
நம் வீடுகளின் உட்புறத்தை நன்றாக சுத்தம் செய்து பராமரித்து வைத்துக் கொள்வோம். ஆனால், வீட்டின் மேல் மாடி சுவர், தொட்டியின் உட்புறம், கிணறுகளின் பக்க சுவர்களில் வளரும் செடி, கொடிகளை அகற்ற தவறி விடுவோம். அவை எட்டாத உயரத்தில் இருப்பதால் நம்மால் முடியாது என அவற்றை விட்டு விடுவோம்.
கிராமப்புற, டவுன் வீடுகளில் என்னதான் சுண்ணாம்பு, பெயிண்ட் என அடித்தாலும் பெயிண்ட் கலர் மாறி, ஆங்காங்கே சுவர், சிமெண்ட் இடைவெளியில் செடி முளைக்க ஆரம்பித்து விடும். அரச மரம், ஆல மரம் போன்றவை பெரிய மரமாக மண்ணில் வளர வேண்டியவை. பறவைகளின் எச்சம் காரணமாக அவற்றின் கொட்டைகள், விதைகளை ஆங்காங்கே போடுவதால் சுவரின் இடுக்குகளில் தங்கி அவை செடியாக வளர ஆரம்பிக்கும்.
ஆரம்பத்திலேயே இதைப் பார்த்து செடியாக இருக்கும்போதே வேரோடு எடுத்து விட்டால் பிரச்னை இல்லை. இல்லையெனில், அவை வளர்ந்து சுவரின் இடுக்குகளில் வேர் விட ஆரம்பித்து விடும். இது கட்டடத்தின் ஸ்திரத்தன்மையை பாதிப்பதோடு, உட்புறம் ஈரம் காத்து பாழாக்கும். கட்டடத்தின் இரும்பு கம்பிகள் துருப்பிடித்தால் நாளடைவில் கட்டடம் வலுவிழந்து போகும்.
ஆகவே, ஆரம்பத்தில் சிறு செடியாக இருக்கையிலேயே கையால் பிடுங்கி விட வேண்டும். அரிவாள் கொண்டு வேர் வரை வெட்டி எடுத்து விட மேற்கொண்டு அவை வளராது. விரிசலில் ஒயிட் சிமெண்ட் அல்லது சிமெண்ட் கலவையாக பூசி விட, அந்தச் செடி மீண்டும் வளராது.
கடையில் கிடைக்கும் கெமிக்கல் அல்லது வீட்டில் உள்ள ப்ளீச்சிங் பவுடரைக் கொண்டு பூசி விட அந்தச் செடி மீண்டும் வளராது. வெட்ட முடியாத அளவுக்கு அது வளர்ந்திருந்தால் கட்டட பொறியாளர் அல்லது சுவர்களில் காணப்படும் வெடிப்பு, பூச்சி அரிப்பை சரிசெய்யும் நிபுணர்களைக் கொண்டு அதை சரிசெய்ய வேண்டியது அவசியம்.
அவர்கள் அதற்குத் தகுந்த உபகரணங்கள் மற்றும் ஆட்களைக் கொண்டு செடிகளை வேரோடு எடுத்து விட்டு கெமிக்கல் கலவை கொண்டு பூசி விடுவார்கள். கட்டடத்தில் நீர் உட்புகாதவண்ணம் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். சமீபத்தில் எங்கள் பழைய வீட்டின் மேலே வளர்ந்த செடியால் நீர்க்கசிவு, ஓதங்காத்தல் பிரச்னை இருந்தது. அதை இன்ஜினியர் வைத்து சரிசெய்த போது இதையெல்லாம் அறிய முடிந்தது. தற்போது பெய்த மழையால் எந்தப் பிரச்னையும் இல்லை.