ஒரு ஆணோ, பெண்ணோ பல வருடங்களாகத் தான் செய்து வந்த பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டால், அதன் பின் செய்வதற்கு எதுவுமில்லை என்ற மனநிலையோடு, நாட்களை அதன் போக்கில் போக விட்டு ஒரு ஞானி போல் வாழ்க்கையைத் தொடருவோம் என்று நினைத்துக்கொள்கின்றனர். புதுப்புது மனிதர்களுடன் தொடர்பு மற்றும் அதிக மன நிறைவுடன் கூடிய புது அத்தியாயம் இனிதான் தொடங்கவிருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. இம்மாதிரியான புது வாழ்வு அமைவதற்கு பணி ஓய்வு பெற்ற அனைவரும் பின்பற்ற வேண்டிய 7 ஸ்டாயிக் (Stoic) வழிமுறைகள் என்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. நிகழ்காலத்தை நேசித்தல்: கடந்த நாட்களின் கவலைகளை மறக்கவும் எதிர்கால பயத்தைத் துறக்கவும் கற்றுக்கொள்ளுதல் அவசியம். நிகழ்காலத்தில் மட்டும் கவனம் செலுத்தி புதுப்புது பொழுதுபோக்கு அம்சங்களைத் தேர்ந்தெடுத்தல், மனதுக்குப் பிடித்தவர்களுடன் மாலையில் நடைப்பயிற்சி போவது என நேரத்தை கழிக்கும்போது ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியைத் தருவதாக அமையும்.
2. போனது போகட்டும் என்ற மனநிலை பெறுதல்: கடந்த வருடங்களில் செய்த தவறுகள், எடுத்த தவறான முடிவுகள், அதனால் ஏற்பட்ட இழப்புகள் போன்றவற்றை நினைத்து வருந்துவது, மேலும் அதன் காரணமாக ஒரு பிடிப்பற்ற வாழ்க்கையை வாழ நினைப்பது முற்றிலும் தவறானது. நடப்பது எதுவும் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதைப் புரிந்துகொண்டு போனவற்றைப் புறந்தள்ளி, இன்று நடப்பவற்றில் அதிக கவனம் செலுத்தினால் எல்லாம் நன்றாகவே நடக்கும். பழையதை நினைத்து வருந்துவதால் நடந்தது எதுவும் மாறப் போவதில்லை.
3. நன்றியுணர்வோடு வாழ்தல்: கடந்த காலங்களில் மிகவும் நேர்மையுடன் நடந்து கொண்டிருப்போம். பல கடுமையான நாட்களைக் கடந்திருப்போம். திட்டமிட்டபடியெல்லாம் நிகழ்வுகள் நடக்காதிருந்திருக்கலாம். இம்மாதிரியான சவால்களைச் சந்தித்து கடந்தபோது சில நல்ல விஷயங்களும் நடந்திருக்கும். உதாரணமாக, நமது ஆரோக்கியம் சிறப்பாக அமைவது, நம் குழந்தைகள் நன்கு படித்து நல்ல நிலையில் செட்டிலாகியுள்ளது போன்றவற்றைக் கூறலாம். இந்த நல்ல விஷயங்களை அடிக்கடி நன்றியுடன் நினைவு கூர்ந்து வாழ்வது, தற்போதைய ஓய்வு காலத்தில் தினசரி நடக்கும் நல்லவற்றைப் போற்றவும், நல்லவை அல்லாதவற்றைப் புறக்கணிக்கவும் உதவும்.
4. கஷ்டங்களைத் தாங்கும் திறனை வளர்த்தல்: வாழ்க்கை பூப்படுக்கை அல்ல; சவால்கள் நிறைந்தது. ஓய்வு காலத்திலும் ஆரோக்கியக் குறைபாடுகள், பணத்தேவை, தனிப்பட்ட இழப்புகள் போன்ற துன்பங்கள் வருவது சகஜம். இவற்றை நேர்மறை எண்ணங்களோடு ஏற்றுக்கொண்டு எதிர்கொள்ளத் தயாராவது முக்கியம். இவை நல்ல படிப்பினையாகவும், நம் வளர்ச்சிக்கு உதவுவதாகவும் மாறும்.
5. இயற்கையோடு இணைந்திருப்பது: விருப்பு, வெறுப்பற்றிருக்கும் ஓய்வு பெற்ற நபர்களுள் இயற்கையை ரசிப்பதில் ஆர்வம் உள்ளவர்களும் உண்டு. அமைதியாக ஓடும் ஆறும், கால நிலைக்கேற்ப மாற்றத்தை உண்டுபண்ணிக்கொள்ளும் மரங்களும் அவர்களுக்கு மன அமைதியையும், நல்ல படிப்பினையையும் கொடுக்க வல்லவை. மற்றவர்களின் பரபரப்பான ஓட்டத்திற்கிடையில் இருப்பதைத் தவிர்த்து இயற்கைச் சூழலில் சிறிது நேரம் நடந்துவிட்டு வருவது, பறவைகளின் 'கீச் கீச்' ஒலியை ரசிக்கவும், சூரிய உதயத்தைக் கண்டு களிக்கவும், குளிர்ந்த காற்று உடலைத் தழுவிச் செல்வதை உணர்ந்து அனுபவிக்கவும் உதவும்.
6. இரக்கத் தன்மையுடன் செயல்புரிதல்: ஓய்வு காலத்தில் தான் உண்டு, தனது வேலை உண்டு என்று இருந்து விடாமல் பிறரின் குறைகளைக் காது கொடுத்துக் கேட்கலாம்; கடைக்கு சென்று வருவதில் கூட சென்று உதவலாம். இவையெல்லாம் பிறருக்கு உதவியாக இருப்பதோடு மட்டுமின்றி, உதவி புரிபவரின் மனதுக்கு மகிழ்வும் நிறைவும் தரும்.
7. எளிமையைப் பின்பற்றுதல்: எளிமை என்பது குறைவாக வைத்துக்கொள்வது என்று பொருள் அல்ல. கிடைக்கும் சின்னச் சின்ன விஷயங்களையும் திருப்தியுடன் ஏற்றுக்கொண்டு மகிழ்வது. மனதுக்குப் பிடித்த உணவை உண்பது, பிடித்த புத்தகத்தைப் படிப்பது, பிடித்தமான மனிதருடன் அளவளாவுதல் போன்றவை இதில் அடங்கும்.
மேலே கூறிய ஏழு ஸ்டாயிக் பழக்க வழக்கங்களை மேற்கொள்வதால் ஒருவரின் ஓய்வு காலம் அமைதியும் அர்த்தமுள்ளதாகவும் மாறும் என்பதில் சந்தேகமில்லை.