கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது... உங்கள் வீட்டைக் காக்கும் 6 ரகசியப் பொருட்கள் இதோ!

items believed to shield you from the evil eye
items believed to shield you from the evil eye
Published on

நாம் நன்றாகப் புது ஆடை அணிந்து வெளியே சென்றாலோ, ஒரு புதிய வண்டி வாங்கினாலோ மற்றவர்கள் ஒருவிதமாகப் பார்ப்பதை நாம் உணர்ந்திருப்போம். அந்தப் பொறாமைப் பார்வையைத் தான் நாம் கண் திருஷ்டி என்று கூறுகிறோம். திடீரென ஏற்படும் தலைவலி, உடல் சோர்வு, வீணான சண்டை சச்சரவுகள் எல்லாவற்றுக்கும் காரணம் இந்தத் திருஷ்டி தான் என்று பெரியவர்கள் சொல்வார்கள். 

அறிவியல் இதை முழுமையாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், உளவியல் ரீதியாக மற்றவர்களின் நெகட்டிவ் எனர்ஜி நம்மைப் பாதிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த எதிர்மறை ஆற்றலில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள, பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்படும் 6 முக்கியமான பொருட்களைப் பற்றி பார்க்கலாம் வாங்க.

1. கல் உப்பு!

பழங்காலம் முதலே கல் உப்புக்கு கெட்ட சக்திகளை ஈர்க்கும் தன்மை இருப்பதாக ஒரு நம்பிக்கை உண்டு. உங்கள் வீட்டில் யாருக்காவது திருஷ்டி பட்டுவிட்டது என்று தோன்றினால், உடனே ஒரு கைப்பிடி கல் உப்பை எடுத்துக் கொள்ளுங்கள். குடும்ப உறுப்பினர்களை கிழக்கு முகமாக அமரவைத்து, தலையைச் சுற்றி வலது மற்றும் இடதுபுறமாக மூன்று முறை சுற்றி தண்ணீரில் கரைத்துவிடுவது நம் ஊர் வழக்கம். இது கண் திருஷ்டியை மட்டுமல்லாமல், உடலில் உள்ள எதிர்மறை ஆற்றலையும் முழுமையாக நீக்கிவிடும்.

2. எலுமிச்சை மற்றும் பச்சை மிளகாய்!

புதிதாக வண்டி வாங்கினாலோ அல்லது புதுக்கடை திறந்தாலோ, முதலில் நாம் தேடுவது இந்த எலுமிச்சை மற்றும் மிளகாயைத்தான். ஒரு கருப்புக் கயிற்றில் இவற்றைச் சேர்த்து வாசல் படியில் தொங்கவிடுவதால், வீட்டுக்குள் நுழையும் கெட்ட எண்ணங்கள் வாசலோடு திரும்பிவிடும் என்பது ஐதீகம். மேலும், இவற்றிலிருந்து வெளிவரும் வாசம் காற்றில் உள்ள கிருமிகளை அழிக்கும் தன்மையும் கொண்டது.

3. கருப்புக் கயிறு!

இது ரொம்பவே சிம்பிளான, ஆனால் மிகவும் பவர்ஃபுல்லான ஒரு ட்ரிக். பிறந்த குழந்தையிலிருந்து பெரியவர்கள் வரை பலரும் கைகளிலோ அல்லது கால்களிலோ கருப்புக் கயிறு கட்டுவதைப் பார்த்திருப்போம். கருப்பு நிறம் என்பது மற்றவர்களின் தீய பார்வையைத் தன்னுள் ஈர்த்து, நம்மை நோக்கி வரும் கெட்ட அதிர்வலையைத் தடுத்து நிறுத்தும் ஒரு கவசமாகச் செயல்படுகிறது.

இதையும் படியுங்கள்:
கற்றாழை Vs நெல்லிக்காய்: தலைமுடிக்கு எது நல்லது? 
items believed to shield you from the evil eye

4. நீல நிறக் கண் கல்!

இப்போதெல்லாம் பலரது கழுத்திலும், வீட்டு வாசலிலும், கார் கண்ணாடியிலும் நீல நிறத்தில் ஒரு கண் வரைந்த படிகக் கல்லைப் பார்க்க முடிகிறது. துருக்கி போன்ற நாடுகளில் உருவான இது, தற்போது நம்மூரிலும் ரொம்பவே ட்ரெண்ட் ஆகிவிட்டது. பிறரின் பொறாமைப் பார்வையை அந்த நீலக் கண் தன்னுள் இழுத்துக் கொண்டு, அதை அப்படியே திருப்பி அனுப்பிவிடும் என்பது நம்பிக்கை.

5. படிகாரம்!

படிகாரக் கல்லை ஒரு கருப்புத் துணியில் கட்டி வீட்டின் முன் தொங்கவிடுவது ஒரு சிறப்பான பாரம்பரிய வழக்கம். வீட்டிற்கு வரும் நபர்களின் பொறாமைப் பார்வை இந்தக் கல்லின் மீது படும்போது, அது அந்த எண்ணங்களை ஈர்த்துக்கொள்ளும். திருஷ்டி அதிகமாக இருந்தால், ஒரு கட்டத்தில் படிகாரம் தானாகவே வெடித்துச் சிதறிவிடும் என்று பாட்டிகள் சொல்லக் கேட்டிருப்போம்.

இதையும் படியுங்கள்:
இளமை மாறாத சருமத்திற்கு 'கற்றாழை பவுடர்' - ஒரு இயற்கை அதிசயம்!
items believed to shield you from the evil eye

6. கற்றாழை!

வாசல் படியில் முள் நிறைந்த கற்றாழையை வேரோடு கட்டித் தொங்கவிடுவது பலரது வீடுகளில் இன்றும் நடக்கும் ஒரு விஷயம். இது பார்ப்பதற்குச் சாதாரணமாகத் தோன்றினாலும், வீட்டைச் சுற்றி ஒரு பெரிய பாதுகாப்பு வளையத்தை உருவாக்குகிறது. கற்றாழை பல மாதங்கள் தண்ணீர் இல்லாமல் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி உயிர்வாழும் தன்மை கொண்டது. அதே போல வீட்டின் மீது விழும் கண் திருஷ்டியையும் இது முழுமையாக உறிஞ்சிவிடும்.

நம் முன்னோர்கள் காரணமில்லாமல் எதையும் செய்யவில்லை என்பதைப் புரிந்துகொண்டு, நமது வீட்டின் நிம்மதிக்காக இந்தச் சின்னச் சின்ன விஷயங்களைப் பின்பற்றுவதில் எந்தத் தவறும் இல்லை. எதிர்மறை எண்ணங்களை விலக்கி நேர்மறையாக வாழ்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com