
இன்றைய நவீனக் காலத்துக்கேற்ப அப்டேட்டாக (Update) இருக்க விரும்புவர்கள் முதலில் தங்கள் ஆடைகளில் தான் கவனம் செலுத்துவார்கள். அதற்கேற்ப டிரெண்டிங் ஆடைகளைத் தேர்வு செய்து பயன்படுத்துவார்கள். இவ்வளவு நாட்கள் உடுத்திய பழைய ஆடைகளின் நிலைமை? ஆடைகள் பழையதாக மாறுவதை எவ்வாறு கண்டறியலாம்?
மற்ற பொருட்களைப்போல் துணிகளுக்கு காலாவதி தேதி என்று கிடையாது. ஆனால் மங்குவது (Fade), தேய்மானங்கள் (wear and tear), அதன் தையல் பிரிவது அல்லது பழைய ஸ்டைலாக நமக்குத் தோன்றும்போது அந்த ஆடைகள் பழையதாகத் தெரிகிறது. சில நேரங்களில் இனி உங்கள் வாழ்க்கை முறைக்கு இந்த ஆடைகள் பொருந்தாது என்பதும் நமக்குப் பழையதாகத் தோன்ற வைக்கும்.
பயன்படுத்தும் ஆடைகள் சலிப்பாக தோன்றுகிறதா?
1. ஜோடியை மாற்றிப் பாருங்கள் (Matching): வித்தியாசமான நிறங்களிலான இணை ஆடைகளுக்கு நாம் ஏற்கெனவே உடுத்திய ஆடைகள் பொருந்தலாம். இது சில நேரங்களில் நம் தோற்றத்தையே மெருகேற்றலாம்.
2. மறு சாயம் (Repaint): ஆடைக்கு ஏற்ற சாயங்களை மறுபடியும் அதில் உபயோகிக்கும் போது பழைய ஆடை என்ற பார்வையை மாற்றிவிடும்.
3. நவீனப் போக்குகளுக்கு ஏற்றவாறு மாற்றப் பாருங்கள்: வெட்டுதல் (cropping), பொத்தான்களைச் சேர்ப்பது (adding buttons) அல்லது ஸ்லீவ்களை மாற்றி அமைப்பது (modifying sleeves) போன்ற சிறிய மாற்றங்கள் அவற்றைப் புத்தம் புதிதாக உணர வைக்கும்.
4. ஆடைகளைப் பரிமாறிக் கொள்ளுங்கள் (clothing swap): பல நகரங்களில் சேதப்படாத ஆடைகளைப் பரிமாறிக் கொள்ளும் வசதிகள் இருக்கின்றன.
சேதமடைந்த ஆடைகளை எப்படி ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தலாம்?
1. கைவினை: பைகள், தலையணை உறைகள் போல் மாற்றிக் கொள்ளலாம்.
2. வீட்டு உபயோகப் பொருட்கள்: சுத்தம் செய்வதற்கு, மெத்தைகளில் பஞ்சுகளுக்கு மாற்றாக இந்தக் கிழிந்த துணிகளை உபயோகப்படுத்தலாம்..
3. உரமாகக்கூட மாற்றலாம்: பருத்தி (Cotton), கைத்தறி (linen) போன்ற துணிகளை சிறிய சிறியதாக வெட்டி மற்ற இயற்கை உரங்களோடு சேர்த்து மண்ணில் பயன்படுத்தலாம்.
பழைய ஆடைகளின் விற்பனை தளங்கள்:
ஆன்லைன் தளங்கள்: OLX, ThredUp, Poshmark India மற்றும் Instagram, thrift போன்ற வலைத்தளங்கள் உங்கள் சேதமடையாத பழைய ஆடைகளை நேரடியாக விற்க அனுமதிக்கின்றன.
Thrift Stores & Flea Markets: பெருநகரங்களில் இயங்கும் இது போன்ற கடைகள் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்ட ஆடைகளை வாங்குகின்றன.
Boutique கடைகள்: பல பொடிக்குகள் பயன்படுத்தப்பட்ட ஆடைகளை ஏற்றுக்கொண்டு அதன் விற்பனையில் ஒரு சதவீதத்தை நமக்கு வழங்குகின்றன.
பழைய ஆடைகளைக் கவனிக்காமல் விட்டால் என்ன ஆகும்?
பழைய ஆடைகள் பல வருடங்களாக வீட்டில் வைத்திருப்பது குப்பைகளாகச் சேகரித்து வைப்பதற்கு வழிவகுக்கும். இதனால் வீட்டின் சில பகுதிகள் அழுக்காகவும், நிர்வகிக்க கடினமாகவும் மாறும். காலப்போக்கில் துணிகள் சிதைந்து போகலாம், தூசி சேரலாம் அல்லது கரையான் போன்ற பூச்சிகளை ஈர்க்கலாம்.
பழைய ஆடைகளை உபயோகிக்காமல் புறக்கணிக்கும் போது அவை பெரும்பாலும் குப்பைக் கிடங்குகளாக மாறி ஜவுளி கழிவுகளுக்குப் பங்களிக்கின்றன. இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் 1 மில்லியன் டன்களுக்கும் அதிகமான ஜவுளி கழிவுகள் உருவாகின்றன. எனவே, மாசுபாட்டிற்கு பங்களிப்பதற்குப் பதிலாக மறுபயன்பாடு, நன்கொடையாகவோ அல்லது விற்பனை செய்வது அனைவருக்கும் நன்மையைத் தரும்.