
பெரிய பத்திகள் (பாராக்கள்), சிக்கலான ஃபார்முலாக்கள், கடினமான சமன்பாடுகள் போன்றவற்றை மனப்பாடம் செய்யவும் அவற்றை நினைவில் வைத்துக் கொள்ளவும் நிறைய மாணவர்கள் தடுமாறுகிறார்கள். ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்கள் பாடங்களை எளிதாக மனப்பாடம் செய்யவும் அவற்றை நினைவில் வைத்துக் கொள்ளவும் சில உத்திகளை கடைப்பிடித்தார்கள். அந்தப் பழங்கால நினைவக உத்திகளைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
1. வாய் வழியாக மீண்டும் மீண்டும் ஒப்புவித்தல் (வேதபாணி)
புத்தகங்கள் அச்சடிக்கப்படாத பண்டைய காலத்தில், வாய்மொழியாக அறிவு தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டது. உதாரணமாக பண்டைய இந்திய குருக்கள் சமஸ்கிருத மந்திரங்கள், மற்றும் சிக்கலான நூல்களை ஒன்றிரண்டு முறை அல்ல, பலமுறை சத்தமாக தாள லயத்துடன் திரும்பத் திரும்ப வாசித்தார்கள். இதைக் கேட்கும் மாணவர்களுக்கும் செவிப்புலன் வழியாக உள்நுழைந்து நினைவாற்றலை மேம்படுத்தியது.
தற்போதைய மாணவர்கள் இந்த டெக்னிக்கைப் பயன்படுத்தி குறிப்புகள், பார்முலாக்கள் போன்றவற்றை சத்தமாக வாய்விட்டு பலமுறை படிக்க வேண்டும். இதனால் மிக எளிதில் மனப்பாடம் ஆவதோடு, நினைவில் வைத்துக் கொள்ளவும் உதவும்.
2. பாடல்கள்/ரைம்கள்:
பண்டைய இந்தியர்கள், கிரேக்கர்கள் நினைவாற்றல் நுட்பங்களை அறிந்த வல்லுனர்களாக இருந்தனர். பாடங்களை அழகான பாடலாக மாற்றம் செய்தனர். சமஸ்கிருத வசனங்கள், லத்தீன், கிரேக்க மந்திரங்களை மழலைக் குழந்தைகள் பாடும் ரைம்ஸ் போல மாற்றினர். தாளலயத்துடன் பாடப்படும் பாடங்களை மாணவர்கள் மிக எளிதில் மனப்பாடம் செய்தனர்.
3. தியானப் பயிற்சி:
பண்டைய மாணவர்கள் சிறிது நேரம் தியானம் செய்துவிட்டு, பாடத்தை ஒருமுறை படித்து பின் அதன் பொருளைப் பற்றி தியானம் செய்வதுபோல ஆழ்ந்து யோசித்தனர். அவர்களால் மிக எளிதில் கடினமான விஷயங்களை கூட மனப்பாடம் செய்து, அதை நினைவில் வைத்துக் கொள்ளவும் முடிந்தது. இன்றைய மாணவர்களும் இந்த டெக்னிக்கை பயன்படுத்தலாம். சிறிது நேரம் தியானம் செய்யும்போது மனம் ஒருமைப்பாடு அடையும். சிந்தை தெளிவாகி, மனம் ஒரே புள்ளியில் குவியும். அந்த நேரத்தில் பாடத்தை படித்து அமைதியாக அதைப்பற்றி அசை போட்டு சிந்திக்கும்போது பாடம் மிக எளிதில் புரியும்.
4. கதைகள்:
மனித மூளை கதைகளை மிகச் சிறப்பாக நினைவில் வைத்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பண்டைய கலாச்சாரங்கள் சிக்கலான அறிவை பரப்புவதற்கும், வேறுபட்ட தகவல்களை இணைப்பதற்கும் கதை சொல்லலை பயன்படுத்தினர். பாடத்தை கற்பனை கதையாக மாற்றினர். கடினமான பாடங்கள், வரலாற்று நிகழ்வுகளுக்கு கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக ஒரு வசீகரமான கதையை உருவாக்கி படிக்கும்போது எளிதில் மனப்பாடம் ஆகி, ஞாபகத்தில் இருக்கும்.
5. லோசி அல்லது நினைவக அரண்மனை:
இது பண்டைய கிரீஸ் மற்றும் ரோமில் பயன்படுத்தப்பட்ட பண்டைய நினைவக நுட்பம் ஆகும். மிகவும் பழக்கமான ஒரு இடத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். அது வீடு, படிக்கும் அறை அல்லது பள்ளியாக இருக்கலாம். அதை மனதளவில் கற்பனை செய்து பார்க்க வேண்டும். அதில் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு தகவலை சேமிக்க வேண்டும்.
புத்தக அலமாரியில் முக்கிய தேதிகளையும், ஜன்னல் அருகே வரலாற்று நபர்களையும், மேஜையில் அறிவியல் பார்முலாக்களையும் வைக்கலாம். அவற்றை நினைவுபடுத்திக் கொள்ளும்போது மனக்கண்ணில் அந்த அறையின் வழியாக நடந்து செல்வதுபோல நினைத்துப் பார்க்க வேண்டும். அப்போது அந்த தகவல்கள் விரைவில் ஞாபகத்துக்கு வரும். இந்த 5 நுட்பங்களை பயன்படுத்தி மாணவர்கள் தங்களது பாடங்களை விரைவாக மனப்பாடம் செய்து நினைவிலும் வைத்திருக்க முடியும்.