியும்.
பேச்சுத்திறன் ஓரளவு பெற்றவர்கூட அவசரத்திலும், ஆத்திரத்திலும், நிதானமிழந்து பரபரப்புக்கு ஆட்பட்டு சொல்லக் கூடாததைச் சொல்லி பின்னர் வருந்துவதுண்டு. கத்தி பேசுவது நம்மை குறுகிய மனப்பான்மை கொண்டவராக மற்றவருக்கு காட்டும்.
தொடர்ந்து நீண்ட நேரம் பேசுவது கேட்போருக்கு சலிப்பினை ஏற்படுத்தலாம். கேட்போருக்கு தேவையான கருத்தைமட்டும் சுருங்கச் சொல்வதற்கு நேர மேலாண்மை குறித்த புரிதல் அவசியம்.
எந்த வினாவிற்கும் உடனடியாக எதிர்வினையாற்றுவது நமது மனித இயல்பு. எதிர்வினையாற்றுவது என்பது புரிந்துகொள்ளாமல் பேசுவது. பதிலளிப்பது என்பது சிந்தனைமிக்க எதிர்வினையைக் கொடுப்பதாகும். பொதுவாக எல்லா மக்களும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப எதிர்வினையாற்றுகிறார்கள். ஆனால், வெற்றிகரமான மக்கள்மட்டுமே சூழ்நிலைக்கு ஏற்ப பதிலளிக்கிறார்கள்.
நாம் பேசும் வார்த்தைகளுக்கு கூர்மை இருப்பதால்,பொறுப்புடன் அவற்றை பயன்படுத்த வேண்டும். அவை பிறரை காயப்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நமது பேச்சில் நம்பிக்கை, அன்பு, பாசம், மரியாதை ஆகியவற்றின் ஆதிக்கம் இருக்க வேண்டும். இவற்றுடன் கூடிய பேச்சுக்கள் கேட்பவர்களுக்கு அறிவுடன் ஆறுதலையும் அளிக்க வல்லன.
பெரிய தவறுகளை மென்மையான முறையில் கூறுவது தவறுகளை திருத்துவதற்கான சிறந்த வழியாகும். வார்த்தைகளால் குடும்பங்கள் சிதைந்ததற்கும்,பெரிய ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டதற்கும், போர்கள் நடந்ததற்கும் பல உதாரணங்கள் உண்டு. எனவே நமது பேச்சில் வார்த்தைகளை மிகவும் கவனமாகவும், புத்திசாலித்தனமாகவும் கையாள வேண்டும்.
வெற்றிகள் நிறைந்த மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு, நமது பேசும் திறன் அன்றாட வாழ்வின் முக்கிய பகுதியாக மாறிவிட்டது. எனவே, பேசும் திறனை வளர்த்துக்கொள்வோம் .வெற்றிகள் நிறைந்த வாழ்க்கையை வாழ்வோம்.