
சில குழந்தைகள் நன்றாக படிப்பார்கள். ஆனால் அவர்களுக்கு எப்படி படிப்பதை தொடங்க வேண்டும் என்று தெரியாமல் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் எடுத்துப் போட்டுக்கொண்டு படிக்க ஆரம்பிப்பார்கள். அதனால் எதையும் சரியாக படித்துவிட முடியாது தவிப்பார்கள். அதை தவிர்த்து சுலபமாக படிப்பதை எப்படி கையாளலாம் என்பதை இப்பதிவில் காண்போம்.
படிப்பதற்கு எந்த நேரம் சரியாக ஒத்துவரும் என்று நேரத்தை கண்டுபிடித்து அதற்கு தகுந்தாற்போல் படிக்கலாம். இதில் பெற்றவர்கள் இந்த நேரத்தில் படிக்கக்கூடாது. அந்த நேரத்தில் படிக்கக் கூடாது என்று தடை உத்தரவு போடாமல் விட்டுவிடுவது நல்லது. சிலர் விடியற்காலையில் படிப்பார்கள். சிலர் இரவில் கண் விழித்து படிப்பார்கள். சிலர் சாயந்திரம் இன்னும் சில குழந்தைகள் மதியம் பள்ளி விட்டு வந்ததும் படிப்பார்கள். ஆக நேரத்தை கணக்கிடல் குழந்தையின் கையில் என்பதே சரி.
தினமும் அதே நேரத்தில் படிப்பது நல்லது. படிக்கும்போது இலக்கை அமைத்து அதை நோக்கி படிக்கவும் வேண்டும். எது கடினமோ அதை முதலில் படிக்க வேண்டும். படிக்க ஆரம்பிக்கும் முன் ப்ராஜெக்ட் வொர்க் என்றால் அதற்கு தேவையான குறிப்புகளை பார்த்து தேடி எடுத்து, ஒழுங்குபடுத்திய பின் ஆரம்பிப்பது நேரம் கழிவதைத் தவிர்த்து காலத்தோடு படித்து முடித்துவிடலாம் .படிப்பதும் எளிமையாக விளங்கும்.
ஒரே நேரத்தில் எல்லா பாடங்களையும் அதிகமாக படிக்கக் கூடாது. ஒவ்வொரு பாடத்திற்கும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி அந்த நேரத்தில் படிக்கும் பொழுது மனதில் நன்றாகப் பதியும். மறக்கவும் மறக்காது. மீள் ஆய்வு செய்வதும் எளிமையாக இருக்கும். அதிலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்து படித்துப் பாருங்கள் .அது இன்னும் படிப்பில் ஆழ்ந்த கவனத்தை தருவதாக இருக்கும்.
எதையும் திட்டம் போட்டபடியே படிக்க முயலவேண்டும். படிப்பு நேரத்தில் உங்களை யாரும் அழைக்கவோ, தொலைபேசியில் தொடர்பு கொள்ளவோ முடியாதபடி செய்து கொண்டு அதை கடைப்பிடிங்கள். படிப்பில் உதவி தேவைப்படும்போது உதவக் கூடியவர்களுடன் தேவைப்பட்டால் மட்டும் தொடர்புகொள்ளுங்கள்.
எக்காரணத்தைக் கொண்டும் மேப் ட்ராயிங் வரையும் பொழுது அம்மாவை வரைந்து தர சொல்வதோ ,அறிவியல் பாடங்களுக்கு அம்மாவை படங்கள் வரைந்து தர சொல்வது, அம்மாவிடமே அசைன்மென்ட் எழுதித் தரச்சொல்வது போன்றவற்றை தவிர்த்து விடவேண்டும். அவை அனைத்தையும் நீங்களாகவே செய்து படித்தால்தான் மனதில் நன்கு பதியும். பொது அறிவு வளரும். மொழிப் பாடங்களை படிக்கும் பொழுது சத்தம் போட்டு படித்தால் நல்ல திருத்தமாக உச்சரிப்பு வரும். கணக்கைப் போட்டு பார்ப்பதை விட சிறந்த வழி வேறு எதுவும் இல்லை.
வார முடிவில் படித்த அனைத்தையும் ஒரு முறை மீண்டும் படித்து தெளிவுபடுத்திக்கொண்டு விட்டால், அந்த மீள் ஆய்வானது பரீட்சைக்கும் உதவிகரமாக இருக்கும்.
இதுபோல் இலக்கை தீர்மானித்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தால் ஒவ்வொரு மாதமும் மாதாந்திர தேர்வுகளில் மதிப்பெண் கூடிக்கொண்டே வருவதைக் காணமுடியும். அதோடு நம் தன்னம்பிக்கையும் அதிகமாக வளரும். பொது அறிவும் கூடும்.